எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மிக முக்கியமானதொன்றாக சிறுபான்மை மக்களுக்கு அமையப் போகின்றது என்பது சகலருக்கும் தெரியும்.
அதை நன்கு புரிந்து கொண்ட மகிந்த ராஜபக்ஷ குடும்பம், இதுவரை காலமும் சுகபோகங்களை அனுபவித்து வருகின்ற சூழ்நிலையில் அவர்களின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற தமிழ் மக்களுக்கு எதிரான பல வெறுக்கதக்க சம்பவங்களுக்கு பதில் கூற கடமைப்பட்டவர்கள்.
அவர்கள் தண்டனையை ஏற்க வேண்டியது நிச்சயம் என்ற சூழ்நிலையை தற்காலிகமாக தள்ளிப் போடவே அதிகாரத்தை தனக்குள் தொடர்ந்து வைத்துக் கொள்ள தந்திரமான வழிகளை கையாளுகின்றார்.
அதன் ஒரு கட்டமே தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது, இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற அதிகாரங்களை நீதியான முறையிலோ அல்லது நீதியற்ற முறையிலோ நடைமுறைபடுத்த சகல திட்டங்களையும் கட்டாயமாக செயல்படுத்த போவது நிச்சயம்.
அவரின் திட்டத்தில் பலி கடாக்களாக போவது சாதாரண பொது மக்களே! அவர்கள் எந்த இனமாக இருந்தாலும் மகிந்தவிற்கு எதிரான செயற்பாட்டை கொண்டு செல்ல நினைப்பவர்களை மடக்க தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்ய தயங்கமாட்டார் என்பது உறுதி.
அதற்கான அவரின் செயல்பாடுகளுக்கு ஆதரவாக செயல்பட கூடிய பல சிறுபான்மை இன அரசியல்வாதிகளை இனங்கண்டு அவர்களுக்கு வேண்டிய அத்தனை வசதிகள், வாய்ப்புகளையும் வழங்கி அவர்களை கண்காணிக்க ஜனாதிபதிக்கு விசுவாசமான சகாக்களையும் நியமித்துள்ளார். மேலும் நியமனங்கள் நடைபெறலாம்.
நியமிக்கப்பட்ட அவரின் விசுவாசிகள் இந்த சிறுபான்மை அரசியல்வாதிகளின் தொடர்பு, நடவடிக்கைகள், கருத்துக்களை காண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்கும் கடமையை நாளாந்தம் மேற்கொண்டு வருகின்றார்கள் என்பது இந்த சிறுபான்மை அரசியல்வாதிகளுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் கவனிக்காது சலுகைகளை கண்டு மயங்கியிருந்தார்களாயின், அவர்களுக்கு கிடைக்கும் தண்டனை பாரதூரமானதாக இருக்கும்.
மகிந்த அத்தோடு நின்றுவிடாமல் இந்த அரசுக்கு ஆதரவு வழங்கும் சிறுபான்மை தலைமைகளுக்குகிடையும் பல தரப்பட்ட முரண்பாடுகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏற்படுத்தியுள்ளார்.
இதன் காரணமாக இவர்கள் எங்காவதொரு இடத்தில் தங்களை மறந்து மகிந்தவிற்கு எதிரான கருத்துக்களை குறிப்பிட்டதாக ஊடகமோ, அல்லது அந்த வைபவத்தில் கலந்து கொண்டவர்களோ அல்லது கலந்துக் கொள்ள போட்டி மனப்பான்மையுடன் இந்த சிறுபான்மை தலைமைகள் தூது அனுப்பியவர்களின் அந்த கருத்து, ஊடகம் மூலம் வருவதற்கு முன்பே ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுவது சாதாரண நிகழ்வாகவே நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.
இது போட்டி மனப்பான்மையுடன் செயற்படுத்தும் செயலாகும். இதை புரியாமல் செயற்படுபவர்களாக இருக்கும் சிறுபான்மை அரசியல்வாதிகளை இன்றும் காணக்கூடியதாகவும் இருக்கின்றது.
குறிப்பாக வட கிழக்கு பகுதியானலும் மலையக பகுதியானலும் ஜனாதிபதிக்கு ஆதரவானவர்கள் அனுபவிக்கும் சுகபோகங்கள் மக்களின் நலனுக்கான வழங்கப்பட்ட மக்கள் பணமேயன்றி மகிந்தவின் சொந்தப் பணம் அல்ல.
தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சிறுபான்மை இன அரசியல்வாதிகளுக்கு அவர்கள் அரசியலில் இருந்து அனுபவித்த அத்தனை வசதிகளையும், வருமானத்தையும் மகிந்த இன்றுவரை வழங்கி வருகின்றார்.
அதைபோல் அரசுக்குள் பதவி வகிக்கும் அத்தனை அரசியல் தலைமைகளுக்கும் மாதாந்த போனஸாக அல்லது ஊக்கிவிப்பு வருமானமாக பல சலுகைகளையும் வழங்கி வருகின்ற போதிலும், அவர்களை கண்காணிக்கவும் பலரை நியமனம் செய்துள்ளார்.
ஆகவே இவர்கள் அனைவரும் நன்றி கடனை கட்டாயம் செலுத்த வேண்டியவர்களாகவே இந்த ஜனாதிபதி தேர்தலில் இருக்க வேண்டிய நிலையில் இருக்கின்றார்கள். ஆனால் ஜனாதிபதி இவர்களுக்கு இப்படியான சலுகைகளை செய்த போதும் முழுமையாக இந்த அரசியல்வாதிகளை நம்பவில்லை.
ஊவா மாகாணத்தில் நடைபெற்ற மாகாண சபை தேர்தலில் சிறுபான்மை மக்கள் வாழும் தோட்டப் பகுதி அபிவிருத்தி திட்டங்களுக்கான வளங்களையும், நிதிகளையும் அரசு வழங்கிய போதும் அவைகளை இந்த சிறுபான்மை தலைமைகள் ஊடாகவே நடைமுறைபடுத்த ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இந்த நிதிகளை இவர்கள் திட்டங்களுக்கு பயன்படுத்தும் போது இந்த தலைமைகள் “சமூகம்” என்ற ரீதியில் செயல்படுத்தாமல் தங்களின் கட்சி ஆதரவாளர்களா அல்லது மாற்று கட்சியின் விசுவாசிகளா என்ற ஆராச்சியின் பின்னே அபிவிருத்தி திட்டங்கள் செயல்படுத்த முனைகின்றனர்.
அதனால் ஏற்படும் வீண் தாமதங்களினால் இந்த பணத்தில் 25வீதம் கூட செலவு செய்யப்படாமல் திறைசேரிக்கு அல்லது கடைசி நேரங்களில் இந்த நிதியின் மூலம் பிளாஸ்டிக் கதிரைகள் ஒலிபெருக்கிகள், சக்கர நாற்காலிகள், சீமெந்து, தகரம் என்று செலவுகள் செய்யப்பட்டு கணக்கு காட்டப்பட்டு நிதி முடிவடைகின்றது.
இவை அனைத்தும் ஜனாதிபதியின் கவனத்திற்கு செல்லும் நிகழ்ச்சிகளாக இருந்தது என்பது மட்டும் உண்மை. இவற்றையெல்லாம் ஜனாதிபதி தமிழ் தலைமைகள் மூலம் செய்து பிடியை தன் கையில் வைத்துள்ளார்.
ஆகவே இவர்கள் தேர்தல் காலத்தில் நிபந்தனைகள் எதையும் கேட்கவும் முடியாது, விதிக்கவும் முடியாது. அதனால் ஜனாதிபதியின் கட்டளையை நிறைவேற்றும் கருவியாகவே செயல்பட வேண்டிய கட்டாய நிலையில் உள்ளார்கள்.
ஊவா மாகாணத்தில் கணிசமான வாக்குகளை அரசுக்கு வழங்கிய மக்கள் எதிர்பார்த்த அமைச்சுக்களை இவர்கள் பெற்றால் மக்களுக்கு அதிக சேவைகள் கிடைக்கும் என்று எண்ணிய மக்கள் வேறு.
ஆனால் அரசிடம் இருந்து பெற்றுக் கொண்ட சலுகைகளுக்கு ஏற்ற வாக்குகளை பெற்றுக் கொடுக்க முடியாதமைக்கான காரணத்தினால் ஜனாதிபதியிடம் நேரில் சென்ற சில அரசியல்வாதிகள் அவரின் கடும் போக்கினால் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவோம் என்று அறிக்கையுடன் திரும்பியதாக சில விடயங்கள் தற்போது கசிய தொடங்கியுள்ளன.
எனினும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவை தமிழ் மக்கள் வழங்க இந்த சிறுபான்மை அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டிய கட்டளைக்குள் சிக்கிவிட்டார்கள்.
இவர்களை கண்காணிக்க மேலும் மகிந்தவின் அரசியல் விசுவாசிகள் மலையகமெங்கும் பவனி வர போகின்றார்கள். இவர்களின் செயல்பாட்டை கவனிக்கும் அதே நேரம் மகிந்தவிற்கு எதிரான செயல்பாடுகளை கவனிக்கும் முறையில் அரசியல் துஸ்பிரயோகங்கள் நடைபெறலாம்.
இது வட கிழக்கிற்கும் ஏற்புடையதாகவே இருக்கப் போகின்றது. மகிந்த குடும்பம் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தை கொண்டு செல்ல எடுக்கப்படும் முடிவுகளுக்கு சிறுபான்மை அரசியல்வாதிகள் அரசுடன் இருந்து அனுபவித்த சலுகைகளுக்காக அடிமையாகத்தான் இருக்க வேண்டும்.
அதை போல் மலையகத்தை சார்ந்த மக்களோ இந்த மலையக அரசியல்வாதிகளுக்கு அடிமையாகத்தான் இருக்கப் போகின்றார்களா? அல்லது சுயமாக சிந்தித்து சுகந்திரமான தீர்மானத்தை எடுக்கப் போகின்றார்களா? என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
எப்படியாகினும், தமிழ் மக்களின் வாக்கு மகிந்தவிற்கு கிடைக்க வேண்டும் அல்லது வாக்களிப்பில் இருந்து ஒதுங்கி கொள்ள வேண்டும் இது தான் ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவின் திட்டமாக இருக்குமா? என்ற சந்தேகம் வலுப்பெற்று வருகின்றது.
நம்ப முடியாத மலையக தலைமைகளும், நம்புகின்ற மக்களும்
மலையக தமிழ் அரசியல் வாதிகளினால் சட்டவிரோத செயல்பாடுகளை கண்டும் காணாதும் இருக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு விருந்தோம்பல் செய்வதில் மலையக அரசியல் தலைமைகளுக்கு நிகரானவர்கள் எவரும் இல்லை.
ஆனால் உரிமைக்கு அறிக்கைவிடும் இவர்கள் உண்மையான நிரபராதிகளுக்கு உதவாமல் இருப்பது ஒன்றும் அதிசயமில்லை ஏன் என்றால் மலையக தமிழ் அரசியல்வாதிகளினால் மேற்கொள்ளப்படும் சகல சட்டவிரோத சம்பவங்களுக்கும் இந்த பொலிஸ் துறை உறுதுணையாக இருக்கின்றது.
உதாரணமாக சட்டவிரோதமான முறையில் அரச காணிகளை தங்களின் சுய நலத்திற்காக பயன்படுத்தல் போன்றவற்றை குறிப்பிட்டு கூறலாம்.
ஆகவே சாதாரண பொது மகனுக்கு அநீதியேற்பட்டால் இவர்கள் மௌனிகளாகிவிடுவதும் சகஜம் இதை மலையக தமிழ் சமூகம் தெரிந்தும் மனக்குமுறலுடனும் அடக்கி கொள்கின்றது.
சிறுபான்மை சமூகத்தை பொருத்தவரை ஜாதி அடிப்படையிலேயே முரண்பாடுகள் பிளவுகள் சிறுபான்மை தமிழ் சமூகத்தின் மத்தியில் மக்களை பிளவுபடுத்தியது சரித்திர உண்மை.
இது தொடருவதே இப்பொழுதும் உள்ள பிரச்சினையாகும். மலையத்தில் சமூகம் என்று தேர்தலுக்கு முன் கூறி வாக்குகளை பெறுவதும் தேர்தலின் பின் ஜாதி என்ற அடிப்படையில் அபிவிருத்தியும் தொடர்ந்து நடைபெறுவதும் உண்மையாகும்.
அவ்வாறே ஜாதி அடிப்படை உயர்வு, தாழ்வு மாற்றம் என்பது தொடர்கின்றப்படியால் தான் தமிழ் சமூகம் பிரிந்து செயல்படுகின்றது. இந்நிலைமை மலையகத்தில் மட்டும் அல்ல வடக்கு கிழக்கு பகுதிகளிலும் மிக தீவிரமாக காணப்படுகின்றது.
இதை மாற்ற சமூக விழிப்புணர்வு அவசியம். எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சமூக அடிப்படையில் செயல்பட்டால் தமிழ் சமூகத்தின் எதிர்காலம் ஒளிமயமாகும்.
ஜாதி அடிப்படையில் சென்றால் சிறுபான்மையில் இருக்கும் பெருபான்மை மக்கள் தொடர்ந்தும் அடிமைகளாக வாழவும் மற்றும் நம் சமூகம் அழிவுக்கு செல்லகூடிய நிலையும் இந்நாட்டில் ஏற்படலாம்.
ஆனால் சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகளோ தங்கள் பெற்றுள்ள இரட்டை பிரஜா உரிமையை பயன்படுத்தி சந்தர்ப்பத்திற்கு ஏற்றது போல் தங்களை மாற்றிக் கொள்வார்கள். இதுவே ஜனாதிபதி தேர்தலின் பின் நடக்கப் போகும் நிதர்சனமாகும்.
மலையக தமிழ் மக்கள் அரசியல் தலைமைகளை தொடர்ந்தும் நம்புகின்றது. ஆனால் தலைமைகளோ சுய உயர்வை நாடுகின்றது. இது ஜனாதிபதி தேர்தலிலும் தொடரும் பலனை அனுபவிக்கப்போவது அரசியல் தலைமைகளே. இது வடக்கு கிழக்கிற்கும் உதாரணமாகலாம்.
மகா
madhavan@hi2mail.com
madhavan@hi2mail.com
http://www.tamilwin.com/show-RUmszARZKXmp2.html
Geen opmerkingen:
Een reactie posten