இலங்கை தொடர்பான அமெரிக்காவின் கடும்போக்கில் மாற்றத்தை உணர முடிந்துள்ளதாக ஐநா பொதுச்சபைக் கூட்டத்திற்காக நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாடு திரும்பியதும் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கூறியதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
நியூயோர்க்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தங்கியிருந்த போது அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியை சந்தித்துப் பேசியிருந்தார்.
கடந்த செப்டம்பர் 26ம் திகதி மாலை நியூயோர்க் நகரிலுள்ள வல்டோர்வ் அஸ்டோரியாவில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
இந்தச் சந்திப்பில் இருதரப்பு உறவுகள் குறித்துப் பேசப்பட்டதாக ஜனாதிபதியுடன் சென்றிருந்த அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டிருந்தார்.
எனினும் மேலதிகமான பேச்சு விபரமேதும் வெளியிடப்படவில்லை.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும் கூட ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனான ஜோன் கெரியின் சந்திப்பை முக்கியத்துவப்படுத்தவில்லை.
இலங்கை அரசாங்கமும் அந்தச் சந்திப்பு பற்றிய செய்திகளை வெளியிடவில்லை.
மற்றெல்லா உலகத் தலைவர்களுடனான சந்திப்புகள் பற்றிய தகவல்களையும் வெளியிட்டு பரபரப்பு தேடிக்கொண்ட அரசாங்கம் இதனை மட்டும் அடக்கி வாசித்திருந்தது.
நியூயோர்க் புறப்படுவதற்கு முன்னதாக அங்கு தனது சந்திப்புகள் உரைகள் குறித்த தகவல்களை வெளியிடுவதற்கான இணையத்தளத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆரம்பித்திருந்தார்.
அதிலோ, அல்லது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினது அதிகாரபூர்வ வலைத்தளங்களிலோ அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியுடனான சந்திப்பு பற்றிய தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
இதிலிருந்து இருதரப்புமே இந்தச் சந்திப்புக்கு குறைந்தளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்றே உணர முடிகிறது.
இந்தநிலையில் தான் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியுடனான சந்திப்பின் போது இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் கடும்போக்கில் தளர்வு ஏற்பட்டுள்ளதை உணர முடிந்ததாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தகவல் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
எனினும் அமெரிக்காவின் கடும்போக்கில் எத்தகைய தளர்வு நிலை அவதானிக்கப்பட்டதாக ஜனாதிபதி கூறியதாகத் தகவல் இல்லை.
எனினும் ஜனாதிபதியின் இந்தக் கருத்து பல்வேறு வாய்ப்புகளைச் சுட்டி நிற்கிறது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஐநா பயணத் திட்டத்திற்கு நியூயோர்க்கிலும் தமிழ்நாட்டிலும் எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.
சில போராட்டங்களும் நடத்தப்பட்டிருந்தன.
எதிர்ப்புகள் மத்தியில் தனது பயணம் வெற்றிகரமாக அமைந்துவிட்டது என்று தனது அமைச்சரவை சகாக்கள் மத்தியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவ்வாறு கூறியிருக்கலாம்.
ஊவா மாகாணசபைத் தேர்தல் பின்னடைவுக்குப் பின்னர் நடந்த முதல் சந்திப்பு என்பதால் தனது சகாக்கள் நம்பிக்கை இழப்பதை தவிர்ப்பதற்காக அவ்வாறு தெரிவித்திருக்கலாம்.
விரைவிலேயே ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில் அமெரிக்கா தன்னை எதிர்க்கவில்லை என்று காட்டிக்கொள்ள ஜனாதிபதி முனைந்திருக்கலாம்.
அதேவேளை, உண்மையாகவே அமெரிக்காவின் போக்கிலும் மாற்றங்களை அவர் அவதானித்திருக்கலாம்.
ஜனாதிபதி கூறயதாகக் கூறப்படும் இந்த தகவலுக்குப் பின்னால் இப்படிப் பல வாய்ப்புகள் இருப்பதற்கு சாத்தியங்கள் உள்ளன.
ஆனால், இலங்கை தொடர்பான கடும்போக்கிலிருந்து விலக அமெரிக்காவுக்குத் தற்போது பெரியதொரு காரணம் ஏதும் கிடைத்திருப்பதாகத் தெரியவில்லை.
