சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு வருத்தம் தெரிவித்து, தமிழ்த் திரையுலகினர் நேற்று செவ்வாய்க்கிழமை மௌன உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.
சென்னை - சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு காலை 9 மணி அளவில் தமிழ்த் திரையுலகினர் மௌன உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.
நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், கேயார், சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, பிரபு, விக்ரம் பிரபு, சிபிராஜ், அபிராமி இராமநாதன், நடிகை சச்சு, நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா உள்ளிட்ட நடிகர் நடிகைகள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
முன்னணி நடிகர்களான சூர்யா, கார்த்தி, விக்ரம், சிவகார்த்திகேயன், சூரி, விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் பாலா உள்ளிட்டவர்கள் மதியத்திற்கு மேல் கலந்து கொண்டு தங்களது ஆதரவைத் தெரிவித்தார்கள். பலரும் 30 நிமிடத்திற்குள் உண்ணாவிரதப் போராட்டப் பந்தலில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உண்ணாவிரதப் பந்தலில் யாருமே காலை முதலே பேசவில்லை. தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களுக்கு மட்டும் சிறு பேட்டிகள் அளித்தார்கள்.
மாலை 4:30 மணியளவில் முதலில் பேசிய இயக்குநர் செல்வமணி, "இந்த உண்ணாவிரதப் போராட்டம் மூலமாக தமிழக மக்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம். யாரும் தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள்.
ஏற்கனவே சோகத்தில் இருக்கிறோம். மேலும் சோகம் வேண்டாம்" என்றார்.
வாசிக்கப்பட்ட அறிக்கை...
அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் டி.சிவா அனைத்து சங்கங்களின் சார்பாக அறிக்கை ஒன்றிணை வாசித்தார்.
அந்த அறிக்கையில்
"தமிழ் திரையுலகினர் சார்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்,தென்னந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னந்திய நடிகர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம், தொழிலாளர்கள் சம்மேளனம், சென்னை திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், சின்னத்திரை நடிகர்கள் கூட்டமைப்பு, பி.ஆர்.ஒக்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் ஒன்றிணைந்து மாபெரும் மவுன உண்ணாவிரத அறப் போராட்டம் நடத்தினோம்.
அனைத்து சங்கங்களின் குரலாக, ஓங்கிய குரலாக ஏகமனதாக ஒர் தீர்மானத்தினை நிறைவேற்றி இருக்கிறோம். அனைத்து தமிழக மக்களின் வாழ்வாரதத்தை உயர்த்திய, உலக தமிழ் மக்களின் உரிமையை பாதுகாத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது புனையப்பட்ட வழக்குகளில் இருந்து, நீதிமன்றத்தின் மூலமாகவே குற்றமற்றவர் என்று அறிவிக்கப்பட்டு மிக விரைவில் விடுதலையடைந்து, மீண்டும் தமிழக முதல்வர் அரியணையில் அமர வேண்டும் என்ற ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஆசை நிறைவேற தமிழ் திரையுலகம் பிரார்த்தனை செய்கிறது.
ஆகவே எங்களின் பிரார்த்தனை நிறைவேறி செல்வி ஜெயலலிதா அவர்கள் மீண்டும் முதல்வர் அரியணையில் அமர்வது உறுதி" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதனைத் தொடர்ந்து நடிகர் சரத்குமார் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர், உண்ணாவிரதப் பந்தலில் இருந்த சரத்குமார் உள்ளிட்டவர்களுக்கு பழரசம் கொடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்தார்.
முடிவுற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ரஜினி, கமல்,அஜித், விஜய் உள்ளிட்டவர்கள் பங்கேற்கவில்லை. 'லிங்கா' படப்பிடிப்பில் ரஜினியும், கமலுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அஜித் படப்பிடிப்பில் தீவிரம்,'கத்தி' படப்பிடிப்பில் விஜய் மும்முரம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.
http://www.tamilwin.com/show-RUmszATVKVgw4.html
Geen opmerkingen:
Een reactie posten