[ புதன்கிழமை, 05 மார்ச் 2014, 04:29.17 AM GMT ]
போர்க் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை நடாத்த வேண்டுமென இலங்கை மனித உரிமை அமைப்புக்கள் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரியுள்ளன.
மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையம் உள்ளிட்ட 24 அமைப்புக்கள் கூட்டாக இணைந்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.
குற்றச்செயல்கள் தொடர்பில் அரசாங்கம் மெய்யான அர்ப்பணிப்புடன் விசாரணை நடத்தவில்லை.
போர் இடம்பெற்ற காலத்தைப் போன்றே அதன் பின்னரும் குற்றச் செயல்கள் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக வடக்கு மக்களின் உரிமைகள் முடக்கப்பட்டுள்ளதுடன் படையினர், சிவிலியன் கருமங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பால் நிலை சமத்துவம் தொடர்பிலான பிரச்சினகள் தொடர்ந்தும் நீடித்து வருகின்றன.
சிறுபான்மை மதங்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன.
அரசாங்கத்தினால் நிறுவப்படும் ஆணைக்குழுக்களின் விசாரணைளில் திருப்தி அடைய முடியாது. எனவே, சர்வதேச ரீதியான விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை அமைத்து அதன் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும்.
குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுவதனை உறுதி செய்வதன் மூலமே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என குறித்த மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையில் நிலைமை மோசமடைந்துள்ளது! சர்வதேச விசாரணை தேவை: தென்னாபிரிக்க பேராயர் !
இலங்கையில், இறுதிப்போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று தென்னாபிரிக்காவின் பேராயர் டெஸ்மன் டுட்டு கோரிக்கை விடுத்துள்ளார்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு அவர் உட்பட்ட பல மனித உரிமை நடவடிக்கையாளர்கள் கையெழுத்திட்டு இந்தக்கோரிக்கையை அனுப்பி வைத்துள்ளனர்.
அதில் இலங்கையின் இறுதிப் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளுக்காக ஒரு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
அதுவே இலங்கையில் நல்லிணக்கத்தையும் நீதியையும் ஏற்படுத்தும் என்று கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையின் போர் முடிந்துவிட்டதாக கூறப்படுகின்ற போதும் இன்னும் மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு முன்வைக்கப்படவில்லை. ஜனநாயக பண்புகள் மறுக்கப்படுகின்றன.
மனித உரிமைகள் தொடர்ந்தும் மீறப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தநிலையில் போர்க்காலத்தை காட்டிலும் நிலைமை மோசமடைந்துள்ளதாக டுட்டு குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனைவிட இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் திட்டமிட்ட புறக்கணிப்புகள் இடம்பெறுகின்றன.
இந்தநிலையில் இந்த நூற்றாண்டில், இரண்டு தரப்புக்களும் பாரிய மனித உரிமை மீறல்கள் ஈடுபட்டுள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துவதன் மூலமே இலங்கையில் இறுதி சமாதானத்தை எய்தமுடியும் என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில் தென்னாபிரிக்காவின் பேராயர் டெஸ்மன் டுட்டு, தென்னாபிரிக்காவின் மனித உரிமைகள் நிதிய பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, மன்னார் ஆயர் ஜோசப் ராயப்பு, நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன், தென்னாபிரிக்காவின் பொதுமக்கள் அமைப்பின் செயலாளர் டெனி ஸ்ரீஸ்கந்தராஜா, மலேசியாவின் மனித உரிமைகள் ஆர்வலர் இரானே பெர்ணான்டஸ், இலங்கை ஜனநாயகம் மற்றும் நாட்டில் இருந்து வெளியேறியுள்ள சிங்கள ஊடகவியலாளர் பாசன அபேவர்த்தன, உகண்டாவின் சிறுவர் நல திட்ட பணிப்பாளர் மாக்கி டக்ரி, பிரேசிலின் மனித உரிமையாளர் பிலேவியா பியோவேசன் உட்பட்ட மேலும் 28 மனித உரிமை நடவடிக்கையாளர்கள் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்
Geen opmerkingen:
Een reactie posten