கொழும்பு சுகததாஸ உள்ளரங்கில், கடந்த 27ஆம் திகதி பொதுபல சேனா நடத்திய மாநாடு, சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும், கரிசனைகளையும், கவலைகளையும் தோற்றுவித்திருக்கிறது. இந்த மாநாட்டின் அடிப்படை நோக்கம் குறித்து ஏற்கனவே சில சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்தன.
அந்தச் சந்தேகங்கள் எந்தளவுக்கு உண்மையானவை என்பதை விட, இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், அதில் நிகழ்த்தப்பட்ட உரைகளும், மியன்மாரின் அசின் விராது தேரரின் பங்கேற்பும்தான் கூடுதல் கவனத்தைப் பெற்றிருந்தன.
பொதுபல சேனா இந்த மாநாட்டை ஏற்பாடு செய்த போதே, அதற்குப் பல்வேறு எதிர்ப்புகளும், விமர்சனங்களும் கிளம்பியிருந்தன.
சிங்கள பௌத்த ஆட்சியை ஏற்படுத்தல் என்ற இலக்கினை முன்வைத்த இந்த மாநாடு, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்rவை ஜனாதிபதியாக முன்னிலைப்படுத்தும் முயற்சி என்று கூட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
ஆனால், இந்த மாநாட்டில் அதற்குரிய வெளிப்படையான எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், நாட்டில் சிங்கள பௌத்த ஆட்சியை ஏற்படுத்தலும், நாட்டை சிங்கள பௌத்த மயப்படுத்துவதுமே இந்த மாநாட்டின் இலக்குகள் என்பது தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.
இது பல்லின, பல மதங்கள் வாழும் நாடு அல்ல என்றும், சிங்கள பௌத்த நாடு என்றும், இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், இங்குள்ள மக்களை, இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என்று அழைக்கக் கூடாது என்றும், சிங்கள இந்துக்கள், சிங்கள கிறிஸ்தவர்கள், சிங்கள, முஸ்லிம்கள் என்றே அழைக்கப்பட வேண்டும் என்றும் பொதுபல சேனா மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
இதிலிருந்து, இந்த மாநாடு பௌத்த மதத்தை பாதுகாப்பதற்கானது என்ற போர்வையில், சிங்கள இனத்தைப் பாதுகாப்பதை மட்டுமே இலக்காக கொண்டது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
இந்த மாநாட்டிலும் சரி, பின்னர், பொதுபல சேனாவுக்கும் மியன்மாரின் 969 அமைப்புக்கும் இடையில் உடன்பாடு செய்து கொள்ளப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலும் சரி, தாம் எந்தவொரு இனத்துக்கோ மதத்துக்கோ எதிரானவர்கள் அல்ல என்று இரு அமைப்புகளுமே கூறியிருந்தன.
மத தீவிரவாதத்தையே தாம் எதிர்ப்பதாகக் கூறிய இந்த பொதுபல சேனாவும், 969 அமைப்புமே, பௌத்த மத அடிப்படைவாதிகளாக வெளியுலகினால் பார்க்கப்படுகின்றன.
இந்த பௌத்த அடிப்படைவாதமே, தெற்காசியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உருவெடுக்கும் என்று உலக வல்லரசு நாடுகளே கவலை கொண்டிருக்கின்ற நிலையில், இந்த அமைப்புகள் தாமே மத தீவிரவாதத்துக்கு எதிராகப் போராடப் போவதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பொதுபல சேனா இலங்கையிலும், 969 அமைப்பு மியன்மாரிலும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டிவிட்டு வருகின்றன.
பொதுபல சேனாவைப் பொறுத்தவரையில், முஸ்லிம்கள் மட்டுமன்றி, கிறிஸ்தவர்களையும் இலக்கு வைத்து செயற்படுகிறது.
பௌத்த மதத்தைப் பாதுகாப்பது என்ற போர்வையில், பிற மதங்களை அழிக்க முனைகிறது. அதுமட்டுமன்றி, இனரீதியாகவும், பிற இனங்களை அடக்கியாள முனைகிறது.
