தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 14 maart 2013

வன்னி மாவட்டத்தில் காணிகளின்றி தவிக்கும் இந்திய தமிழருக்கு நீதி கிடைக்க வேண்டும்!- பிரபா கணேசன்!


1977, 1983 இனக்கலவரங்களின் போது களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களிலிருந்து வவுனியா மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்த இந்திய வம்சாவளி தமிழர்கள் இன்று காணிகளின்றி தவிக்கின்றனர்.
பல தசாப்தங்களாக வன்னி மாவட்டத்தில் வாழும் இவர்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும் என மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்தின வீரகோனிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது,
அண்மையில் வவுனியா 58வது இராணுவ படைப்பிரிவு தலைமையகத்தில் மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ண வீரகோனுடனான சந்திப்பின் போது வன்னி மாவட்டத்தில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களின் காணி பிரச்சினை சம்பந்தமாக தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
பல வருடங்களுக்கு முன் இடம்பெற்ற இனக்கலவரத்தின் போது வவுனியா மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்த இவர்களை விடுதலைப்புலிகள் அரவணைத்து எல்லைக் கிராமங்களில் இவர்களுக்கு நிலங்களை வழங்கியிருந்தனர். பின்பு இவர்கள் நிரந்தரமாக தமது தொழில், பிள்ளைகளின் கல்வி போன்றவற்றை பெற்றனர்.
இன்று யுத்தத்திற்கு பின்னர் எல்லைக் கிராமங்களை விட்டு யுத்தத்தினால் ஓடிச் சென்ற காணிச் சொந்தக்காரர்கள் விடுதலைப்புலிகளால் இவர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களை மீள்குடியேற்ற அமைச்சின் மூலமாக மீளப்பெற்றுள்ளனர்.
அதேநேரம் எவ்வித உறுதிப்பத்திரமுமின்றி விடுதலைப்புலிகளால் காணிகளில் அமர்த்தப்பட்ட இந்திய வம்சாவளி தமிழர்களை குறிப்பாக முள்ளிவாய்க்கால் வரை சென்று வந்த இவர்களை மீள்குடியேற்ற அமைச்சு புறக்கணித்து வருகின்றது.
காணி உறுதியற்ற இவர்கள் இன்று வன்னி மாவட்டத்தில் நிரந்தர பிரஜைகளாக உள்ளனர். இந்திய வம்சாவளியினர் என்ற அடையாளத்தை மறந்து இன்று இவர்கள் வடமாகாணத் தமிழர்களாக மாறியுள்ளனர்.
இவர்களுக்கு நியாயமான அரச காணிகளை ஒதுக்கித் தர வேண்டும் என்று மீள்குடியேற்ற அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன். காணிகளுக்கு பொறுப்பான அமைச்சர் ஜனகபண்டார தென்னக்கோனுடனும் கலந்துரையாடவுள்ளேன்.
வவுனியா மாவட்டத்தில் வாழும் இவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளை நிச்சயமாக செய்து தருவதாக மீள்குடியேற்ற அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
மீள்குடியேற்றங்கள் முழுமையான முறையிலே இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கும் தமிழ் அரசியல்வாதிகள் இன்று அநாதரவாக வன்னி மாவட்டத்திலே கைவிடப்பட்டிருக்கும் இந்திய வம்சாவளியைச் சார்ந்த மக்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். 
http://news.lankasri.com/show-RUmryDSYNYgr4.html

Geen opmerkingen:

Een reactie posten