எங்கள் மண், எங்கள் பிரதேசம், என நாங்கள் எண்ணிக்கொண்டிருக்கின்ற எங்கள் தாயகம் மெல்ல மெல்ல எங்கள் கரங்களை விட்டு பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
தமிழர் பிரதேசம் என நாங்கள் பெருமை பேசும் யாழ். குடாநாட்டில் கூட தமிழர்கள் சிறுபான்மையாக மாற்றப்படும் கபட செயல்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன என பிரபல ஊடகவியலாளரும் இராணுவ ஆய்வாளருமான நிராஜ் டேவிட் தெரிவித்தார்.
சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் கலைமாலை 2014 நிகழ்ச்சி நேற்று சனிக்கிழமை மாலை சுவிஸ் சூரிச் நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.
வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் தலைவர் மு. இராசதுரை தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் துறைசார் கலைஞர் கௌரவிப்பு, இளம் கலைஞர்களின் இசை மற்றும் நடனம், கவியரங்கம், என பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய நிராஜ் டேவிட் எங்கள் கனவுகளை இலட்சியங்களை அடுத்த தலைமுறைக்கும் ஒப்படைக்க வேண்டிய பாரிய பொறுப்பு பற்றியும் யூத இனம் 2300 ஆண்டுகளாக எப்படி தங்கள் கனவுகளை சுமந்து கொண்டு உலகம் எல்லாம் அலைந்து திரிந்தார்கள் என்பதையும் விரிவாக எடுத்துரைத்தார்.
இன்று யாழ். குடாநாடாக இருக்கட்டும் அல்லது வடக்கு கிழக்கு பிரதேசமாக இருக்கட்டும், எமது தாயகம் என நாம் எண்ணிக்கொண்டிருக்கும் அப்பிரதேசம் எங்கள் கைகளை விட்டு மெல்ல மெல்ல பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
யாழ். குடாநாட்டில் இன்று 70ஆயிரம் இராணுவத்தினர் இருப்பதாக கணிப்பிடப்பட்டுள்ளது. இந்த 70ஆயிரம் இராணுவத்தினரின் குடும்பங்களையும் யாழ்ப்பாணத்தில் குடியேற்றுவதற்காக அரசாங்கம் தமிழர் நிலங்களை அபகரித்து வருகிறது. இந்த இராணுவ குடும்பங்கள் யாழ். குடாநாட்டில் குடியேற்றப்பட்டால் எமது தமிழர் பிரதேசம் என எண்ணிக்கொண்டிருக்கும் யாழ். குடாநாட்டில் தமிழர்கள் சிறுபான்மை இனமாக மாற்றப்படுவார்கள்.
எனவே அடுத்த தலைமுறைக்கு எமது பிரதேசத்தை மொழியை கலாசாரத்தை கையளிக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பில் நாங்கள் இருக்கிறோம்.
எங்கள் பிரதேசம் மட்டுமல்ல எங்கள் அடுத்த தலைமுறையையும் எங்களிடமிருந்து பறிக்கும் கபட செயல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
யூதர்கள் எவ்வாறு தங்கள் இலட்சியங்களை கனவுகளை காலம் காலமாக காப்பாற்றி வந்தார்கள் என்பதை அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனர்களை கொல்கிறார்கள். காசாவை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்றுதான் நாங்கள் எண்ணிக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் யூதர்கள் தங்களுக்கு என ஒரு நாடு இல்லாமல் 2300 ஆண்டுகளுக்கு மேலாக அலைந்து திரிந்தவர்கள். அவர்களை உலகில் உள்ள நாடுகள் ஓட ஓட விரட்டியடித்தார்கள்.
ஜேர்மனியில் 60இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்களை துரத்தாத ஐரோப்பிய நாடுகளே இல்லை.
ஆனாலும் அவர்கள் தங்கள் இலட்சியத்தை கைவிடவில்லை, உறுதியுடன் போராடினார்கள். தங்கள் கனவுகளை மிகக்கவனமாக அடுத்த தலைமுறைக்கும் ஒப்படைத்து சென்றார்கள் என நிராஜ் டேவிட் தெரிவித்தார்.
http://www.coolswiss.com/view.php?22eAld0bdO40Qd402cMM322cBn53bdeZBPB403e6AA2ecWoasace2JOo43
|
Geen opmerkingen:
Een reactie posten