தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 15 maart 2014

கோண்டாவிலில் படையினர் இளைஞர்கள் மீது தாக்குதல்: விபத்தையடுத்து முறுகல்: இளைஞர்கள் நால்வர் காயம்

யாழ்ப்பாணம் கோண்டாவிலில் சிறிலங்கா படையினருக்கும் இளைஞர்களுக்குமிடையே இடம்பெற்ற முறுகல் நிலையைத் தொடர்ந்து அங்கு குழுமிய நூற்றுக்கணக்கான படையினர் இளைஞர்களைத் துரத்தி துரத்தி தாக்கியுள்ளனர். இதனால் அந்த இடத்தில் நேற்றிரவு பதட்டம் நிலவியது.
சிறிலங்கா படையினரின் நோயாளர் காவு வண்டி அந்த வீதியால் பயணித்த இளைஞர்களின் இரு மோட்டார் சைக்கிள்களை மோதித் தள்ளி நான்கு இளைஞர்களைக் காயப்படுத்தியதைத் தொடர்ந்தே படையினருக்கும் இளைஞர்களுக்குமிடையே முறுகல் ஏற்பட்டது.
இராணுவ முகாமொன்றிலிருந்து நோய்வாய்ப்பட்ட படையினரை ஏற்றிக்கொண்டு மிக வேகமாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்றுகொண்டிருந்த இராணுவ நோயாளர் காவு வண்டி கோண்டாவில் இலங்கை போக்குவரத்துச் சபை சாலைக்கு அண்மையில் இரு மோட்டார் சைக்கிள்களை மோதித் தள்ளியது. இதில் ஒரு இளைஞர் படுகாயமடைந்துடன் மேலும் மூன்று இளைஞர்;கள் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தில் படையினரிலேயே முழுப் பிழையும் இருக்கின்ற நிலையில் காயமடைந்து வீதியில் கிடந்த இளைஞர்களையும் கண்டுகொள்ளாமல் படையினர் தமது நோயாளர் காவு வண்டியை எடுத்துச் செல்ல முற்பட்டனர். ஆனால், அதற்கு அனுமதி வழங்காத இளைஞர்கள் காவல்துறையினர் வரும்வரை அந்த இடத்திலிருந்து நோயாளர் காவு வண்டியை அகற்றக்கூடாது என்று படையினருக்கு கூறினர்.
இந்த முரண்பாடுகளுக்கு மத்தியில் அங்கு திடீரென மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்து இறங்கியவுடன் அங்கு குழுமிநின்ற இளைஞர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்களை மேற்கொண்டனர். இதனால் இளைஞர்கள் நாலாபுறமும் சிதறி ஒடினர். சம்பவத்தைக் கேள்வியுற்று அந்த இடத்திற்குச் சென்ற ஊடகவியலாளர்களையும் படையினர் அங்கு செல்ல அனுமதிக்கவில்லை. கொட்டன்களுடன் நின்ற படையினர் அனைவரையும் திருப்பியனுப்பினர். இவ்வாறான நிலையில் எந்தவித தடயங்களும் இல்லாதவாறு தமது நோயாளர் காவு வண்டியை அந்த இடத்திலிருந்து மீட்டுச் சென்றனர்.
இதனால் அந்த இடத்தில் நேற்றிரவு பதட்டமான சூழல் நிலவியது. படையினர் அந்த இடத்தை விட்டுச் செல்லும் வரையான இரவு 10 மணி வரை அந்த வீதியூடாக மக்கள் போக்குவரத்துக்கள் முடக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, விபத்தில் காயமடைந்த இளைஞர்கள் நால்வரும் யாழ். போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஒரு இளைஞரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது.
http://www.jvpnews.com/srilanka/62661.html

Geen opmerkingen:

Een reactie posten