[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 11:55.50 PM GMT ] [ பி.பி.சி ]
நியூயோர்க்கில் வைத்து சஜின் டி வாஸ் தன்னை தாக்கியதாக கிறிஸ் நோனிஸ் இலங்கை அரசிடம் ஏற்கெனவே புகார் அளித்திருந்தார். அவரது குற்றச்சாட்டை சஜின் டி வாஸ் குணவர்தன மறுத்திருக்கிறார்.
இந்த பின்னணியில், கிறிஸ் நோனிஸ் தாக்கப்பட்டது தொடர்பான புகார் குறித்து இலங்கை அரசு உரிய விசாரணை நடத்தி உண்மைகளை கண்டறியவேண்டும் என்று இலங்கையின் ஆளும்கட்சிக்குள்ளேயே குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.
அப்படியானதொரு கோரிக்கையை வலியுறுத்துகிறார் ஆளும் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் பேராசிரியருமான ராஜீவ விஜயசிங்க.
இதுகுறித்து பிபிசிக்கு பேட்டியளித்த ராஜீவ விஜயசிங்க, இந்த விவகாரத்தின் தீவிரத்தை அதிபர் மஹிந்த உணர்ந்து அதற்குரிய முறையில் நடவடிக்கை எடுப்பார் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும், இலங்கை வெளியுறவுத்துறையின் செயலாளர் இதன் தீவிரத்தை எடுத்துச்சொல்வார் என்றும் தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.
இந்த விசாரணையின் நம்பகத்தன்மை இலங்கை அரசின் மதிப்பை பாதிக்கும்
இந்த விவகாரம் தொடர்பில் குறைந்தபட்சம் ஒரு நம்பகமான விசாரணை நடத்தப்படவேண்டும். இந்த சம்பவம் குறித்து அரசு உரிய முறையில் விசாரிக்காவிட்டால், இலங்கை போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசு நடத்தும் விசாரணைகளின் நம்பகத்தன்மை சர்வதேச மட்டத்தில் இன்னும் கூடுதலாக பாதிக்கப்படும்.
எனவே இந்த சம்பவம் தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடத்தாமல், புகாருக்குள்ளான சஜின் டி வாஸ் குணவர்தனவை காப்பாற்றுவதற்கு இலங்கை அரசு முயன்றால், அது இலங்கை அரசின் ஜனநாயகத் தன்மையையும் நம்பகத் தன்மையையும் சர்வதேச மட்டத்தில் ஒருசேரக் குலைத்துவிடும்”, என்றார் இலங்கை ஆளும்கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் பேராசிரியருமான ராஜீவ விஜயசிங்க.
இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்து பிபிசி சிங்கள சேவையிடம் விளக்கிய கிறிஸ் நோனிஸ்,
ஏற்கனவே ஊடகங்களில் விரிவாக வந்திருப்பதைப் போல தாம் செப்டம்பர் 24ம் தேதி நியூயோர்க்கில் வைத்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கண்காணிப்புப் பணிக்கான நாடாளுமன்ற உறுப்பினரால் சட்டவிரோதமாக தாக்கப்பட்டது உண்மை என்பதை தாம் உறுதி செய்வதாக தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கும் அவர் குடும்பத்துக்கும் தனது விசுவாசம் தொடரும்: நோனிஸ்
அதே நாளில் இலங்கை ஜனாதிபதியை தாம் நேரில் சந்தித்து இது குறித்து விவாதித்ததாகவும் தமது இராஜினாமாக் கடிதத்தையும் அன்றே, அதாவது 24ம் தேதியே கையளித்து விட்டதாகவும் தெரிவித்த கிறிஸ் நோனிஸ், அன்று மாலையே தாம் லண்டனுக்குத் திரும்பி விட்டதாகவும் தெரிவித்தார்.
