தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 oktober 2014

யாழில் உண்ணாவிரதம் இருந்த முற்போக்கு தமிழ்த் தேசிய கட்சியினர் கைது!



தமிழ் மக்கள் தங்களை நேசிப்பதாக இராணுவம் மனப்பால் குடிக்கிறது: பொ.ஐங்கரநேசன்
[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 04:29.42 PM GMT ]
தமிழ் மக்கள் தங்களை நேசிப்பதாக இராணுவம் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறது என்று வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
இராணுவம் எமது மண்ணைவிட்டு வெளியேற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம் சொல்லவில்லை. தமிழ் மக்களின் நிலைப்பாடும் அதுதான் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் இன்று வடக்கு மாகாண விவசாய அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து விவசாயிகளுக்கு விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றும்போது,
கிளிநொச்சி மாவட்ட இராணுவத் தளபதி இராணுவம், பாடசாலை மாணவர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் நிதி உதவி செய்வதாகப் பெருமைப்பட்டுள்ளார்.
பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்திருக்கிறார். இராணுவம் அவசரகால நிலைமைகளைத் தவிர ஏனைய நேரங்களில் சிவில் நடவடிக்கைகளில் ஈடுபடத் தேவையில்லை.
மாகாண சபையின் மீது மத்திய அரசு பிரயோகிக்கின்ற அழுத்தங்களையும் தாண்டி, ஒதுக்கப்பட்ட சொற்ப அளவு நிதியைப் பயன்படுத்தியே நாம் எமது மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றவேண்டி உள்ளது.
எம்மைச் சுதந்திரமாக இயங்கவிட்டு, போதிய நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டால் எங்களால் எமது மக்களுக்கான அபிவிருத்தியை மிகச் சிறப்பாக முன்னெடுக்க முடியும்.
ஆனால், அரசு மாகாணசபைக்கென்று ஒதுக்கப்பட்ட விடயங்களைக்கூட எங்களுடன் எவ்வித ஆலோசனைளும் இல்லாமல் தன் கையில் எடுக்கிறது.
எல்லா வேலைகளிலும் அழையா விருந்தாளியாக இராணுவத்தை ஈடுபடுத்துகிறது. இராணுவத்திடம் தமிழ் மக்களைக் கையேந்த வைத்தால், காலப்போக்கில் இராணுவத்தின் பிரசன்னத்தை தமிழ் மக்கள் அங்கீகரிப்பார்கள் என்று அரசு தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்மக்கள் இலங்கைப் படையினரை விடுதலைப் புலிகளிடம் இருந்து தங்களை மீட்கவந்த மீட்பர்களாக ஒருபோதும் கருதியதில்லை. படையினரைத் தங்களது சொந்த நிலங்களில் நிலைகொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு இராணுவமாகவே தமிழ்மக்கள் கருதுகிறார்கள்.
ஒரு காலத்தில் வடக்கின் விவசாய அபிவிருத்தியில் பெருபங்காற்றிவந்த வட்டக்கச்சி விதை உற்பத்திப் பண்ணையில் 410 ஏக்கர் இராணுவத்தினரிடமும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திடமும்தான் இருக்கிறது.
இங்கு எங்களது விவசாயத் திணைக்களம் வெறும் 31 ஏக்கரில் மாத்திரம் ஒண்டிக்குடித்தனம் செய்ய வேண்டியிருக்கிறது. அதேபோன்றுதான், இரணைமடுச் சந்தியில் இருந்த எமது விவசாயத் திணைக்களத்துக்குச் சொந்தமான சேவைக்காலப் பயிற்சி நிலையத்திலும் இராணுவமே நிலைகொண்டிருக்கிறது.
இப்படி, எமது நிலங்களை ஆக்கிரமித்து வைத்திருக்கும் படையினரை நாங்கள் எவ்வாறு அபிவிருத்தி இராணுவம் என்று அழைக்க முடியும்? இவர்களை மண்ணில் தொடர்ச்சியாக நிலை கொண்டிருங்கள் என்று எமது மக்கள் ஒரு போதும் கோரமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
வடக்கு விவசாய அமைச்சின் நிதியில் இருந்து கிளிநொச்சி விவசாயிகளுக்கு விதைநெல்
வடக்கு மாகாண விவசாய அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விதைநெல் வழங்கும் நிகழ்ச்சி இன்று கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றுள்ளது.
வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் பி.ஜி 358 ரக விதைநெல் 140 விவசாயிகளுக்கு தலா 3 புசல் வீதம் வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு, உணவுத் தானிய விதைப்புக்காக உவர்த்தன்மையை தாங்கக்கூடிய ஏ.ரி 362ரக நெல்ரகம் 48 பேருக்கு தலா மூன்று புசல் வீதம் வழங்கப்பட்டுள்ளது.
நெல் ரகங்கள் தவிர, அன்னாசிப் பழச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் நல்லின அன்னாசி உறிஞ்சிகளும், வெங்காய உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் தூய விதை வெங்காயமும் வழங்கப்பட்டது.
வெங்காயத்தைக் களஞ்சியப்படுத்தும் தொட்டிகளும் அமைப்பதற்காக 5 விவசாயிகளுக்கு தலா 50,000 ரூபாவும் வழங்கி வைக்கப்பட்டது.
விவசாயத்தில் இரசாயனங்களைப் பயன்படுத்துவதால் நிலத்தடிநீர் மோசமாக மாசடைவதாகப் பலராலும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு பீடைநாசினிப் போத்தல்களை கிணறுகளுக்கு அருகாமையில் வீசாமல் பாதுகாப்பான முறையில் சேகரிப்பதற்காக பெரிய பிளாஸ்ரிக் தொட்டில்களும், இயற்கைப் பசளை ஊக்குவிப்பாக சணல் விதைகளும் வழங்கப்பட்டன.
இந் நிகழ்ச்சியில் வழங்கி வைக்கப்பட்ட விவசாய உள்ளீடுகளின் மொத்தப் பெறுமதி 1.3 மில்லியன் ரூபாய்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதி விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராசா தலைமையில் நடைபெற்ற விவசாய உள்ளீடு வழங்கும்  இந் நிகழ்ச்சியில், வடமாகாணக் கல்வியமைச்சர் த.குருகுலராஜா, மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், உதவி விவசாயப் பணிப்பாளர் அஞ்சனா பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் சுதாகரன், விதைகள் ஆராய்ச்சிப் பிரிவுப் பணிப்பாளர் எஸ்.ஜே.அரசகேசரி ஆகியோருடன் அதிக எண்ணிக்கையான விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszATXKVes0.html

