தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 2 maart 2014

மெல்ல மெல்ல வெளிவரும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டு உண்மைகள் கடந்த வாரம் வெளிச்சத்துககு வந்துள்ளன.
எந்தவொரு போர் பற்றிய உண்மைகளும், இரகசியங்களும் எப்போதுமே உடனடியாக வெளிவந்து விடுவதில்லை.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அரச படையினரால் முடித்து வைக்கப்பட்ட போரில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்கள் பல ஆண்டுகளுக்குப் பின்னரும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
குறிப்பாக மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் ஆதாரங்கள், படங்கள், வீடியோக்கள் போன்றவை இதுவரை வெளியாகியுள்ளன.
இவைதான் இப்போது ஜெனிவாவில் அரசாங்கத்தின் கழுத்தில் சுருக்கை மாட்டும் அளவுக்கு கொண்டு சென்றிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.
போரில் கடைப்பிடிக்கப்படும் தந்திரங்கள், பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், ஏற்பட்ட இழப்புக்கள் போன்றவை குறித்து எப்போதுமே எல்லா படை அமைப்புக்களுமே பல சந்தர்ப்பங்களில் இரகசியம் காப்பதுண்டு.
அது ஒரு போரின் பரிமாணத்தைக் குறைத்துக் காட்டுவதற்காக, அல்லது மிகைப்படுத்திக் காட்டுவதற்காகவோ இருக்கலாம்.
எதிர்த்தரப்பின் மாற்றுத் திட்டத்தைக் குழப்புவதற்காகவோ, அவர்கள் தயார்ப்படுத்தலில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காகவோ இருக்கலாம்.
குற்றச்சாட்டுக்களைத் தவிர்ப்பதற்கும், வெளி அழுத்தங்களை தவிர்ப்பதற்கும் இவ்வாறு செய்யப்படலாம்.
இதனால் எப்போதுமே போர்களில் பல உண்மைகள், இரகசியங்களாக மறைக்கப்படுவதுண்டு.
அவற்றில் எல்லாமே பிற்காலத்தில் வெளிவந்து விடுவதில்லை.
இரகசியங்கள் பலவற்றைக் கையாண்டவர்கள், அவற்றைத் தெரிந்து கொண்டவர்கள், அதனுடன் தொடர்புடையவர்கள் தொடர்ந்து மௌனம் காப்பதால், அவை வெளிவராமல் போய்விடுவதுண்டு.
சில வேளைகளில் அதனுடன் தொடர்புடையவர்கள் அந்தப் போரில் மரணமாகி விட்டால் அவர்களுடன் அந்த உண்மை மறைந்து போவதுண்டு.
ஏன் மிகப்பெரிய போர்களில் கூட மிகப்பெரிய தலைவர்கள், தளபதிகளிள் மரணங்கள் பற்றிய சர்ச்சைகளும் சந்தேகங்களும் இன்று வரை தொடர்கின்றன.
நெப்போலியன், ஹிட்லர், நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ், என்று இந்தப் பட்டியல், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், பொட்டம்மான் வரை நீள்கிறது இந்த வரலாறு.
விடுதலைப் புலிகளின் தலைமை, 2009ல் முற்றாகவே அழிக்கப்பட்டு விட்டதால், அவர்களின் மூன்று தசாப்த காலப் போராட்டம் பற்றிய ஏராளமான உண்மைகளும், முள்ளிவாய்க்காலுடன் புதைந்து போய் விட்டன.
ஆனாலும், இந்தப் போருடன் தொடர்புடைய சில குறிப்பிடத்தக்க உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கத் தான் செய்கின்றன.
இவ்வாறான இரண்டு விடயங்கள் கடந்த வாரம் வெளியாகியுள்ளன.  
இவையிரண்டையும் வெளிப்படுத்தியவர்கள் அவற்றை மறைப்பதில் முக்கிய பங்கு வகித்த படைத்தளபதிகள் தான்.
ஒருவர் சரத் பொன்சேகா, மற்றவர் குறூப் கப்டன் சஜீவ ஹெந்தவிதாரண.
இருவருமே இராணுவத்தில் இருந்தும் ஓய்வு பெற்று விட்டவர்கள்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில் மட்டுமன்றி, ஒட்டுமொத்தப் போரிலுமே முக்கிய பங்காற்றியவர்கள்.
முதலில் சரத் பொன்சேகா வெளிப்படுத்திய உண்மை என்னவென்று பார்க்கலாம்.
போரின் இறுதி மாதங்களில் குறிப்பாக 2009ம் ஆண்டு ஜனவரி தொடக்கம் மே வரையிலான நாட்களில் போர்முனைத் தகவல்களை இருட்டடிப்புச் செய்வதில் அரசாங்கமும் இராணுவமும் கூடிய கவனம் செலுத்தின.