தம்முடைய ராஜினாமா நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
அதேசமயம் இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் பணி செய்வதற்கான வாய்ப்பை தமக்கு ஏற்படுத்திக் கொடுத்த இலங்கை ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் இலங்கை ஜனாதிபதிக்கும் அவரது குடும்பத்துக்குமான “தமது மாறாத விசுவாசம் அப்படியே நீடிக்கும்” என்றும் கிறிஸ் நோனிஸ் கூறினார்.
இவரது இந்த புகாரை இவரால் குற்றம் சாட்டப்படும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரான சஜின் டி வாஸ் குணவர்தன ஏற்கனவே மறுத்திருக்கிறார்.
கிறிஸ் நோரிஸுக்கும் தனக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் நடந்தது உண்மை என்றும் ஆனால் அவரை தான் தாக்கவில்லை என்றும் அவர் மறுத்திருக்கிறார்.
http://www.tamilwin.com/show-RUmszATaKWmqz.html
ஜெயலலிதா ஜாமீன் மனு மீது இன்று விசாரணை
[ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 12:26.33 AM GMT ]
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற விடுமுறைக் கால அமர்வு நீதிபதி ரத்னகலா, இந்த மனுக்களை வழக்கமான நீதிமன்ற அமர்வில்தான் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்று கூறி, வழக்கு விசாரணையை அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையடுத்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் மனுக்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.வி.சந்திரசேகரா முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகின்றன. அப்போது, அரசுத் தரப்பில் ஜி.பவானிசிங், ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்குரைஞர் ராம் ஜேத்மலானி, வழக்குரைஞர்கள் பி.குமார், எம்.ஏ.வேணுகோபால், எஸ்.செந்தில், கே.சி.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆஜராகி வாதிடவுள்ளனர்.
சசிகலா தரப்பில் எச்.கே.வித்யாசாகர், சி.மணிசங்கர், சுதாகரன் தரப்பில் மூர்த்தி ராவ், கே.சீனிவாசன், இளவரசி தரப்பில் ஹஷ்மத்பாஷா, ஏ.அசோகன் உள்ளிட்ட வழக்குரைஞர்கள் ஆஜராக உள்ளனர்.
இதனிடையே, ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி, பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறை வளாகம் முன் அதிமுகவினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சிறை முன் நேற்று திங்கட்கிழமை திரண்ட அதிமுக தொண்டர்கள் 108 தேங்காய்களை உடைத்து போராட்டம் நடத்தினர்.
அதேபோல, பெங்களூரு, கோலார் தங்கவயலின் பல்வேறு பகுதிகளில் ஜெயலலிதாவின் விடுதலைக்காக சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடத்தப்பட்டன.
கூடுதல் பாதுகாப்பு: ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெறுவதைத் தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் உயரதிகாரிகளுடன் பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழகத்தில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பெங்களூருவில் முகாமிட்டுள்ளனர்.
மேலும், திரளானோர் பெங்களூருவுக்கு இன்று செவ்வாய்க்கிழமை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், கூடுதல் பாதுகாப்பு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பெங்களூரு உயர்நீதிமன்ற வளாகம், பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகம், ஒசூர் சாலை, தமிழர்கள் வாழும் இடங்களில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எம்.என்.ரெட்டி தெரிவித்தார்.
மத்திய சிறை, பெங்களூரு உயர்நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு 144 தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATbKWmq0.html
அரசியல்வாதிகளுடன் இணைந்து பிரதம நீதியரசர் வத்திக்கான் சென்றது நீதித்துறைக்கு பாதிப்பு!
[ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 12:49.27 AM GMT ]
அண்மையில் ஜனாதிபதியின் தலைமையில் வத்திக்கான் சென்ற அரசியல்வாதிகளுடன் மொஹான் பீரிஸும் சென்றமையை சட்டத்தரணிகளின் கூட்டு அமைப்பு கண்டித்துள்ளது.
