தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 2 maart 2014

ராஜிவ் படுகொலை! உண்மைக் குற்றவாளிகள் வெளியில்தான் இருக்கிறார்கள்!- வீடு கொடுத்தவர் போடும் விடுகதை!

 [ விகடன் ]
பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வதாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதைத் தொடர்ந்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு போட்டுள்ளது. அதனால், அவர்களின் விடுதலை தாமதமாகிறது.
இந்தச் சூழ்நிலையில் பெங்களூரில் ராஜீவ் காந்தி கொலையாளிகளான ஒற்றைக்கண் சிவராசன், சுபா போன்றோருக்கு வீடு கொடுத்த ரங்கநாத்தை பெங்களூரு பசனக்குடியில் இருக்கும் அவரது வீட்டில் சந்தித்தோம்.
ராஜீவ் கொலை சம்பவத்தால் காவல்துறை சித்திரவதைக்கு ஆளாகி, தலைக்குப் போகிற இரத்தக்குழாய்களில் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, அடிக்கடி மயங்கி விழுந்து விடுகிறார் என்று அவருடைய மனைவி மிருதுளா கலங்கி நிற்க, ரங்கநாத் மெள்ளப் பேசத் தொடங்கினார்.
ராஜீவ் காந்தி கொலைக்கும் உங்களுக்குமான தொடர்பு என்ன?
விடுதலைப் புலிகள் பெங்களூருக்கு வந்து, வாடகைக்கு வீடு எடுத்து தங்குவது சர்வசாதாரண விஷயம். அவர்களின் தோழமைக் கழகம்கூட இங்குதான் இருந்தது. ராஜீவ் கொலை மே 21-ம் தேதி நடந்தது. இரண்டு மாதங்கள் கழித்து ஆகஸ்ட் 1-ம் தேதி என்னுடைய நண்பர் ராஜன் எட்டு பேரை பெங்களூரில் புட்டனஹள்ளியில் உள்ள என் வீட்டுக்குக் கூட்டிவந்து, இவர்கள் இலங்கையில் போரில் பாதிக்கப்பட்டவர்கள். ராஜீவ் காந்தி கொலையால் தமிழ்நாட்டில் மருத்துவம் செய்ய மறுக்கிறார்களாம். அதனால் பெங்களூரில் தங்கி மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு மாதத்துக்கு வீடு வாடகைக்கு எடுத்துக்கொடு என்று சொன்னார்.
ஒரு மாதத்துக்கு யாரும் வீடு கொடுக்க மாட்டாங்க. எங்க மாடி போர்ஷன் காலியாகத்தான் இருக்கு. தங்கிக்கொள்ளுங்கள் என்றேன். ராஜன் உள்ளிட்ட எட்டு பேர் தங்கினார்கள். அடுத்த நாள் நள்ளிரவில் சிவராசன், சுபா, நேரு, சுரேஷ் மாஸ்டர், அமான், கீர்த்தி, ரங்கன் என ஏழு பேர் வந்தார்கள். அவர்களும் தங்கினார்கள். 'புதியதாக வந்திருக்கிற இவர்கள் யார்?’ என்று சூரி என்பவரிடம் நான் கேட்டேன். இவங்கள் எங்க நண்பர்கள். அவர்களும் போரினால் பாதிக்கப்பட்டவர்கள். மருத்துவ சிகிச்சைக்காக வந்திருக்கிறார்கள். ஓரிரு நாட்களில் கிளம்பிடுவாங்க என்றார்.
இது எனக்கும் என் மனைவிக்கும் பிடிக்கவில்லை. நான்கு, ஐந்து நாட்கள் கழித்து, டி.வி யில் தேடப்படும் ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் என்று சிவராசன், சுபா, நேரு என இவர்கள் போட்டோக்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். எல்லோரையும் வீட்டைவிட்டு காலி பண்ணச் சொன்னேன். மாறாக அவர்கள், வெளியில் ஏதாவது மூச்சுவிட்டால் கொன்று விடுவதாக மிரட்டினார்கள். மற்றபடி எனக்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ராஜீவ் கொலைக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
அவர்களிடம் ராஜீவ் காந்தி படுகொலை பற்றி நீங்கள் கேட்கவில்லையா?
