உயர்தரம் படித்துக் கொண்டிருந்த என்னுடைய சகோதரர்கள் 3 பேரை முறக்கொட்டான்சேனை இராணுவ முகாமிலிருந்து வந்த படையினரே மட்டக்களப்பு சித்தாண்டி முருகன் கோயிலடியில் வைத்து, வாகனத்தில் ஏற்றிச் சென்றனர் என சகோதரியொருவர் கண்ணீர் மல்க இன்று சாட்சியமளித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று விசாரணைகளை ஆரம்பித்து நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்நிலையில் சாட்சியமளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இன்றைய தினம் கிரான் றெஜி கலாசார மண்டபத்தில் கோரளைப்பற்று தெற்கு மற்றும் கோறளைப்பற்று வடக்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கான விசாரணைகள் நடைபெற்றன.
குறித்த சகோதரி தனது சாட்சியத்தில் குறிப்பிடுகையில்,
1990ஆம் ஆண்டு ஜுலை மாத இறுதியில் மட்டக்களப்பின் முறக்கொட்டாஞ்சேனையில் எங்களது காணி அடங்கலான பிரதேசத்தில் இராணுவம் முகாமிட்டது. அதனால் அப்போது நாங்கள் கொஞ்சம் தூரத்திலுள்ள சித்தாண்டி முருகன் கோவிலுக்கு பாதுகாப்புக்காகச் சென்று தங்கினோம். எங்களைப் போல் அதிகமானவர்கள் வந்தமையினால் அது அகதி முகாமாக இயங்கியது.
அந்த முகாம் ஆரம்பித்து சில நாட்களில் ஆகஸ்ட் 02ஆம் திகதி வாகனங்களில் வந்த இராணுவத்தினர் அப்பிரதேசத்தைச் சுற்றி வளைத்து அங்கு கொண்டு வரப்பட்டிருந்த முகமூடி பொம்மையாக இருந்தவரிடம் ஒவ்வொருவராகக் காட்டி எனது அண்ணன் வீரபத்திரர் பொன்னுத்துரை, வீரபத்திரர் அருள்நாதன், வீரபத்திரர் சசிதரன் ஆகியோர் உட்பட 17பேரை வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.
இராணுவத்தின் காலில் விழுந்து எங்களது சகோதரங்கள் எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள். அவர்களை விட்டு விடுங்கள் என அழுதோம். விசாரணை இருப்பதாகவும் முடிந்தபின் விடுவதாகவும் கடுமையாகச் சொன்னார்கள்.
அதன் பின் எந்தத் தகவலும் இல்லை. கொழும்பு களுத்துறை உள்ளிட்ட சிறைச்சாலைகள் உட்பட பல இடங்களிலும் எங்களது சகோதரங்களைத் தேடி அலைந்திருக்கிறோம். எந்தப் பிரயோசனமும் இல்லை. எங்கு சென்று கேட்டாலும் இல்லை என்றே சொல்கிறார்கள்.
அண்மையில் முறக்கொட்டான்சேனை இராணுவ முகாமிலிருந்து எங்களது வீட்டுக்கு வந்த இராணுவத்தினர் உங்களது சகோதரர்கள் இருக்கிறார்கள். அவர்களது பிறப்புச் சான்றிதழ்களைத் தாருங்கள் என்று கேட்டார்கள். நாங்கள் அவர்களது சான்றிதழ்கள் எல்லாம் வன்செயலில் அழிந்து போய்விட்டன என்றே சொன்னோம்.
எனது மூத்த சகோதரன் தேனீர் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். மற்றைய சகோதரர்கள் உயர்தரமும், சாதாரண தரமும் படித்துக் கொண்டிருந்தார்கள். எப்போது வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடனேயே இருந்து கொண்டிருக்கிறோம். அம்மா இப்போதும் என் பிள்ளை வருவான் என்றே சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இப்போதும் முறக்கொட்டான்கேனை இராணுவ முகாம் இருக்கிறது. எங்களது சகோதரங்கள் தான் இல்லை. அவர்கள் வீட்டுக்குத் திரும்புவதையே இப்போதும் எதிர்பார்க்கிறோம். என்றார்.
இந்த ஆணைக்குழுவின் விசாரணையின்போது கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 64 விண்ணப்பங்களும், கோறளைப்பற்று வடக்கில் 214 விண்ணப்பங்களும் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 55 பேரது விடயங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
நேற்று ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் நடைபெற்ற விசாரணைகளில் 54 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், 39 பேர் சாட்சியமளித்திருந்தனர்.
இதே ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 424 முறைப்பாடுகள் கையளிக்கப்பட்டிருந்தன. அத்துடன் அன்றைய தினம் புதிதாக 250 பேர் முறைப்பாடுகளைப் பதிவும் செய்தனர்.
இன்றைய அமர்வில், காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பராணகம, ஆணையாளர்களான திருமதி மனோ ராமநாதன், திருமதி சுரஞ்சனா வித்தியரத்ன ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டனர். அத்துடன், சட்ட அதிகாரிகளான சமிந்த அத்கோரல, துசித் முதலிகே ஆகியோரும் முறைப்பாடுகளைப் பதிவு செய்தனர்.
அதே நேரம் ஏற்கனவே விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கான பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டன. இதில் கோரளைப்பற்று தெற்கு, கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த இருநூற்றுக்கும் அதிகமானவர்கள் தங்கள் பதிவுகளை மேற்கொண்டனர்.
ஆணைக்குழுவின் விசாரணைகள் நாளை சனிக்கிழமை காலை முதல் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது. இது மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இறுதி அமர்வாகும்.
http://news.lankasri.com/show-RUmsyDRVLWmr4.html
Geen opmerkingen:
Een reactie posten