மியன்மாரைப் பொறுத்தவரையில் அங்கு ரொகிங்யா எனப்படும் சிறுபான்மை முஸ்லிம்களை 969 அமைப்பு இனப்படுகொலை செய்து வருகிறது, அதுவும், பௌத்த மதத்தின் பேரால் நடக்கிறது. இதற்கு எதிராக தலாய்லாமா போன்ற பௌத்த மதத்தின் பெருந்தலைவர்கள் பலருமே குரல் கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால், இலங்கையில் இருந்துதான், அதற்கு ஆதரவளிக்கப்பட்டுள்ளது.
பொதுபல சேனாவின் மாநாட்டு க்கு, மியன்மாரின் தீவிரவாதப் பிக்கு என்றும், மியன்மாரின் பின்லேடன் என்றும் அழைக்கப்படும், அசின் விராது தேரர் அழைக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
அதுமட்டுமன்றி, அவருடன் பொதுபல சேனா உடன்பாடும் செய்து கொண்டிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் அரசாங்கத்தின் ஆதரவும் இருக்கிறது.
பொது பல சேனாவுடன் இணைந்து செயற்படப் போவதாக அறிவித்த விராது தேரர், இன்னொன்றையும் கூறியிருந்தார். பௌத்த மதத்தைப் பாதுகாக்க நான் எதையும் செய்வேன் என்பதே அதுவாகும்.
அதாவது, பௌத்தத்தின் பேரால், இனப்படுகொலைகளையும் செய்யத் துணிந்தவர்தான் விராது தேரர் என்ற குற்றச்சாட்டு உலகளாவிய ரீதியில் எதிரொலிக்கின்ற நிலையில், அவரது இந்தக் கருத்து ஆச்சரியமானதல்ல.
அதுபோல்தான், பொதுபல சேனாவும் இலங்கையில் பௌத்தம், சிங்களம் இந்த இரண்டையும் பாதுகாக்க எதையும் செய்வோம் என்று சூளுரைக்கிறது.
போருக்குப் பின்னர், பொதுபல சேனாவின் எழுச்சி இலங்கையில் இன, மத ஒற்றுமைக்குப் பெரும் சவாலாக மாறியிருக்கிறது. தமது சிங்கள, பௌத்த கடும் போக்குவாதத்தை நியாயப்படுத்துவதற்காகவும், சிங்கள, பௌத்த மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்காகவும், பொதுபல சேனா ஏனைய மதங்களைப் பின்பற்றுவோரை நசுக்க முனைகிறது.
இதுவே இன்று இலங்கையில் நல்லிணக்க முயற்சிகளுக்குப் பெரும் இடையூறாக மாறியும் இருக்கிறது. பொதுபல சேனா மாநாட்டில், தம்முடன் இணைந்து கொள்ளுமாறு இந்துக்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு, சிறுபான்மையினங்களைப் பிரித்தாளும் தந்திரத்தைக் கொண்டது.
பொதுபல சேனா, வெளிப்படையாக இந்துக்களுக்கு எதிரான கொள்கைகளை இதுவரை வெளிப்படுத்தவில்லை.
அதற்கு, இந்து சமய வேரில் இருந்தே பௌத்தம் தோன்றியது என்ற அடிப்படைக் காரணமா? அல்லது, இந்துக்களுக்கு எதிரான போராட்டங்கள், இந்தியாவில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தும் என்ற காரணமா? அல்லது, இந்துக்களை ஏனைய சிறுபான்மையினரிடம் இருந்து பிரித்தாளும் தந்திரமா? என்று ஆராயப்பட வேண்டும்.
பொதுவாகவே, இதுபோன்ற மேலாதிக்க கொள்கை உடையவர்கள் பிரித்தாளும் தந்திரத்தின் ஊடாகத் தமது இலக்கை அடைய முனைவது வழக்கம்.
இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என்று சிறுபான்மையின, மதத்தவர்கள் ஒன்றாக இருக்கும்போது, அவர்கள் மீது அழுத்தங்களைக் கொடுப்பது சிரமமானது.
ஆனால், இந்த இனங்களையும், மதங்களையும் தனித்தனியே பிரித்து விட்டால், அழிப்பது சுலபமானது.
இந்துக்களுடன் கைகோர்த்து, முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும், அவர்களிடத்தில் இருந்து பிரிப்பதன் மூலம், அவர்களுக்குள் பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதன் மூலம், சிங்கள பௌத்தம் தனது பிரதான இலக்கை அடையப் பார்க்கிறது.
இதன் பிரதான இலக்கு என்பது சிங்கள பௌத்த தேசியவாதம் மட்டுமேயாகும். மன்னார் ஆயருக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட தாக்குதலும், மடுத் தேவாலயம் குறித்து கருத்துகளும், தமிழர்களான இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையில் குரோதத்தை ஏற்படுத்தி விடும் எண்ணம் கொண்டது. அதுபோலவே, முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் பிரச்சினையை ஏற்படுத்தி விட்டும் குளிர்காய முனைகிறது பொதுபல சேனா.
இலங்கையில் தமிழர்களைப் பொறுத்தவரையில், சிங்கள பௌத்த பேரினவாதம் தான், தமிழர்களை அடக்கி ஒடுக்கி இன்று இரண்டாம் தரக் குடிமக்களாக அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது.
இதற்கெதிராக ஒன்றிணையும், ஏனைய சிறுபான்மையின, மதப் பிரிவுகளையும், தமிழர்களிடத்தில் இருந்து பிரித்து, தமது இலக்கை அடைய எத்தனிக்கிறது பொதுபல சேனா. இன்னும் வடக்கில், உள்ள மக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக பௌத்த, சிங்கள மயப்படுத்தலே இருக்கிறது.
தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த, வாழுகின்ற பகுதிகளெங்கும் புதிய புதிய விகாரைகள் முளைக்கின்றன. புனித பிரதேசங்கள் உருவெடுக்கின்றன.
அதையொட்டி சிங்களக் குடியேற்றங்களும் வேகமாக வளர்ந்து வருகின்றன.
இவையெல்லாம், வடக்கு கிழக்கைத் தமது தாயகப் பிரதேசமாக கொண்டு வாழும், அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.
இதற்கெதிராக ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கும் சிறுபான்மையினத்தவர்களை – மதத்தின் பெயரால், தனித்தனியாக்கி அழிக்க முனைகிறது பொதுபல சேனா. பொதுபல சேனாவின் வளர்ச்சி என்பது போருக்குப் பிந்திய இலங்கையின் மிகப் பெரிய அச்சுறுத்தலாகவே மாறியுள்ளது.
இந்த அச்சுறுத்தலை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்துவிட அரசாங்கம்தான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அரசாங்கமோ அதற்குப் பின் னால் இருந்து கொண்டு இயக்குகிறது.
இதனால், பொதுபல சேனாவின் ஆட் டம் இன்னும் இன்னும் உக்கிரமடைந்து கொண்டு செல்கிறது. இந்தநிலை நீடித்தால், அது, இலங்கையில் உள்ள சிறுபான்மையினத்தவர்கள், மதத்தினர் மட்டுமன்றி, பெரும்பான்மையின ஆட்சியாளர்களுக்கும் கூட ஆபத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்.
ஏனென்றால், அதன் இலக்கு பெளத்த மதத்தைப் பாதுகாப்பது என்ற பெயரில், பௌத்த, சிங்கள ஆட்சியை நிறுவுவ தேயாகும். அத்தகைய ஆட்சியில், கோ லோச்சப் போவது காவிகளே தவிர, அர சியல்வாதிகளல்ல.
-கபில்
http://www.tamilwin.com/show-RUmszATaKWnv5.html
Geen opmerkingen:
Een reactie posten