முதல் இரண்டு நாட்கள் மிரட்டினார்கள். அப்புறம் சாதாரணமாக அன்பாகப் பேசினார்கள். நானும் என் மனைவியும் காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஏன் எங்கள் தலைவர் ராஜீவ் காந்தியை கொன்றீர்கள்?  என்று கோபமாகக் கேட்டோம். அதற்கு சிவராசனும் சுபாவும் கத்தை கத்தையாக போட்டோக்களையும் பேப்பர்களையும் எடுத்து எங்களிடம் காட்டினார்கள். ராஜீவ் காந்தி அனுப்பிய அமைதிப்படையால் எங்கள் இனம் ஈழத்தில் அழிந்த கொடுமைகளைப் பாருங்கள்.
உங்க ஊர் பத்திரிகைகளில் இதையெல்லாம் எழுத மாட்டார்கள் என்று இன்டர்நேஷனல் ஹெரால்ட் டெர்மினல் என்ற பத்திரிகையைக் காட்டினார்கள். பள்ளி செல்லும் சின்னக் குழந்தைகள் முதல் வயதான பாட்டிகள் வரை கற்பழித்துக் கொலை செய்யப்பட்டிருந்ததை எழுதி இருந்தனர். அமைதிப்படையால் பலர் கற்பழிக்கப்பட்டதும் 5,000 பேர் காணாமல் போனதையும் 12 ஆயிரம் பேர் இறந்து போனதையும் 50 ஆயிரம் பேர் குடிபெயர்ந்து போனதையும் ஆதாரபூர்வமாகச் சொல்லி கண்கலங்கினார்கள். அவர்கள் கோபத்துக்கு இதுதான் காரணம்.
அப்புறம் என்ன நடந்தது?
அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு சந்தேகம் வந்துவிடும் என்பதால், என் மூலமாகவே வேறு வீடு வாடகைக்கு எடுத்துத் தரச் சொன்னார்கள். கோனேகொண்டேவில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்தேன். அந்த வீட்டில் சிவராசன், சுபா, நான், என் மனைவி உட்பட ஒன்பது பேர் தங்கினோம். அடுத்து முத்தத்திக்காட்டில் உள்ள என்னுடைய நண்பர் வீடு காலியாக இருந்தது. அந்த வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொடுத்தேன். உடல் காயம் ஏற்பட்டிருந்தவர்கள் அங்கு தங்கினார்கள்.
அந்த இடம் வீரப்பன் ஏரியா என்பதால், வீரப்பன் தேடுதல் வேட்டைக்கு வந்த போலீஸைப் பார்த்து தங்களைத்தான் பிடிக்க வருகிறார்கள் என்று பயந்து, வீட்டின் கதவைப் பூட்டி குப்பியை நுகர்ந்து 12 பேர் இறந்தார்கள். காவல் துறை அந்த இடத்தைச் சுற்றிவளைத்ததில் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர். இது ஆகஸ்ட் 17-ம் தேதி நடந்தது.
அடுத்த நாள் இரவே நாங்கள் தங்கியிருந்த கோனேகொண்டே வீட்டைச் சுற்றிவளைத்தது போலீஸ். மறுநாள் காலையில் போலீஸார் துப்பாக்கியால் சுட்டார்கள். குப்பியை நுகர்ந்து வீட்டுக்குள்ளேயே ஏழு பேரும் இறந்தனர். முத்தத்திக்காட்டில் 17-ம் தேதி சம்பவம் நடந்ததும், என் மனைவியை வீட்டைவிட்டுக் கிளம்பிப்போகச் சொல்லிவிட்டனர். அவரது தம்பி வீட்டுக்கு அவர் போய்விட்டார். துப்பாக்கிச் சூடு நடந்தபோது நானும் வெளியே வந்துவிட்டேன். வீட்டுக்குப் போனதும் என்னையும், அதன் பிறகு என் மனைவியையும் கைதுசெய்தார்கள்.
முதன்முதலில் முருகன், பேரறிவாளன், சாந்தனை எப்போது சந்தித்தீர்கள்? இதுபற்றி அவர்களிடம் கேட்டதுண்டா?
என்னைக் கைதுசெய்து ஜெ. நகர் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போனார்கள். பிறகு, கங்கா நகரில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஒப்படைத்தனர். ஹெலிகாப்டர் மூலமாக சென்னை ஆவடி, மல்லிகை அரங்கம், பூந்தமல்லி சிறை, செங்கல்பட்டு சிறை என பல இடங்களுக்கு மாற்றினர். செங்கல்பட்டு சிறைச்சாலையில்தான் இவர்களைச் சந்தித்தேன்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் எல்லோருக்கும் 19, 20 வயதுதான். விளையாட்டுத்தனமாக இருந்தார்கள். இரண்டு வருடம் கழித்து அவர்களிடம் நன்றாகப் பேசிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான், 'ஏன் தம்பி இந்தச் செயல்களில் ஈடுபட்டீர்கள்?’ என்று கேட்டேன். 'சத்தியமாக இந்தக் கொலையைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது’ என அவரவர் சூழ்நிலைக் கைதிகளான கதைகளைச் சொன்னார்கள்.
