தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 20 maart 2014

ஜெனிவா தீர்மானத்துக்கு எதிராக திருகோணமலையில் கடையடைப்பு

யாழில் பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையில் இளைஞர்கள் - கஞ்சாவுடன் மானிப்பாயில் ஒருவர் கைது - A-9 வீதியில் ஒருவர் கைது
[ வியாழக்கிழமை, 20 மார்ச் 2014, 08:12.52 AM GMT ]
வடமாகாணசபையின் விவசாய அமைச்சு 400 இளைஞர்களையும் யுவதிகளையும் கொண்ட பார்த்தீனியம் ஒழிப்புப் படையணியொன்றை உருவாக்கிப் பார்த்தீனியத்தை ஒழித்து வருகிறது.
யாழ் மாவட்டத்தில் பார்த்தீனியம் அதிக அளவில் காணப்படும் புத்தூர்ப் பகுதியில் இளைஞர்கள் பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கஞ்சாவுடன் மானிப்பாயில் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேசத்தில் கஞ்சா போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ் மாவட்ட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 4.750 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
மானிப்பாய் பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் இன்று யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.
A-9 வீதியில் ஒருவர் கைது
மதுபோதையில் ஏ-9 வீதியின் நடுவில் படுத்துக் கிடந்த ஒருவரை, பளை பொலிஸார் நேற்று நள்ளிரவு கைது செய்துள்ளனர்.
மதுபோதையில் பஸ் ஒன்றில் பயணித்து கொண்டிருந்த நபர், பஸ்ஸில் பயணிக்கு ஏனைய பயணிகளுக்கு இடையூராக இருந்ததால், நடுவில் இறக்கி விடப்பட்டுள்ளார்.
இவ்வாறு இறக்கி விடப்பட்டவர், ஏ-9 வீதியின் நடுவில் படுத்துள்ளார். இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் இன்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். 

ஜெனிவா தீர்மானத்துக்கு எதிராக திருகோணமலையில் கடையடைப்பு
[ வியாழக்கிழமை, 20 மார்ச் 2014, 10:00.11 AM GMT ] [ பி.பி.சி ]
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக திருகோணமலை நகரில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
அநுராதபுரம் சந்தியிலிருந்து மணிக்கூட்டு கோபுரம் வரை கண்டனப் பேரணியொன்றும் நடைபெற்றது.
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதி நடவடிக்கைகளை முறியடிப்போம் என்ற தலைப்பில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஓன்றியம் என குறிப்பிடப்பட்ட துண்டுப் பிரசுரமொன்றின் மூலம் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
திருகோணமலை நகரப் பிரதேசத்தில் அனுஷ்டிக்கப்படும் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் காரணமாக திருகோணமலை நகரிலும் அண்மித்த பகுதிகளிலும் வழமை நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
காலையில் போக்குவரத்து சேவை வழமை போல் ஆரம்பமான போதிலும் ஆங்காங்கே இடம்பெற்ற கல் வீச்சுக்கள் மற்றும் தாக்குதல்களையடுத்து போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன.
இந்த தாக்குதல்களில் சில பஸ் வண்டிகளின் முன் பக்கக் கண்ணாடிகளும் சேதமடைந்துள்ளன.
அரசாங்க தனியார் அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் இயங்கவில்லை. வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் வீதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
குறிப்பாக தமிழர்களை பொறுத்தவரை ஒரு வித அச்ச உணர்வு காரணமாக இன்று தங்களது வெளிநடமாட்டத்தை தவிர்த்துக் கொள்ளும் வகையில் தமது வீடுகளிலே முடங்கி இருப்பதாக கூறப்படுகின்றது.
அனுராதபுரம் சந்தியிலிருந்து மணிக்கூட்டு கோபுரம் வரை திருகோணமலை நகரில் நடைபெற்ற கண்டன பேரணியில் கலந்து கொண்டவர்கள் அமெரிக்கா மற்றும் ஐ. நா மனித பேரவை உட்பட சில நாடுகளுக்கு எதிரான வாசக அட்டைகளையும் தமது கைகளில் ஏந்தியவாறு காணப்பட்டனர்.
இந்த பேரணியில் பௌத்த பிக்குகள் உட்பட சிங்கள மக்களே பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டதாகத் தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.
பேரணி முடிவில் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் ஐ .நா மனித உரிமைகள் ஆணையாளர் ஆகியோரின் உருவ பொம்மைகளும் எரிக்கப்பட்டன.
ஹர்த்தாலுக்கும் பேரணிக்கும் அழைப்பு விடுத்த அமைப்பு ஒரு அநாமேதய அமைப்பு என தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது.
அரசாங்க ஆதரவு செயல்பாட்டாளர்களினாலே பின்புலத்திலே இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம் தெரிவித்திருக்கின்றார்.

Geen opmerkingen:

Een reactie posten