யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை பகுதியில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் 160 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் பல்வேறு குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். 40 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் 11 பேர் ஏற்கனவே தொடுக்கப்பட்ட வழக்கிற்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படாத நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் இன்றும் நாளையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொலைபேசி மூலம் கப்பம் கோரும் சம்பவங்கள் அதிகரிப்பு
தொலைபேசி ஊடாக கொழும்பு பகுதிகளில் உள்ள வர்த்தகர்கள் உள்ளிட்ட பொது மக்களுக்கு விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸ ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் அண்மைக்காலமாக தொலைபேசிகளின் ஊடாக அச்சுறுத்தி கப்பம் கோரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
சிலர் அச்சுறுத்தலுக்கு பயந்து பணத்தை வழங்குவதுடன், பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கவும் மறுக்கின்றனர். இந்த நிலையில் அவ்வாறு கப்பம் கோரல் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
லங்கா ஐ.ஓ.சி மீண்டும் தரமற்ற எரிபொருள் இறக்குமதி
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் மீண்டும் தரமற்ற எரிபொருளை இறக்குமதி செய்திருப்பதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குற்றம் சுமத்தியுள்ளது.
நேற்று மாலை இவ்வாறு 16000 மெற்றிக் தொன் திருகோணமலை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது உரிய தரத்துக்கு உட்பட்டதாக இல்லை என்று தங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இது தொடர்பில் விசேட பரிசீலனை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் கொழும்பு துறைமுகத்தின் ஊடாக இறக்குமதி செய்திருந்த 5000 மெற்றிக் தொன் எரிபொருள் உரிய தரமற்றிருப்பாக கூறி தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten