தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 10 maart 2013

டெசோ அமைப்பின் சார்பில் வேலைநிறுத்தம்! முழு ஒத்துழைப்பு வழங்குமாறு திருமாவளவன் வேண்டுகோள்


மௌனமாக பார்த்து கொண்டிருக்க முடியாது: டெசோ திடீர் எச்சரிக்கை!
ஈழ பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய அரசின் போக்கினைத் தொடர்ந்து மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்க இயலாத நிலை நெருங்கிக் கொண்டுள்ளதாகவும், எக்காரணம் கொண்டும் டெசோ தன் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்காது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெசோ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
7-3-2013 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற டெசோ கருத்தரங்கிற்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகச் சில ஊடகங்கள் எழுதி வருகின்றன. நாம் முன்வைத்த எந்தக் கோரிக்கையிலிருந்தும் பின்வாங்காத வரை நமக்கு எந்தப் பின்னடைவும் ஏற்படவில்லை.
நாம் பல்வேறு கட்சிகளை அக்கருத்தரங்கிற்கு அழைத்திருந்தோம். இந்திய தேசிய காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் கருத்தரங்கில் பங்கேற்றன.
இவர்கள் அனைவரும் சென்னையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 12ஆம் நாள் நடைபெற்ற டெசோ மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதுடெல்லி கருத்தரங்கில் சர்வதேச பொதுமன்னிப்பு அவையின் இந்தியச் சார்பாளர், அனந்த பத்மநாபன் கலந்து கொண்டார்.
கூடுதலாக மனித உரிமை ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் கலந்து கொண்டு, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உரையாற்றினார்.
உண்மை இவ்வாறிருக்க, டெசோ கருத்தரங்கத்திற்குப் பின்னடைவு என்பது எவ்விதத்தில் பொருந்தும்? எனினும், காங்கிரஸ் கட்சியும் இந்திய அரசும் ஒவ்வொரு நாளும் ஈழப்பிரச்சினையில் வெவ்வேறு மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்து வருவது கவலை தருவதாக உள்ளது.
7-3-2013 அன்று மக்களவையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர், ஐ.நா. அவையில் வரவிருக்கும் அமெரிக்க தீர்மானம் குறித்து உறுதியாகவும் தெளிவாகவும் யாதொன்றும் கூறவில்லை.
இதனை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் அவையிலிருந்து வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து, அதிமுக, பா.ஜ.க. ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
ஆனால், அன்று மாலை டெசோ கருத்தரங்கில் கலந்து கொண்ட இந்திய தேசிய காங்கிரசின் பொதுச்செயலாளர் குலாம்நபி ஆசாத், அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்போம் என்பதாக உரையாற்றினார்.
ஆனால், 8-3-2013 அன்று மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைமீது நன்றி தெரிவித்து உரையாற்றிய, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எந்த உறுதியும் வழங்காமல், தமிழ்ஈழத் தலைவர்களோடு இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய அரசின் இப்போக்கினைத் தொடர்ந்து மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்க இயலாத நிலை நெருங்கிக் கொண்டுள்ளது. எக்காரணம் கொண்டும் டெசோ தன் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்காது என்பதையும் இத்தருணத்தில் வெளிப்படுத்துகின்றோம்.
எனவே, இந்திய அரசுக்கு மேலும் அழுத்தம் தர பொது வேலைநிறுத்தம் வருகிற 12ம் நாள் நடைபெற்றே தீரும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
அவ்வேலை நிறுத்தத்திற்கு ஒட்டுமொத்தத் தமிழினமும் ஆதரவு தர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அன்போடு வேண்டிக்கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.



ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக அமெரிக்க அரசு முன்மொழியவுள்ள வரைவுத் தீர்மானத்தில் சுயேட்சையான சர்வதேச விசாரணை வேண்டும் என்கிற திருத்தத்தைக் கொண்டுவரும்படி இந்திய அரசை வலியுறுத்தி டெசோ அமைப்பின் சார்பில் எதிர்வரும் 12ம் திகதி தமிழகம் தழுவிய அளவில் பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 உறுப்பு நாடுகளில் ஏறத்தாழ 30 நாடுகள் சிங்கள அரசுக்கு எதிராக அமெரிக்கா முன்மொழிந்துள்ள தீர்மானத்தை ஆதரிப்பதாக வெளிப்படையாக அறிவித்துள்ளன. ஆனால் இந்திய அரசு தம்முடைய உறுதியான நிலைப்பாட்டை இன்னும் வெளிப்படுத்தவில்லை.
இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்ற விவாதத்தின்போது தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அகில இந்திய அளவிலான பிற கட்சித் தலைவர்களும் உறுப்பினர்களும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினர்.
இந்திய அரசின் சிங்கள ஆதரவு நடவடிக்கைகளை சுட்டிக்காட்டியதுடன் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அத்துடன், மக்களவையில் வெளிவிவகாரத் துறை அமைச்சர் அளித்த பதிலுரை மனநிறைவு அளிக்கவில்லை எனக் கூறி விடுதலைச் சிறுத்தைகள், திமுக, அதிமுக, தேசிய கட்சிகளான பாஜக மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் வெளிநடப்புச் செய்தனர். இதன் பின்னரும் இந்திய அரசு தன்னுடைய நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தவில்லை.
ஆகவே, இந்திய அரசு சிங்களவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுவிடக்கூடாது என்கிற அடிப்படையிலும், அமெரிக்கா முன்மொழியவுள்ள தீர்மானத்தை ஆதரிப்பதுடன், சர்வதேச விசாரணைக்கான திருத்தத்தையும் கொண்டுவர வேண்டுமென வற்புறுத்துகிற வகையிலும் இந்தப் பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
கட்சி மாறுபாடுகளின்றி தமிழக மக்கள் அனைவரும், குறிப்பாக வணிகர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இந்தப் பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
அமைதியான முறையிலும் அறவழியிலும் நடைபெறவுள்ள இந்த அறப்போராட்டத்தில் தமிழக மக்கள் அனைவரும் ஒற்றுமையாய் இருக்கிறோம் என்பதை உணர்த்தும் வகையில் ஈழத் தமிழர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு முழுமையாக ஆதரவு அளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
பொது வேலைநிறுத்தத்தின் மூலம் இந்திய அரசை தமிழினத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொள்ள வைப்பது சர்வதேச சமூக அரங்கில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஒரு சூழலை உருவாக்கும்.
ஆகவே, இந்தப் பொது வேலைநிறுத்தத்தை ஓர் இயக்கத்தின் போராட்டமாகக் கருதாமல் ஓர் இனத்தின் மீட்சிக்கான போராட்டமாகக் கருதி அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் என தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten