பாலேந்திரன் ஜெயக்குமாரி ஆயுத குற்றத்தை வளர்த்தமை தொடர்பில் தேடப்பட்டவர் எனவும் அவருக்கு எதிராக சட்ட ரீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.
வடக்கில் அண்மையில் புலிகளின் பிரசாரகர்களினால் தேசிய ஐக்கியத்திற்கு குந்தகம் ஏற்படும் வகையிலான துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தமை தொடர்பில் சட்ட அதிகாரிகள் குழுவொன்று விசாரணைகளை நடத்தியது.
அது தொடர்பாகவும் போருக்கு பின்னர் வவுனியா நலன்புரி நிலையத்தில் இருந்து தப்பியோடிய முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினரான கோபி என்ற நபர் தொடர்பிலும் ஜெயகுமாரியிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கோபி என்ற சந்தேக நபர் கிளிநொச்சியில் உள்ள வீடொன்றில் மறைந்து இருப்பதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து நேற்று முன்தினம் அவரை கைது செய்வதற்காக அதிகாரிகள் குழுவொன்று அங்கு சென்றிருந்தது.
அப்போது அந்த நபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றார். இதில் காயமடைந்த அதிகாரி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மறைந்திருந்த வீட்டை சோதனையிட்ட போது நிலத்தடியில் புதைக்கப்பட்ட உலோக பொருட்கள் மற்றும் சுரங்கங்களை கண்டறிய பயன்படுத்தப்படும் எப்.3 ரக உலோகங்களை கண்டுபிடிக்கும் கருவி கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் தேடப்பட்ட வீட்டின் உரிமையாளரான பாலேந்திரன் ஜெயக்குமாரி கைது செய்யப்பட்டார்.
அவரது 13 வயதான மகள் பாதுகாப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சட்டரீதியான நடவடிக்கைகள் மூலமே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்த பெண் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அரசியல்வாதிகள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூறி வரும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றதும் அடிப்படையற்றதுமாகும்.
அரசியல் நோக்கம் மற்றும் உண்மையை மறைத்து தவறாக வழிநடத்தும் நோக்கில் வெளியிடப்பட்டு வரும் அறிக்கைகளை நாம் நிராகரிக்க வேண்டும்.
தற்போதுள்ள சட்ட வரம்புக்குள், சமாதானம், ஒருமைப்பாடு மற்றும் தேசிய ஒற்றுமையை உறுதிப்படுத்தும் வகையில் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் உரிய வகையில் நடவடிக்கையை எடுத்துள்ளனர் என இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டிலேயே ஜெயக்குமாரி கைது செய்யப்பட்டார் – பொலிஸார், இராணுவம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே ஜெயக்குமாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சியைச் சேர்ந்த பாலேந்திரன் ஜெயக்குமாரி என்பவரை கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கு புகலிடம் வழங்கியதாக குறித்த பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, விடுதலைப் புலிச் சந்தேக நபருக்கு புகலிடம் வழங்கியதன் காரணமாக ஜெயக்குமாரியை கைது செய்துள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
குறித்த பெண்ணின் வீட்டிலிருந்து இரும்பு பொருட்களை கண்டபிடிக்கக் கூடிய கருவியொன்று மீட்கப்பட்டுள்ளதாக இராணுப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
குறித்த பெண்ணின் 13 வயது மகளையும், பொலிஸாரின் பொறுப்பிற்கு எடுக்க நேரிட்டது.
அயலவர்கள் எவரும் குறித்த சிறுமியை பராமரிக்க விரும்பாத காரணத்தினால் சிறுவர் காப்பகமொன்றில் தங்க வைக்கும் நோக்கில் சிறுமியையும் பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.
ஜெயக்குமாரி, அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய காரணத்தினால் கைது செய்யப்பட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவா குறிப்பிட்டுள்ளார்.
http://news.lankasri.com/show-RUmsyDSZLVfrz.html
Geen opmerkingen:
Een reactie posten