இந்த நாட்டில் பௌத்த மதம் தவிர்ந்த ஏனைய மத உரிமைகளுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் இருப்பதையே அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் பௌத்த கடும் போக்காளர்களின் நடவடிக்கைகள் வெளிப்படுத்துவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்
மட்டக்களப்பு கிரான்குளம் கணபதிப்பிள்ளையார் ஆலய மடப்பள்ளி மற்றும் அலுவலக கட்டட அடிக்கல் நடும் நிகழ்வில் முதன்மை அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆலய தலைவர் எ.குணலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
அபிவிருத்திகளைச் செய்வதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமென அரசாங்கம் நினைக்கிறது. ஆனால் இனங்களிடையே மதங்களுடையே முரண்பாடு நிலவுமானால் அந்த அபிவிருத்தியினால் எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை.
தற்போது ஜெனிவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள பேரவைக் கூட்டத்தில் இலங்கை விவகாரம் தொடர்பாக பலரும் பல்வேறு விதமாக பேசிக்கொள்கிறார்கள்.
கடந்த ஆண்டு ஜெனீவா மனித உரிமை பேரவைக் கூட்டம் நடைபெற்ற போது முஸ்லிம்கள் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு குறிப்பாக அரபு நாடுகளைக் கேட்டிருந்தார்கள் ஆனால் தற்போது முஸ்லிம்கள் கூட தமது மத உரிமையைப் பாதுகாப்பதற்காகப் போராடுகிறர்கள்.
இந்துக்கள் கடந்த வருடம் கார்த்திகை தீப நாளைக் கூட கொண்டாட முடியாத நிலை காணப்பட்டது. எமது தாயக பூமியில் இந்து ஆலயங்கள் இருந்த இடங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன.
தெற்கிலே சில கத்தோலிக்க தேவாலயங்கள் தாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பௌத்த மதம் இல்லாத ஏனைய மதத்தினர் தமது மத அனுஷ்டானங்களை செய்வதில் பல சாவால்களை எதிர் நோக்குகின்றனர்.
கிழக்கு மாகாண சபையின் தற்போதைய அரசாங்கம் தனித்தோ அல்லது கூட்டாகவோ ஆட்சி அதிகாரத்தை வைத்திருக்கும் வரை அது சுதந்திரமாக இயங்கும் என நாம் எதிர்பார்க்க முடியாது.
கடந்த மாகாண சபை ஆட்சியைப் போன்று தான் தற்போதைய கிழக்கு மாகாண சபை ஆட்சியும் பொம்மை ஆட்சியாக உள்ளது. மத்திய அரசாங்கத்தின் கையில் “றிமோட்கொன்றோல்” ஆளுநரின் கையில் “மூக்கணங்கயிறு” மாகாண சபை சுதந்திரமாக இயங்க முடியாத நிலையில் உள்ளதாக சபையிலும் ஊடகங்களிலும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதான் கிழக்கு மாகாண சபையின் இன்றைய நிலை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனித்தோ அல்லது கூட்டாகவே ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது” என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten