தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 oktober 2014

உணர்வு அரசியலை உடைக்கும் புதுடில்லி



இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை இந்தியா திடீரென வலுப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளை ஆரம்பித்திருக்கிறது. கடந்த 9 ஆம் திகதி இந்தியப் பாதுகாப்புச் செயலர் ஆர்.கே.மாத்தூர் முன்னறிவிப்பு ஏதுமின்றி கொழும்புக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
அந்தப் பயணத்தின் போது, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ, முப்படைத் தளபதிகள், அடங்கிய குழுவினருடன் அவர் பேச்சுக்களை நடத்தியிருந்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவையும் அவர் சந்தித்துப் பேசியிருந்தார்.
இந்தநிலையில், பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்‌ஷ கடந்தவாரம் புதுடில்லிக்குச் சென்று பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
கடந்த மே மாதம் புதுடில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர், இலங்கையுடன் பாதுகாப்பு மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதல் உயர்மட்டக் கலந்துரையாடல்கள் இவையாகும்.
கடந்த ஐந்து மாதங்களாக நீடித்த தேக்க நிலையை உடைத்துக் கொண்டு இருதரப்பு பயணங்களும், பேச்சுக்களும் இடம்பெற்றுள்ளன. அதுவும், இந்தப் பயணங்கள் மற்றும், பேச்சுக்கள் நீண்டகாலத் திட்டங்கள் மற்றும் முன்னேற்பாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டவையும் அல்ல. குறுகிய கால ஒழுங்கிற்கமையவே இவை இடம்பெற்றுள்ளன.
இந்த திடீர் சந்திப்புகள், மற்றும் இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளின் பின்னணியில், சீனாவுடனான இலங்கையின் நெருக்கமே முக்கிய காரணம் என்கின்றன புதுடில்லி பாதுகாப்பு வட்டாரங்கள்.
குறிப்பாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அண்மைய கொழும்புப் பயணத்தையொட்டி, கொழும்புத் துறைமுகத்துக்கு சீன நீர்மூழ்கிப் போர்க்கப்பல் ஒன்று வந்து சென்றிருந்த விவகாரம் தான், இந்தியாவை விழித்தெழ வைத்துள்ளதாக பரவலான கருத்து உள்ளது.
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்து வருவது குறித்து இந்தியா கவலை கொண்டிருந்தாலும், அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல், இருந்து வந்தது.
சீன நீர்மூழ்கிக் கப்பல் விவகாரம் வெளியே தெரிய வந்த பின்னர், இந்தியா வெளிப்படையான போட்டியில் இறங்கியுள்ளது.
முன்னதாக, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் டோவல் தான் அடுத்த மாதம் கொழும்பு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாகவே, இந்தியாவின் பாதுகாப்புச் செயலர் ஆர்.கே.மாத்தூரின் பயணம் இடம்பெற்றிருந்தது.
இலங்கையில், பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்‌ஷ செல்வாக்குடையவராக இருந்தாலும், இந்தியாவில் அந்த நிலை இல்லை. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்குத் தான் கூடுதல் அதிகாரமும், செல்வாக்கும் உள்ளது. ஒரு மத்திய அமைச்சருக்குரிய அதிகாரங்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு உள்ளது.
மேலும், பாதுகாப்புச் செயலராக இருக்கும் ஆர்.கே.மாத்தூர், ஒரு சிவில் சேவை அதிகாரியாவார்.ஆனால், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஒரு முன்னாள் பொலிஸ் அதிகாரி என்பதுடன், அவரது நியமனம் அரசியல் ரீதியாகவும் மேற்கொள்ளப்பட்ட ஒன்று என்பதும் முக்கியமானது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் கொழும்புக்கான பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னதாக, பாதுகாப்புச் செயலர் ஆர்.கே.மாத்தூர் தலைமையிலான குழுவை இந்தியா கொழும்புக்கு அனுப்பியிருந்தது.
இந்தக் குழுவின் பயணம் பின்னர், இரண்டாவது வருடாந்த பாதுகாப்புக் கலந்துரையாடல் என்று மாற்றப்பட்டது. கடந்த 9ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் நடந்த இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற இந்தியக் குழுவில், பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு சார்ந்த உயர் அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர்.
பாதுகாப்பு அமைச்சின் இணைச்செயலர் சிறிராம் சுகக் சிங், வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலர் சுசித்ரா துரை, இந்தியக் கடற்படையின் உதவித் தலைமை அதிகாரி றியர் அட்மிரல் பண்டிட், இந்திய இராணுவத்தின் அனைத்துலக உறவுகளுக்கான மேலதிக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ருஷ்ரம் பட்நாயக் ஆகியோர் இந்தச் சந்திப்புக்காக ஆர்.கே. மாத்தூருடன் கொழும்பு வந்திருந்தனர்.
இவர்களுடன், கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, உதவித் தூதுவர் அரிந்தம் பக்சி ஆகியோரும் பேச்சுக்களில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தப் பேச்சுக்களில், இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்துப் பேசப்பட்டதாக கூறப்பட்டாலும், விரிவான எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
அதையடுத்து, மறுநாள் கடந்த 10ஆம் திகதி இந்திய பாதுகாப்புச் செயலர் ஆர்.கே.மாத்தூர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை சந்தித்துப் பேசியிருந்தார். அப்போதும், இருதரப்பு உறவுகள் குறித்தே பேசப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டது.
எனினும், இந்தியத் தரப்பில் இருந்து இதுபற்றி ஏதும் வாய் திறக்கப்படவேயில்லை. இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் குழுவின் பயணம் இடம்பெற்று, பத்து நாட்களுக்குள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்‌ஷ இந்தியாவுக்கு சென்றிருந்தார்.
இந்தியாவின் அழைப்பின் பேரில் தான் அவர் புதுடில்லி வந்திருந்ததாக, அங்குள்ள பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.
தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக - கடந்த 20ஆம் திகதி புதுடில்லி சென்றிருந்த அவர், இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லியை நோர்த் புளொக்கில் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். இந்தப் பேச்சுக்களில், அருண் ஜெட்லியுடன், பாதுகாப்புச் செயலர் ஆர்.கே. மாத்தூரும் பங்கேற்றார்.
கோத்தபாய ராஜபக்ஷவுடன், புதுடில்லியில் உள்ள இலங்கைத் தூதுவர் சுதர்சன் செனிவிரத்னவும் சந்திப்பில் கலந்து கொண்டார். இந்தப் பேச்சு தொடர்பான படங்களை மட்டும் வெளியிட்ட இந்திய அரசாங்கம், மேலதிக விபரங்கள் எதையும் வெளியிடவில்லை.
வெளியில் காத்திருந்த செய்தியாளர்களிடம் வாய் திறக்காமல், இருதரப்பினரும் சென்று விட்டனர். முன்னதாக, தி ஹிந்து நாளிதழ், கோத்தபாய ராஜபக்ஷ இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் பேச்சு நடத்துவதற்காக புதுடில்லி செல்லவுள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால், புதுடில்லிப் பயணத்தின் போது, கோத்தாபய ராஜபக்ஷ, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்தது தவிர, வேறு யார் யாரை சந்தித்தார் என்ற விபரங்கள் ஏதும் வெளியாகவேயில்லை. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலை அவர் சந்தித்தாரா என்ற விபரமும் வெளியிடப்படவில்லை.
எதற்காக இருதரப்பும் அண்மைய பேச்சுக்கள் தொடர்பான விபரங்களை மறைக்க முனைகின்றன என்பது தெளிவாகவில்லை.
எவ்வாறாயினும், இந்தப் பேச்சுக்களில், சீன நீர்மூழ்கிகளின் வருகை விவகாரம் முக்கியத்துவம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால், அண்மையில் கூட இந்தியக் கடற்படைத் தளபதி சீன நீர்மூழ்கிகளின் நடமாட்டம் குறித்து இந்தியா விழிப்புடன் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
அதைவிட, சீன ஜனாதிபதியின் கொழும்பு பயணத்தை விட, சீன நீர்மூழ்கியின் கொழும்புப் பயணத்தைத் தான், இந்தியா உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியுள்ளது. அதுவும், இந்த நீர்மூழ்கிகள் மீண்டும், கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து செல்லும் என்ற தகவலும் வெளியானது இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கொழும்புத் துறைமுகத்தில் சீனாவுக்குச் சொந்தமான கொள்கலன் இறங்குதுறை இருப்பது சீன நீர்மூழ்கிகளுக்கு வசதியாகி விட்டது. தமது நீர்மூழ்கிகள் வளைகுடா செல்லும் வழியில், கொழும்பில் இளைப்பாறுவதற்கே தரித்து நின்றதாக சீனா கூறியிருந்தது. அவ்வாறாயின் அதனை வெளிப்படையாகச் செய்திருக்கலாம்.
ஊடகங்கள் வாயிலாக பகிரங்கமாகும் வரை சீன நீர்மூழ்கி கொழும்பில் தரித்து நின்ற தகவலை இலங்கையும் சீனாவும் வெளியிடவில்லை. ஏனைய நாட்டுக் கடற்படைக் கப்பல்கள் இளைப்பாறவும், எண்ணெய் நிரப்பவும் கொழும்பு வரும் போதெல்லாம், அதுபற்றிய தகவல்களை இலங்கைக் கடற்படை வெளியிடுவது வழக்கம்.
ஆனால், சீன நீர்மூழ்கிகளின் வருகையை மட்டும் மறைத்து விட்டது. இது இந்தியாவுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்தச் சூழலில் தான், இந்திய பாதுகாப்பு உயர் மட்டக்குழுவின் கொழும்பு பயணம் இடம்பெற்றது. அதுமட்டுமன்றி, கோத்தாபாய ராஜபக்ஷவையும் புதுடில்லிக்கு அழைத்து இந்தியா பேச்சு நடத்தியுள்ளது.
இந்தப் பேச்சுக்களில், சீனாவுடனான பாதுகாப்பு உறவுகள் விடயத்தில் வெளிப்படைத்தன்மையை இலங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அதேவேளை, இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை மேலும் கட்டியெழுப்புவது குறித்தும் பேசப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, இலங்கைப் படையினரின் ஆற்றலைக் கட்டியெழுப்பும் உதவிகளை வழங்க இந்தியா முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு ஆழ்கடல் ரோந்துப் படகுகளையும், ஏனைய இராணுவ உதவிகளையும் இலங்கைக்கு வழங்க இந்தியா முடிவு செய்துள்ளதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே சயுர, சாகர என்று இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை இலங்கைக் கடற்படைக்கு இந்தியா வழங்கியுள்ளது.
இவை விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்கு வகித்திருந்தன. இப்போது மேலும் இரண்டு ஆழ்கடல் ரோந்துப் படகுகளை இந்தியா வழங்கவுள்ளது முக்கியமான விடயம். அதுவும், இலங்கைக் கடற்படை மீது தமிழ்நாட்டில் உச்சக்கட்ட வெறுப்பு இருக்கும் நிலையில், இவ்வாறு போர்க்கப்பல்களை வழங்கும் விவகாரம் விஸ்வரூபமெடுக்கலாம்.
புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில், ரேடர்கள், விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள், கண்ணிவெடி அகற்றும் வாகனங்கள் உள்ளிட்டவற்றை இந்தியா வழங்கியிருந்தது. அதுமட்டுமன்றி, ஆண்டு தோறும் சுமார் 900 இலங்கைப் படையினரைப் பயிற்றுவித்தும் வருகிறது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு உள்ளது.
அதையும் மீறி, இலங்கைக்கான உதவிகளை அதிகரித்து, இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்த முனைகிறது இந்தியா.
இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா இந்தியாவுக்கு மேற்கொண்டுள்ள பயணம், அடுத்த ஆண்டுத் துவக்கத்தில் இந்திய இராணுவத் தளபதி தல்பீர் சிங் சுகக்கின் இலங்கைப் பயணம் என்பனவும், இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கானதே.
இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை இந்தியா திடீரென வலுப்படுத்திக் கொள்ளத் தொடங்கியிருப்பதற்கு ஒரே காரணமாக சீனாவின் செல்வாக்கை மட்டும் குறிப்பிட முடியாது. இந்தியாவுக்கு அதிகரித்து வரும், இஸ்லாமிய தீவிரவாத அச்சுறுத்தலும் கூட இதற்கு இன்னொரு காரணம்.
இந்திய இலங்கை பாதுகாப்பு உறவுகள் என்பது, குறிப்பிட்ட சில காலமாக உணர்வுபூர்வமான அரசியல் முடிவுகளுக்குள் சிக்கியிருந்தது உண்மை. ஆனால், இப்போதைய போக்கு, அத்தகைய நிலையை உடைத்துக் கொண்டு புதுடில்லி வெளியேற முடிவு செய்து விட்டதையே காட்டுகிறது.
- சுபத்ரா -
http://www.tamilwin.com/show-RUmszARaKXmu3.html

Geen opmerkingen:

Een reactie posten