ஆப்கானிஸ்தானில் பெண்கள், பிறந்ததில் இருந்து திருமணத்திற்கு முன்பு வரை ஆண்களாய் வலம் வந்து சுற்றித் திரிகின்றனர்.
ஆப்கானில் ஆண் குழந்தைகள் இல்லாத வீட்டில், சிலர் தங்கள் பெண் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே ஆண் குழந்தை போல உடை அணிவித்து அவர்களை மற்றவர்களுடன் பழக விடுவதுடன் பள்ளிக்கும் அவ்வாறே அனுப்புகின்றனர்.
”பச்சா போஷ்” என்றழைக்கப்படும் இந்த பெண் குழந்தைகள் ஆண்கள் போல் உடை அணிவதால் சுதந்திரமாக வெளியில் நடமாட முடிவதுடன் ஆண் குழந்தைகளுடன் சகஜமாக விளையாடி மகிழ்கின்றனர்.
மேலும் ஆண் குழந்தைகள் இல்லாத குடும்பத்தாரும் தங்களுக்கு ஆண் குழந்தைகள் இல்லை என்ற எண்ணத்தில் இருந்து சிலகாலம் விலகியிருக்க முடிகிறது.
இந்த பழக்கவழக்கம் சுமார் நூறாண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் ஆப்கன் பகுதியில் இஸ்லாமிய ஆட்சி அமைவதற்கு முன்பிருந்தே இது நடை முறையில் இருக்கிறது என்றும் தெரியவந்துள்ளது.
1900ம் ஆண்டு காலகட்டத்திலேயே பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்காக இவ்வாறு ஆண்கள் போல் உடையணிந்து சமூகத்தில் உலவி வந்துள்ளனர்.
ஆப்கானில் பிறந்து தங்கள் வாழ்நாளை கழிக்கும் பெண்களுக்கு என்றுமே அங்குள்ள ஆண்களுக்குச் சரிநிகரான உரிமைகள் எங்கும், எதிலும் கிடைப்பதில்லை.
மேலும், தலிபான் ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளும் தண்டனைகளும் பயங்கரமானவை என்பதோடு பெண்கள் வாழ்வதற்கே மிகவும் அபாயகரமான சூழலைக் கொண்ட நாடாக ஆப்கானிஸ்தான் விளங்குவதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில் தான் தங்கள் பெண் குழந்தைகளுக்கு ஆண் உடைகளை அணிவித்து ஆண்களின் உலகத்திலேயே உலவவிடுகின்றனர்.
ஆப்கனில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு பச்சா போஷ் குழந்தையையாவது பார்க்க முடியும் என்று ஆசிரியைகள் குறிப்பிடுகின்றனர்.
இப்படியான பெண்கள், பெரும்பாலும் ஆண்களுடன் பழகுவதால், அவர்களுக்குப் பெண்களின் பழக்கவழக்கங்கள்பற்றி சரியான புரிதல் இருப்பதில்லை.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தப் பெண்கள், பிற்பாடு திருமணம் செய்து கொண்டு, மற்ற பெண்களைப் போலக் குடும்ப வாழ்க்கை வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
மேலும், அது தங்களுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தருவதோடு சில பெண்கள், “இத்தனை ஆண்டுகள் ஆணாக வாழ்ந்துவிட்டு, திடீரென்று பெண்ணாக வாழ்வதா?” என்று எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
|
Geen opmerkingen:
Een reactie posten