1956 ம் ஆண்டிலிருந்து 60 வருடங்களாக இலங்கையில் தமிழ் இனம் சிந்திய இரத்தம், இழந்த உயிர்கள், உடமைகள் சொத்துக்கள் எண்ணி முடியாது.
உச்சகட்டமாக 2009 ம் ஆண்டில் கடைசி யுத்தம் நடந்தபோது உயிரோடு புதைக்கப்பட்ட உடல்கள் எத்தனையாயிரம் என்று யாருக்குமே சரியான கணக்கு தெரியாது.
பாலகர், சிறுவர், நோயாளிகள் வலதுகுறைந்தோர் முதியோர் பெண்கள் என தப்பிக்க முடியாதவர்கள் மெளனமாக மடிந்து போனார்கள். இது எந்த இனம் தமிழினம் நம் இனம்.
ஏன் நம் இனம் என அழுத்தி சொல்ல வேண்டும். தமிழர்களுக்கு இன.உணர்வு இருக்கிறதா? என ஒவ்வொரு தமிழனும் தன்னைதானே கேட்கவேண்டும் என்பதற்காகவே. என்றால் ஆயிரமாயிரமுயிர்கள் துடிக்கதுடிக்க செத்து குண்டு மழைகளால் புதையுண்டு போனார்கள்.
வடகிழக்கில் வாழும் ஒரு பகுதியினர் இது எங்கேயோ ஒரு நாட்டில் நடந்த சம்பவம்போல நினைத்து கொண்டு எம்மினத்தை குழிதோண்டிப் புதைத்தவர்களுக்கே ஆதரவு வழங்குகிற துர்ப்பாக்கியநிலை எங்கள் இனத்தில் மட்டுமே இருக்க முடியும்.
வடகிழக்கு மாகாணசபை தேர்தல்களில் வடக்கில் 6 பிரதிநிதித்துவத்தையும் கிழக்கில் 4 பிரதிநிதித்துவத்தையும் அரசுக்கும் அரச அடிவருடிகளுக்கும் வழங்கியுள்ளார்கள்.
இதுகுறைந்த எண்ணிக்கையாயினும் இதைக்கூட வழங்காது எமது ஒற்றுமையினை வெளிக்காட்டியிருக்க முடியும்.
இதன்முலம் வாக்களித்த தமிழர்கள் எமது இனத்திற்கு துரோகம் செய்துள்ளார்கள். அபிவிருத்திக்காக வாக்களிப்போம் என்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் அபிவிருத்தி தேவைதான் உரிமை அதை விட முக்கியம்.
வடகிழக்கை தங்கள் ஆதிக்கத்தின் கீழ்வைத்திருப்பவர்கள் அவற்றை அபிவிருத்தி செய்ய வேண்டியது அவர்களுடைய கடமை. இலங்கையின் மற்றப் பகுதிகளைப் போல் அபிவிருத்தி செய்ய முடியாவிட்டால் தமது ஆதிக்கத்திலிருந்து விட்டுவிட வேண்டும்.
கடந்த தமிழ்நாட்டு சட்டசபை தேர்தலின்போது நாம் தமிழர்கட்சி ஒருங்கிணைப்பாளர் பேசும் போது பணம் தருவார்கள் வாங்குங்கள். அது உங்கள் பணம். ஆனால் வாக்கை மட்டும் தமிழ் இனத்தை கருவறுத்தவர்களுக்கு ஆதரவழித்த காங்கிரசுக்கோ, தி.மு.க. வுக்கோ மானமுள்ள தமிழன் தமிழ் தாய்க்கு பிறந்திருந்தால் வாக்குபோடக்கூடாது என்று பிரச்சாரம் செய்தார்.
விளைவு காங்கிரஸ் கட்டுப்பணத்தை இழந்தது. தமிழர்களின் தலைவன் எனமார்தட்டிய கருணாநிதி எதிர்க்கட்சியாக கூடவர முடியாத அளவுக்கு படுதோல்வியடைந்தார். இது ஏன் நம்மால் முடியாது என வடகிழக்கிலுள்ள ஒவ்வொரு தமிழனும் தன்னைத்தானே கேட்கவேண்டிய கேள்வி.
தமிழனாக இருந்தால் நியாயத் தீர்ப்புக்கான நாள் நெருங்கி வருகிறது. அதுதான் ஜனாதிபதித் தேர்தல்.
2005 ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் விடுதலைப் புலிகளை தந்திரமாக ஏமாற்றி தமிழர்களை தங்களிற்கு வாக்களிக்க வைத்த கபடத்தனம் ராஜபக்ச குடும்பத்தாலேயே முடிந்தது.