ஏன், எதற்கு என்று தெரியாமலேயே பேரறிவாளன் பற்றரி வாங்கிக் கொடுத்ததாலும்; சிவராசன் வந்த படகில் சாந்தனும் வந்த குற்றத்துக்காகவும்; நளினியின் தம்பி இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதால் நளினி, முருகன் மாட்டியதும் தெரியவந்தது. இவர்களில் ஒருவர்கூட குற்றவாளிகள் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டேன். இவர்களோடு ஒன்பது வருடங்கள் நானும் சிறையில் இருந்தேன்.
பேரறிவாளன் தனக்கு இல்லை என்றாலும் மற்றவர்களுக்கு உதவும் குணம் உடையவன். சாந்தன் சிறந்த சிந்தனையாளன். அற்புதமான கற்பனை நீதிக்கதைகளை எழுதக் கூடியவன். முருகன் தீவிர பக்திமான். இவர்கள் எல்லோரும் ஒரு எறும்புக்குக்கூட துன்பம் ஏற்படுத்தாதவர்கள்.
இவர்கள் நிரபராதிகள் என்றால், ராஜீவ் படுகொலைக்குப் பின்புலமாக இருந்தவர்கள் யார்?
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 26 பேரில் 19 பேர் 1999-ல் தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுதலை ஆனோம். அப்போது தமிழ்நாட்டில் உள்ள ஒரு முக்கிய காங்கிரஸ் பிரமுகர், சோனியா காந்தி உங்களைப் பார்க்க நினைக்கிறார் என்று சொல்லி அழைத்துப் போனார். டெல்லியில் அர்ஜுன் சிங்கை சந்தித்து விட்டு, தனி அறையில் சோனியாவோடு 45 நிமிடங்கள் பேசினேன். அப்போது நீங்கள் கேட்கும் அதே கேள்வியைத்தான் அவர்களும் கேட்டார்கள்.
இந்திய அமைதிப்படை செய்த கொடூரத்தால்தான் ராஜீவைக் கொன்றிருக்கிறார்கள். அதற்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தது சந்திராசாமி. அவரின் உதவியால் ஓரிரு நாட்களுக்குள் நேபாளம் போய்விடுவதாகவும் என் வீட்டில் தங்கியிருந்தவர்கள் சொன்னார்கள். அது சம்பந்தமாக அடிக்கடி சந்திராசாமியிடம் அவர்கள் போனில் பேசியதை நானே கேட்டிருக்கிறேன். சந்திராசாமியை விசாரித்தால் எல்லா உண்மையும் தெரியும்.
அதுமட்டுமல்ல, ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் கொலையாவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே, அவர் படுகொலை செய்யப்பட்ட இடத்தை இரண்டு பேர் பார்த்திருக்கிறார்கள். இதுகுறித்து, டெல்லி செல்லுவதற்காக நானும் சந்திராசாமியும் சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்துக்கு வந்தோம். டெல்லிக்கு ஃபிளைட் இல்லாததால் இருவரும் காரில் பெங்களூரு விமான நிலையத்துக்குச் சென்றோம்.
அப்போது அந்த இடத்தில் யூரின் போவதற்காக காரை நிறுத்தினோம் என்று ஒருவர் சொல்லியிருப்பது ஜெயின் கமிஷனில் பதிவாகி இருக்கிறது. இதையெல்லாம் தெளிவாக விசாரித்தால் உண்மைகள் தெரியவரும் என்று சோனியாவிடம் சொன்னேன். ஆனால், அவரே அதனைக் கண்டுகொள்ளவில்லை.
வீடு கொடுத்தவனுக்கும், பொருள் வாங்கி கொடுத்தவனுக்கும் அடி, உதை, சிறைக் கொடுமை, தூக்குத் தண்டனை. ஆனால், சிவராசன் இறக்கும் வரை யார் யாருடன் தொடர்பில் இருந்தாரோ... அவர்கள் எல்லாம் நிம்மதியாக இருக்கின்றனர். அவர்கள் யார் என்பது காங்கிரஸ் அரசுக்குத் தெரியும். அவர்களைக் கைதுசெய்யாதது ஏன்? - கேள்விகளோடு முடிக்கிறார் ரங்கநாத்!

Geen opmerkingen:

Een reactie posten