தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 oktober 2014

கழிவுகளால் நிரம்பி வழியும் கல்லுண்டாய்வெளி: காப்பாற்றுமாறு மக்கள் கோரிக்கை!



யாழ்.காக்கைதீவு- கல்லுண்டாய்வெளிப் பகுதியில் பொறுப்பற்ற முறையில் கொட்டப்படும் கழிவுப் பொருட்களால் பெரும் சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அங்கு கொட்டப்படும் வைத்தியசாலைக் கழிவு, மலக்கழிவு, பிளாஸ்டிக் குப்பைகளால் அயல் கிராம மக்கள் பல்வேறு நோய்த் தொற்றுக்கு உள்ளாக்கப்படுவதுடன், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேற்படிப் பகுதியில் கொட்டப்படும் கழிவுப் பொருட்களை உண்பதற்காக திரண்டு நிற்கும் நாய்களினால் கடியுண்ட 10 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவமும் அண்மையில பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காக்கைதீவு – கல்லுண்டாய்வெளிப் பகுதியில் யாழ்.மாநகர சபை, மானிப்பாய் பிரதேச சபை, வலி.தென்மேற்குப் பிரதேச சபை ஆகியன தமது பிரதேசங்களில் உள்ள கழிவுப் பொருட்களை மற்றும் குப்பைகளை கொட்டுகின்றார்கள்.
படையினரும் தமது படைமுகாங்களில் மலக்கழிவுகளை அங்கு கொட்டுகின்றார்கள். இதுதவிர யாழ்.போதனா வைத்தியசாலை உட்பட்ட ஏனைய தனியார் வைத்திய சாலைகள், இறைச்சிக் கழிவுகள் போன்றனவும் அங்கு கொட்டப்பட்டு வருகின்றது.
ஆரம்பத்தில் அங்கு கழிவுப் பொருட்கள் மற்றும் குப்பைகள் என்பன கொட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் குப்பைகள் ஒழுங்குமுறைபடி கொட்டப்பட்டு வந்தன.
இதன் பின்னர் தற்போது வீதிக்கு அருகில் கொட்டப்பட்டு வருகின்றது. அங்கு அதிகளவில் குப்பைகள் சேர்ந்ததும். அங்கு அதிகளவில் சேர்ந்த கழிவுகள் தீயிட்டு எரிக்கப்பட்டது.
இதனால் எழும் பெரும் புகைமண்டலம் அயல் கிராமங்களுக்கு செல்வதால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதுடன், பல தொற்று நோய்களுக்கும் அக்கிராம மக்கள் உள்ளாக்கப்பட்டிருந்தனர்.
இதுமட்டுமல்லாமல் குப்பைகளுக்குள் உள்ள பொலித்தீன் பைகள் காற்றுக் காரணமாக அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் சென்று புதைவதால், விவசாய நிலங்கள் விளைச்சலற்ற நிலங்களாக மாற்றமடைகின்றது.
மேலும் அங்கு கொட்டப்படும் வைத்தியசாலைகளின் கழிவுகளை கால்நடைகள் உண்பதால் அவை உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றது.
காரைநகர், அராலி, வட்டுக்கோட்டை, நவாலி போன்ற நகருக்கான பிரதான போக்குவரத்து பாதையான கல்லுண்டாய்வெளி உள்ளதால் அவ்வீதியூடான போக்குவரத்து பெரிதும் போதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வீதியோராமாக கொட்டப்படும் கழிவுகளால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளதுடன், விபத்துக்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களும் ஏற்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் நவாலி தேற்கு கிராமத்தினைச் சேர்ந்த 300 குடும்பங்களுக்கும் அதிகமானவர்கள் கொட்டப்படும் கழிவுகளில் இருந்து வெளிவரும் துர்நாற்றம் மற்றும் புகைமூட்டத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான அசௌகரியங்கள் தொடர்பாக பல்வேறு தரப்பினருக்கும் மகஜர் கையளிக்கப்பட்ட போதும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும் வலி.தென்மேற்குப் பிரதேச சபையில் மேற்படிப் பகுதியில் கழிவுகள் கொட்டக்கூடாது என்று சபை அமர்வில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
இருந்த போதும் குறித்த பிரதேச சபை இன்றுவரைக்கும் அங்கு கழிவுகளை கொட்டிவருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தற்போது பருவ மழை பெய்துவரும் நிலையில் சுகாதார சீர்கேடுகள் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது என்றும், தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது என்றும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேற்படி விடயங்களைக் கருத்தில் கொண்டு மத்திய சுகாதார அமைச்சோ அல்லது வடமாகாண சுகாதார அமைச்சோ தகுந்த நடவடிக்கையினை விரைந்து எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் அவசர கோரிக்கையினை வித்துள்ளதுடன், உயிர் கொல்லி நோய்களில் இருந்து தமது கிராம மக்களை காப்பாற்றுமாறும் அம்மக்கள் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszARaKXmv6.html

Geen opmerkingen:

Een reactie posten