தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 2 oktober 2014

இலங்கைப் பொருட்களைப் புறக்கணிக்குமாறு சென்னையில் போராட்டம்



நல்ல நிலத்தில் விழுந்த விதையாக உதவிகள் பயன்படுத்தப்பட வேண்டும்: சு.பசுபதிப்பிள்ளை
[ வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2014, 01:04.58 PM GMT ]
வடமாகாண சபையின் பாதீட்டு ஒதுக்கீட்டில், உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளையால் பூநகரி பிரதேசத்தில் மாதர் கிராம அபிவிருத்தி சங்கம், கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு மீள்சுழற்சி நிதி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதிக்கான காசோலைகளை கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
பூநகரி வாடியடி மாதர் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக்கிளையின் உபதலைவருமான பொன்.காந்தன்,
வடமாகாண மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிரதேச மட்டத்திலான கிராம அபிவிருத்திக்கு பொறுப்பான பணிப்பாளர்கள், உயரதிகாரிகள், பூநகரி பிரதேசத்தை சேர்ந்த மாதர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் மீள்சுழற்சி நிதி திட்டத்தின் கீழ் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் குடிசை கைத்தொழிலுக்காக ஜெயபுரம் தெற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு ஒரு லட்சமட் ரூபா, ஜெயபுரம் வடக்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபா, முழங்காவில் விநாயகபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபா,
ஆலங்கேணி கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு 50ஆயிரம் ரூபா, நெற்புலவு கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு 50ஆயிரம் ருபா ஆகிய தொகைக்கான காசோலைகளே இன்று அந்தந்த அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் காசோலைகளை வழங்கி வைத்து கருத்து தெரிவித்த வடமகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை,
இன்று நல்லதொரு சந்தர்ப்பத்தில் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி தருகின்றது.
உங்கள் பொருளாதாரத்தை, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடமாகாண சபையால் ஒதுக்கப்பட்ட நிதியில், எனக்கான தொகையில் ஒரு பகுதியை உங்களுக்கு ஒதுக்கியிருப்பது மகிழ்வை தருகின்றது.
ஆனாலும் இது ஒரு சிறிய தொகைதான். போருக்கு முன்னைய காலத்தில் நீங்கள் பொருளாதாரத்தில் மிக உச்ச நிலையில் இருந்ததை நாம் அறிவோம்.
நாம் ஒன்றாகவே வாழ்ந்தோம். ஆனால் இன்று நமது பொருளாதாரம் சிதைக்கப்பட்டு எமது மக்கள் கடனாளிகளாகவும் கை யேந்துகின்றவர்களாகவும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.
இத்தகைய நிலையிலேயே எம்மை வைத்திருக்க நமது பொருளாதாரத்தை சுரண்ட இன்றைக்கும் ஏராளம் சூழ்ச்சிகளை அரசாங்க தரப்பு செய்து கொண்டிருக்கின்றது.
எமது கடல் மற்றும் காணிகளை வளங்களை அபகரிப்பதற்கும் சுவீகரிப்பதற்கும் அரசாங்கள் தன் கைக்கூலிகளை வைத்து வேலை செய்துகொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் நாம் எமது சொந்த காலில் நிற்கவேண்டியதும் நிர்ப்பந்தம் ஆகிவிட்டது. இதற்கான உதவிகளில் ஒன்றுதான் இந்த குடிசைக் கைத்தொழிலுக்கான மீள்சுழற்சி கடன்.
இந்நிதி உங்கள் கிராமத்தில் உங்களாலேயே முகாமைத்துவம் செய்யப்படவிருக்கின்றது. எனவே இந்த நிதியை நல்ல நிலத்தில் விழுந்த விதையாக எண்ணுமளவில் நீங்கள் அதை இரட்டிப்பாக்கி இன்னும் பலருக்கு நிழல்கொடுக்க வேண்டும்.
அத்தோடு எனது நிதியில் 20 இலட்சம் ரூபா வரையான நிதியை பூநகரி பிரதேசத்தின் கிராமங்களின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஒதுக்கியுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszATWKVfv4.html
ஊழல் சுறாக்களை விட நெத்திலி மீன்களே பிடிபடுகின்றன: ஐ.தே.க எம்.பி
[ வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2014, 01:33.57 PM GMT ]
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நெத்திலி மீன்களை பிடித்தாலும் ஊழலில் ஈடுபடும் சுறா மீன்களை பிடிப்பதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் மக்கள் முறைப்பாடுகளை செய்கின்றனர். குற்றம் சுமத்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற நிலைப்பாடு கட்டியெழுப்பட்டுள்ளது.
எனினும், ஆணைக்குழு ஊழலில் ஈடுபடும் நெத்திலி மீன் போன்ற சிறு நபர்களை கைது செய்த போதிலும் சுறா போன்ற பாரிய ஊழலில் ஈடுபடுபவர்களை கைது செய்வதில்லை.
சுதந்திரமான இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு இருக்குமாயின், இவ்வாறான கவலைக்குரிய நிலைமை ஏற்படாது.
டி.யூ. குணசேகர தலைமையிலான நாடாளுமன்ற பொதுக்கணக்கு தெரிவுக்குழு அறிக்கையை வெளியிட்டுள்ள போதும் ஊழலில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தும் வேலைத்திட்டம் இல்லை.
இதனால், தொடர்ந்தும் அவர்களில், இலஞ்ச, ஊழல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை அரசாங்கம் நிர்மாணிக்கும் பெருந் தெருக்களுக்கான செலவுகளில் 35 வீதமான பணம் பல்வேறு நபர்களுக்கு தரகு பணமாக செல்கிறது எனவும் தலதா அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATWKVfv5.html