அதாவது மீறல்களுக்கு பொறுப்புக் கூறப்பட வேண்டும். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தான் அமெரிக்காவின் இறுக்கமான போக்காக இருந்து வந்துள்ளது.
அதாவது மனித உரிமைகள் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயகச் சூழலையும் உருவாக்க வேண்டும் என்றே அமெரிக்கா வலியுறுத்தியது.
எனினும் இத்தகைய அடிப்படைக் கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுவதற்கு எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருக்கவில்லை.
கடந்த 25ம் திகதி ஐநா மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய அமெரிக்கப் பிரதிநிதி கூட இவற்றையே வலியுறுத்தியிருந்தார்.
அதற்குள் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியிடம் கடும்போக்கு தளர்ந்துள்ளதாக உணர முடிந்துள்ளது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியிருப்பது வியப்பானது.
அமெரிக்கா தனது நிலையிலிருந்து தளர்ந்து போவதற்கு இரண்டே இரண்டு காரணங்கள் மட்டும் தான் இருக்க முடியும்.
முதலாவது அமெரிக்காவினது கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுவதற்குத் தயாராக வேண்டும்.
இரண்டாவது இலங்கையிடம் ஏதேனும் காரியம் சாதிக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு உருவாகியிருக்க வேண்டும்.
அமெரிக்காவினது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் தயாராக இல்லை.
அதனை வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ எப்போதோ கூறிவிட்டது.
அவ்வாறாயின் ஒருவேளை இலங்கையிடமிருந்து அமெரிக்காவுக்கு ஏதேனும் காரியமாக வேண்டியிருக்குமா என்று சிந்திக்க வேண்டும்.
அதுவும் அண்மையில் சீனாவுடனான நெருக்கத்தை இலங்கை அரசாங்கம் மிகவும் அதிகரித்துக் கொண்டுள்ள பின்னணியில் இதுகுறித்து சற்று சிந்திக்கவே வேண்டியுள்ளது.
தெற்காசியாவில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்து வருவதை இந்தியா எவ்வாறு அச்சத்துடன் நோக்குகிறதோ அதுபோன்றே அமெரிக்காவும் பார்க்கிறது.
இலங்கையில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்து வருவதை அதுவும் பொருளாதார முதலீடுகளில் இருந்து இராணுவத் தலையீடுகளாக வளரத் தொடங்கியுள்ளதை அமெரிக்காவினால் அவ்வளவு இலகுவாக சகித்துக்கொள்ள முடியாது.
முதல்முறையாக சீனக் கடற்படையின் நீர்மூழ்கி ஒன்று கொழும்புத் துறைமுகத்தில் தரித்துச் சென்றிருப்பதும் வரும் மாதங்களிலும் அது கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதும் அமெரிக்காவினால் அவ்வளவு இலகுவாக ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயங்களாக இருக்காது.
இத்தகைய நிலையில் சீனாவின் தலையீடுகளைக் குறைப்பதற்கு இலங்கை மீதான அழுத்தங்களைக் குறைக்க அமெரிக்கா முடிவு செய்திருந்தால்தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறிய தளர்வு நிலையை எதிர்பார்க்கலாம்.
இலங்கை மீது அழுத்தங்களை அதிகரிக்கும் போது இயல்பாகவே அது சீனாவின் பக்கம் சார்ந்து விடும் என்று ஏற்கனவே பலரும் எச்சரித்திருந்தனர்.
அதுபோன்ற நிலை உருவாகி வருவதற்கான சாத்தியங்கள் இருக்கலாம்.
ஆனாலும் அத்தகையதொரு நிலைக்குரிய அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை.
இப்போதைய நிலையில் இலங்கை - சீனா நெருக்கம் என்பது தவிர்க்க முடியாத கட்டத்தை அடைந்து விட்டது.
என்னதான் அழுத்தங்களைக் கொடுத்தாலும் சரி, எந்தளவுக்குத்தான் வாரி அணைத்துக் கொண்டாலும் சரி, அமெரிக்காவினால் இலங்கை - சீன உறவுகளின் ஆழத்தைக் குறைக்க முடியாது என்பது வெளிப்படையான விடயமாகி விட்டது.