யாழில் உண்ணாவிரதம் இருந்த முற்போக்கு தமிழ்த் தேசிய கட்சியினர் கைது
[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 04:45.47 PM GMT ]
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி யாழ்.குடாநாட்டில் புதிதாக உருவாகியிருக்கும் முற்போக்கு தமிழ் தேசிய கட்சி என்னும் கட்சியினரை இன்றிரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அக்கட்சியினர் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கு திருட்டு மின்சாரம் பெற்றதாகவும் பொலிஸார் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
ஈ.பி.டி.பி அமைப்பின் யாழ்.மாநகரசபை உறுப்பினராக இருந்து, பின்னர் திருட்டுக் குற்றச்சாட்டு தொடர்பில் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விஜயகாந்த் என்பவர் முற்போக்கு தமிழ்த் தேசிய கட்சி என்ற ஒன்றை உருவாக்கி அதன் செயலாளர் நாயகமாக இருக்கின்றார்.
இந்நிலையில் இவர் தொடர்ச்சியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போன்று தமிழ்த் தேசிய பிரச்சினைகள் தொடர்பில் அதிகம் பேசுவதும், அவை ஊடகங்களில் இடம்பெறும் வகையில் போராட்டங்கள் உண்ணாவிரதங்களை நடத்துவதனையும் தொடர்ச்சியாக செய்து வருகின்றார்.
இதேபோன்றே இன்றைய தினமும் யாழ்.நல்லூர் ஆலயச் சுற்றாடலில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தினை காலை 9 மணி தொடக்கம் முன்னெடுத்திருந்தார்.
இந்நிலையில் மாலை 9 மணியளவில், இவர் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.
இதற்கு பொலிஸார் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டு இவர்கள் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கு திருட்டு மின்சாரம் பெற்றார்கள் என்பதே.
இந்நிலையில் மேற்படி உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATXKVes1.html

Geen opmerkingen:

Een reactie posten