கொழும்பில் நங்கூரமிட்டுள்ள பாக்.யுத்தக் கப்பல்கள்
[ வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2014, 02:38.34 PM GMT ]
பாகிஸ்தானின் கடற்படை கப்பல்கள் இரண்டு நல்லெண்ண விஜயமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
மலேசியாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் வழியில் நான்கு நாள் நல்லெண்ண விஜயமாகவே இந்தக் கப்பல்கள் கொழும்பு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை மாலுமி ஷஹீட் இல்யாஸ் தலைமையில் பி.என்.எஸ் என். எ. எஸ். ஆர் மற்றும் எஸ்.எ.ஐ.எப் ஆகிய இரு கடற்படை கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன.
பாகிஸ்தானின் எஸ்.எ.ஐ.எப் கடற்படைக் கப்பல் சீனாவின் F22P போர்க்கப்பலை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கப்பலானது கடல்சார்ந்த செயற்பாடுகளையும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நவீன ஆயுதங்கள், சென்சர் மற்றும் இயந்திரங்களைக் கொண்டதாக இது தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszATWKVfv6.html
ஜனாதிபதி நாளை பாப்பரசரை சந்திக்கிறார்
[ வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2014, 02:43.52 PM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்சிஸை நாளை சந்திக்க உள்ளார்.
வத்திகானின் அபோஸ்தலர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இத்தாலி மற்றும் வத்திகான் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இன்று மதியம் இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
இத்தாலி செல்லும் ஜனாதிபதி தான் தங்கியிருக்கும் காலத்தில் அங்குள்ள இலங்கை சமூகத்தினரை சந்திக்க உள்ளார்.
அத்துடன் வத்திகான் அரச செயலாளர் மற்றும் பிரதமர் ஆகியோரையும் ஜனாதிபதி சந்திக்க உள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATWKVfv7.html

இலங்கைப் பொருட்களைப் புறக்கணிக்குமாறு சென்னையில் போராட்டம்
[ வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2014, 03:03.12 PM GMT ]
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு மாணவர் பேரவையின் ஏற்பாட்டில் இலங்கை புறக்கணிப்பு போராட்டம் இடம்பெற்றது.
இப்போராட்டத்தில் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டு இலங்கைப் பொருட்கள் மற்றும் சேவைகளை புறக்கணிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழர்களை கொடூரமான முறையில் இனப்படுகொலை செய்த இலங்கை நாட்டில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், தின்பண்டங்கள், விளையாட்டு, இலங்கை சேவைகள் என அனைத்தையும் தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர் தியாகு,
இலங்கையை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்று விரிவாக பேசினார். உலக நாடுகள் தென்னாபிரிக்காவிற்கு எதிராக, இஸ்ரேல் நாட்டிற்கு எதிராக நடத்திய புறக்கணிப்பு போராட்டத்தை பற்றியும், காந்தியடிகள் பிரித்தானியா பொருட்களுக்கு எதிராக நடத்திய புறக்கணிப்பு போராட்டங்கள் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.
இலங்கைப் பொருட்களை புறக்கணிப்பதின் மூலம் இலங்கை அரசுக்கு மக்கள் அழுத்தம் கொடுக்க முடியும் என்றும் தமிழீழ மக்களுக்கு இதன் மூலம் நல்லதொரு தீர்வை ஏற்படுத்த இலங்கைக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்று கூறினார்.
இதுபோன்ற போராட்டங்கள் மேலும் விரிவடைய வேண்டும் என்றும், இனப்படுகொலை செய்த இலங்கை அரசை உலக நாடுகள் தனிமைப்படுத்த இப்படியான போராட்டங்கள் எல்லா நாடுகளிலும் தமிழர்களால் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
இறுதியில் இலங்கை பொருட்கள், சேவைகள், விளையாட்டு ஆகிய அனைத்தையும் தமிழக மக்கள் புறக்கணிக்க பரப்புரை மேற்கொள்ளவதாக மாணவர்கள் உறுதி எடுத்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszATWKVfwy.html

Geen opmerkingen:

Een reactie posten