விடுதலைப் புலிகள் ஏமாந்தார்களோ இல்லையோ வாக்களித்த தமிழர்களையே ராஜபக்ச அரசு கொன்றது. மீண்டும் தமிழர்களை ஏமாற்றி அபிவிருத்தி புகையிரத சேவை, தங்கம் கையளிப்பு என ஆசைகாட்டி மோசம் செய்ய நினைக்கிறது.
ஏன், எதற்காக ஏமாற்றும் நாள் வருகிறது என சொல்கிறோம். அதுதான் ஜனாதிபதி தேர்தல். தமிழர்கள் மீண்டும் ஏமாறுகிறவர்களாக இருக்கப் போகிறார்களா அல்லது தமது தீர்ப்பை தெளிவாக வழங்கப் போகிறார்களா பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இன்றைய அரசு தவிர்ந்த எந்த பெரும்பான்மை அரசு வந்தாலும் பெரிதாக மாற்றம் நடந்துவிடப் போவதில்லை எல்லோரும் ஒருவித்த்தில் தமிழரை சங்காரம் செய்தவர்களே.
ஜே.ஆர், சந்திரிகா, ரணில் யாரும் விதிவிலக்கல்ல.
ஆறில் ஐந்து பெரும்பான்மை பெற்ற ஜே.ஆரோ, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுள்ள ராஜபக்சவோ பிரச்சினையை தீர்க்க முன்வரவில்லை. அவர்களுக்கு உண்மையில் விருப்பமில்லை.
விசேடமாக ராஜபக்ச எனது ஆட்சியில் இவ்வளவு உயிர்கள் பலியாகிவிட்டதே என்ற குற்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல் இனியாவது இனப்பிரச்சினையை சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்தி யுத்தம் நடந்தகையோடு இருந்த உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவை பயன்படுத்தி நியாயமாக நேர்மையான மனதுடன் தீர்க்காமல் வைராக்கியமாக மனச்சாட்சியின்றி இன்னும் இனங்களுக்கிடையில் விரோதம் வளர்ப்பதுடன் வடகிழக்கில் சிங்களவர்களை குடியேற்றி தமிழர்களைமேலும் வெறுப்பூட்டுகிறார்.
வரும் ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ச குடும்பத்தில் யார் போட்டியிட்டாலும் ஒரு தமிழன் வாக்களித்தாலும் அவன் ஒரு ஈனப்பிறவியாகவே இருக்க முடியும்.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த நிகள்வுகளில் தமிழனை கொலை செய்தால் போதாது தமிழையும் கொல்வேன் என்ற எண்ணத்துடன் கொச்சைத் தமிழில் “உங்கலுக்குநான் எல்லாம் செய்து தறுவேன்” என்று றீல் விட்டிருக்கிறார்.
1977 ம் ஆண்டு பொதுத்தேர்தலில் கல்குடா தொகுதிக்கு பிரசாரத்துக்கு வந்த ஜே ஆர் இதே பாணியில் கொச்சைத் தமிழில் “எப்புடிசெய்யுறது” என்ற ஒருவார்த்தை பேசியபோது தமிழர்கள் ஜே.ஆர் தமிழ் கதைக்கிறார் என்று ஆரவாரித்தார்கள்.
எப்படி அரைக்க முடியுமோ அப்படி அரைக்கிற திறமை அவர்களுக்கு உண்டு. ஏமாறுகிற திறமை தமிழனுக்கு நிறையவே உண்டு.
ஒரு சாதாரண தமிழ் தோட்ட தொழிலாளி, மூட்டை துக்குகிற தொழிலாளி மற்றும் அரசாங்க உத்தியோகஸ்தரால் இலங்கையின் இரண்டு பாசையையும் சரளமாக பேசமுடியும் போது இந்தநாட்டை ஆள்கிறவர்களுக்கு இலங்கையின் தமிழ் மொழியை பேசத்தெரியவில்லை.
நாங்கள் றீல் அல்ல ரெயில் விட்டா காட்டுகிறீர்கள் என தக்கபாடம் புகட்ட வேண்டும்.
அக்கிரமத்துக்காக சூரன் வதைக்கப்பட்டான். நாம் வாக்கு என்னும் ஆயுதம் ஏந்தி தமிழர்களை குற்றுயிரும் குலையுயிருமாய் புதைத்தவர்களை சங்கரிப்போம் என இந்த தீபாவளி மாதம் உறுதிகொள்வோம்.
நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குகிறது. அதுதான் ஜனாதிபதி தேர்தல்.
ஏறாவூரான்
http://www.tamilwin.com/show-RUmszARYKXnr7.html
Geen opmerkingen:
Een reactie posten