இந்தக்குழுவில் பிரதமநீதியரசர் மொஹான் பீரிஸ் இடம்பெற்றமையானது நீதிபதி ஒருவர், அரசியல்வாதிகளுடன் கொண்டுள்ள உறவைக் காட்டுவதுடன் அதிர்ச்சியை தரும் செய்தியாகவும் அமைந்துள்ளது என்று சட்டத்தரணிகளின் கூட்டு அமைப்பின் அழைப்பாளர் ஜெயசூரிய கிரிஷாந்த வெலியமுன குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை நாட்டில் அனைவருக்கும் அனைத்து உரிமைகள் உள்ளன. இந்தநிலையில் மொஹான் பீரிஸ், தனித்து சென்று பாப்பரசரை சந்தித்திருக்க முடியும். எனினும் பீரிஸ் அரசியல்வாதிகளுடன் சென்று பாப்பரசரை சந்தித்தமை மிகவும் மோசமான செயல் என்று வெலியமுன குற்றம் சுமத்தியுள்ளார்.
உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்கள், அரசாங்கத்தின் வைபவங்களில் மற்றும் அமைச்சர்கள் பிரதியமைச்சர்களுடன் ஒரே மேடையில் பங்கேற்றமை முன்னாள் நீதியரசர்களின் காலத்தில் வெகுவாக காணக்கிடைத்தது.
எனினும் பிரதம நீதியரசர்களான அசோக டி சில்வா மற்றும் சிராணி பண்டாரநாயக்க ஆகியோர் காலத்தில் அவ்வாறான நிலைமையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும், அதிர்ஷ்டம் இல்லாத வகையில் அவ்வாறானதொரு நிலைமை மீண்டும் ஏற்பட்டுள்ளது.
புதிய பிரதம நீதியரசர், அரச வைபவங்கள் பலவற்றில் பங்கேற்றுள்ளார். அரசியல் வாதிகளுடன் இருப்பது நீதின்றத்தின் சுயாதீனத்துக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக நான் அறிகின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATbKWmq1.html
மன்னார் மக்களின் பிரச்சினைகள் குறித்து முதலமைச்சருடன் கலந்துரையாடினேன்!- ஆயர் ராயப்பு யோசேப்
[ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 01:23.07 AM GMT ]
அண்மையில் மன்னார் வந்திருந்த முதலமைச்சரை சந்தித்த போதும் தாம் இந்தப் பிரச்சினைகளை சுட்டிக்காட்டியதாக ஆயர் கொழும்பின் ஊடகம் ஒன்றுக்கு நேற்று தெரிவித்துள்ளார்.
மன்னாரில் பல குடும்பங்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. இதில் பாதுகாப்பு படையினரால் பல்வேறு தேவைகளுக்காக காணிகள் பயன்படுத்தப்படவுள்ளன.
இதன் காரணமாக மன்னாரில் பெருமளவான மக்கள் காணியற்றவர்களாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மன்னார் மறிச்சுக்கட்டி பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு 1000 மனைகள் கட்டப்பட்டன. எனினும் அங்கு யாரும் வீடுகளை கைப்பற்றவில்லை.
இந்தநிலையில் இந்தியாவின் உதவியுடன் கட்டப்படும் வீடுகளும் பெரும்பாலும் வீடுகள் உள்ளவர்களுக்கே வழங்கப்படுகின்றன.
மாவட்டத்தில் ஆசிரியர் வெற்றிடங்கள் வெகுவாக உள்ளன. இது களையப்படும் போதே மன்னாரில் கல்வித்துறையில் முன்னேற்றத்தை காணமுடியும் என்று ஆயர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை போரின் போது கணவர்மாரை இழந்த பெண்களின் நிலை குறித்து தாம் விரிவாக முதலமைச்சருடன் பேசியதாக ஆயர் கூறினார்.
அவர்களின் வாழ்வாதாரத்துக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதில் கூடுதல் அக்கறை செலுத்தப்படவேண்டும் என்று தாம் அவரிடம் கோரியதாகவும் ஆயர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszATbKWmq2.html
Geen opmerkingen:
Een reactie posten