கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல், மனிதாபிமான நடவடிக்கை மேற்கொள்ளாமை, அவர்களுக்கு உதவாமை போன்றவற்றின் குற்றங்களுக்கான இலங்கை அரசாங்கத்தின் மீது சர்வதேச விசாரணை எப்போதாவது ஒரு நாள் வந்து தீரும் என பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
வாழைச்சேனை புதுக்குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது ஐக்கிய நாடுகள் சபையிலே மனித உரிமை பேரவையின் 25வது கூட்டத் தொடரில் இலங்கையில் கடந்த கால யுத்த சூழலில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான நடவடிக்கை பேணாமை சார்பான ஆராய்கின்ற ஒரு நிகழ்ச்சி நிரல் உள்ளது.
இதிலே இலங்கை மிக முக்கியமாக ஆராயப்படுவதனால், அரசாங்கம் தங்களது குற்றச் செயல்களை மறைப்பதற்காக பலவிதமாக நடவடிக்கைகளை தமிழ் மக்கள் வாழும் பகுதியிலே மேற்கொள்ள தீர்மானித்திருக்கின்றது.
அதில் ஒன்றாக கல்முனையிலே பொதுபலசேனாவை பயன்படுத்தி அங்கிருக்கின்ற புத்திஜீவிகள் ஒரு சிலரை இணைத்து தமிழ் மக்கள் நடாத்துவதாக காட்டிக் கொண்டு ஒரு உதவி அரசாங்க அதிபர் பிரிவாக இருக்கின்ற கல்முனை தமிழ் பகுதி செயலகத்தை தரமுயர்த்தி, பிரதேச செயலகமாக மாற்றுவதற்கு ஏற்படுத்தும் நடவடிக்கையாக காட்டி அரசாங்கத்திற்கு ஆதரவு திரட்டும் பேரணியை எற்பாடு செய்திருந்தது.
இது குறித்து நாங்கள் சில தினங்களுக்கு முன் கல்முனையிலே ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்படுத்தி மக்களுக்கு விளக்கியிருக்கின்றோம். உண்மையிலே தற்போது அரசாங்கம் ஜெனிவாவின் மூன்றாவது கூட்டத் தொடரில் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கின்றது.
சர்வதேச விசாரணை ஒன்று வேண்டும். இலங்கையில் நடைபெற்ற குற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும். இந்த நிலையில் அமெரிக்காவால் கொண்டு வரப்பட்டிருக்கின்ற ஆரம்ப கட்ட தீர்மானத்தில் சர்வதேச விசாரணை என்பது குறிப்பிடப்படாமல் வேறு சில விதமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பொறுத்த வரையிலே இன்னும் நாங்கள் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் பற்றி எங்களது உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிடவில்லை. அதற்கு காரணம் அமெரிக்காவின் இறுதித் தீர்மானம் ஜெனிவா முடியும் வேளையில் தான் தெரியவரும்.
ஏனென்றால் இந்தியா இதுவரை தனது தீர்மானத்தை கொடுக்கவில்லை. இந்தியாவின் தீர்மானம் வந்ததும் அமெரிக்கா ஒரு முழுமையான தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையிலே சமர்ப்பிக்கும் என நாங்கள் எதிர்பார்கின்றோம்.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்படுகின்ற தீர்மானங்கள் எதிர்காலத்தில் அவர்கள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அடாவடித் தனங்களினால் சர்வதேசத்தின் வலைகளில் சிக்குவதற்கு அது ஒரு ஏதுவாக இருக்குமென்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
ஆனால் அரசாங்கமும் ஜெனிவா பிரச்சினை சார்பாக ஜெனிவாவில் அங்கத்துவம் வகிக்கின்ற நாடுகள் எல்லாம் சென்று கொண்டிருக்கின்றது. தன்னுடைய குற்றச் செயல்களை மறைப்பதற்கு ஆனாலும் அமெரிக்காவைப் பொறுத்த வரையிலே தான் கொண்டு வருகின்ற ஒரு தீர்மானம் வெற்றி பெறும் வகையில் எப்போதும் செயற்பட்டுக் கொண்டிருப்பார்கள்.ஆனால் இப்போது கூட அவர்கள் கொண்டு வந்திருக்கின்ற ஆரம்ப கட்டத் தீர்மானம் ஒரு இராஜதந்திர அடிப்படையான தீர்மானமாக இருக்கின்றது என என்னால் உணர முடிகின்றது.
ஏனென்றால் தன்னுடைய தீர்மானம் வெல்வதற்காக ஏனைய நாடுகளின் ஒத்துழைப்பை அமெரிக்கா பெற வேண்டும் என்றார்.
http://links.lankasri.com/tamilwin
Geen opmerkingen:
Een reactie posten