எனவே, இலங்கை விவகாரத்தில் கடும்போக்கைத் தளர்த்திக் கொள்ளும் வாய்ப்பு அமெரிக்காவுக்கு இல்லையென்றே கருதலாம்.
அதேவேளை, அண்மைய ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஆளும்கட்சி மாகாணசபையை வென்றிருக்கலாம். ஆனால் அங்கு வெற்றி பெற்றது மேற்கு நாடுகள் தான் என்று ஒரு ஆங்கில நாளிதழ் ஆசிரியர் தலையங்கம் எழுதியிருந்தது.
அதாவது மேற்குநாடுகள் எதிர்பார்க்கும் ஆட்சி மாற்றத்துக்கான சிறந்த சமிக்ஞையை ஊவா தேர்தல் வெளிப்படுத்தியிருந்தது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே அடுத்தாண்டு ஜனவரியில் ஜனாதிபதி தேர்தலை நடத்த தயாராகி வரும் நிலையில் மேற்கு நாடுகள் எதிர்பார்க்கும் ஆட்சி மாற்றத்துக்கான சூழல் அதிகமாகியுள்ளது என்றே கருதப்படுகிறது.
மேற்கு நாடுகளைப் பொறுத்தவரையில் 18வது திருத்தச் சட்டத்தின் அத்தனை அம்சங்களும் நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கிக் கொண்டு செல்வதாகவே கருதுகின்றன.
அதன்வழியே மூன்றாவது தடவையும் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாவதை மேற்கு நாடுகள் ஒருபோதும் விரும்பப் போவதில்லை.
வெளிப்படையாக மேற்கு நாடுகள் இதனை ஒப்புக் கொள்ளாது போனாலும், ஆட்சி மாற்றத்தை மேற்குநாடுகள் விரும்புகின்றன என்பதே உண்மை.
ஊவா தேர்தல் அதற்கான வாய்ப்புகளை பிரகாசப்படுத்தியுள்ளது.
இத்தகைய நிலையில் இலங்கையுடனான கடும்போக்கைத் தளர்த்திக் கொள்வதைவிட ஆட்சி மாற்றத்துக்கு உறுதியாக நிற்பதற்கே மேற்குலகம் விரும்பும் என்பதில் சந்தேகமில்லை.
எனவே, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமெரிக்காவில் உணர்ந்து கொண்டது போல அமெரிக்காவினது கடும்போக்கில் மாற்றம் வருவதற்கு சாத்தியங்கள் இல்லையென்றே கூறலாம்.
இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை வாசிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்திருந்த இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜென் பசாகி நிச்சயமாக அமெரிக்காவின் போக்கில் தளர்வு காட்டப்படவில்லை என்று தெளிவாகக் கூறியிருக்கிறார்.
இலங்கை தொடர்பான அமெரிக்காவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையுடன் முழுமையான உறவை ஏற்படுத்த அமெரிக்கா விரும்புகிறது என்றாலும், சமாதானம் மற்றும் எல்லா இன மதத்தினருக்கும் சம வாய்ப்புடனான செழுமையை ஏற்படுத்தினாலே அது சாத்தியமாகும் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதிலிருந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமெரிக்காவை இன்னமும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்றுதான் கருதத் தோன்றுகிறது.
அதேவேளை, அமெரிக்காவுடன் நெருக்கத்தை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் பல்வேறு முனைகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருவதை மறுக்க முடியாது.
இந்தநிலையில், ஒருவேளை, அமெரிக்கா தனது மெனமுகத்தைக் காட்ட முனைகிறது என்றால் கூட அதற்குப் பின்னால், இலங்கையை வைத்து வேறொரு ஆட்டத்துக்கு அது திட்டமிடுகிறது என்றே அர்த்தம்.
இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவினது பிடி இறுகினாலும் சரி, தளர்ந்தாலும் சரி அது இலங்கை அரசு மீது கொண்டுள்ள கடிவாளம் நீக்கப்படுவதாக அர்த்தமாகாது.
ஹரிகரன்
http://www.tamilwin.com/show-RUmszATZKWnry.html
Geen opmerkingen:
Een reactie posten