இந்த இருட்டடிப்பு, ஒட்டுமொத்தப் போரிலும் இருந்ததாயினும் இந்தக் காலப் பகுதியில் அது மிக இறுக்கமாகவே கடைப்பிடிக்கப்பட்டது.
2008ம் ஆண்டு முழுவதும் நடந்த போரில் ஏற்பட்ட இழப்புகளை விடவும் 2009ம் ஆண்டின் நான்கரை மாதங்களில் அரச படைகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் தான் மிக அதிகம்.
2008ம் ஆண்டில் 2174 படையினர் கொல்லப்பட்டதாக, இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ள அதேவேளை, 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி வரையான காலப் பகுதியில் 2350 படையினர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இதில் காணாமற் போனவர்கள் சேர்க்கப்படாததால் இந்த எண்ணிக்கைகள் மிகத் துல்லியமானவையல்ல.
2009ம் ஆண்டு நான்கரை மாதங்களிலும் நடந்த போர்தான், ஈழப்போர்களில் மிக உக்கிரமானது என்பது, அதில் அரச படைகளுக்கு ஏற்பட்ட இழப்புகளில் இருந்து உணர்ந்து கொள்ளலாம்.
இதனால்தான் இந்த இறுதிப்போர் தொடர்பான பல இரகசியங்கள் அப்போது தணிக்கை செய்யப்பட்டன.
புலிகள் போரின் இறுதிக்கட்டத்திலும் கடுமையாகச் சண்டையிடுகிறார்கள் என்பதை வெளிப்படுத்தினாலோ, படையினரது இழப்புகளை வெளிப்படுத்தினாலோ, படையினரதும், சிங்கள மக்களினதும் மனவுறுதியையும், வெற்றிப் பெருமிதத்தையும் குலைத்து விடும் என்று அரசாங்கம் கருதியது.
அதனால், போரில் ஏற்பட்ட இழப்புகள் வெளிப்படுத்தப்படவில்லை.
அத்துடன் இறுதிக்கட்டப் போரில் ஆட்டிலறிகள், மோட்டார்கள், பெருமளவில் பயன்படுத்தப்பட்ட நிலையில், படையினருக்கு ஏற்பட்ட இழப்புகளை புலிகளால் கூடக் கணிக்க முடியாத நிலைதான இருந்தது.
இப்போது இறுதிப் போரில் புலிகள் எந்தளவுக்கு மூர்க்கத்தனமாகப் போரிட்டவர்கள் என்பதை, படைத்தரப்புத் தகவல்களே உறுதிப்படுத்தத் தொடங்கியுள்ளன.
புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போருக்கு, இராணுவத்துக்கு தலைமை தாங்கிய, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா (ஜெனரல் பட்டம் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு விட்டது) கடந்த வாரம் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போது, இராணுவம் ஒட்டுமொத்தப் போரிலும் தோற்கும் கட்டம் ஒன்றை எட்டிய விபரத்தை வெளியிட்டுள்ளார்.
2007ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இறுதிக்கட்டப் போரில் தொடர்ச்சியாக நிலங்களைக் கைப்பற்றி வந்த படையினர் 2009 பெப்ரவரி முதலாம் திகதி அதிகாலை புதுக்குடியிருப்புக்குத் தெற்கே, புலிகளின் மிகப்பெரிய எதிர்த்தாக்குதல் ஒன்றுக்கு முகம் கொடுத்திருந்தனர்.
தனது எதிர்ப்பையும் மீறி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 48 மணிநேர போர்நிறுத்தத்தை அறிவித்ததால் இந்த தாக்குதலில் இராணுவம் பெரிய இழப்புகளை சந்தித்ததாக சரத் பொன்சேகா குற்றம்சாட்டியிருந்தார்.
இந்தத் தாக்குதலில் 500 படையினரை இழந்து, ஒட்டுமொத்தப் போரிலும், தோல்வியடையும் கட்டத்துக்கு இராணுவம் தள்ளப்பட்டதாக அவர் இப்போது ஒப்புக் கொண்டுள்ளார்.
இரண்டு நாள் போர்நிறுத்தத்தை அறிவித்து புலிகள் ஒருங்கிணைய காலஅவகாசத்தை வழங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை, குற்றவாளியாக காட்டுவதற்கே, சரத் பொன்சேகா இந்த உண்மையை அவிழ்த்து விட்டாரேயன்றி, போரின் இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காக அல்ல என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
2007ல் இறுதிக்கட்டத் தாக்குதலை அரசபடைகள் ஆரம்பித்த பின்னர், இழந்த நிலங்களை மீட்க புலிகள் நடத்திய ஒரே பாரிய தாக்குதல் இதுவாகும்.
2007ல் மடுப்பகுதியிலும், 2008ம் ஆண்டு இறுதியில், முறிகண்டிப் பகுதியிலும் இழந்த பகுதிகளை மீட்க சிறியளவிலான எதிர்த்தாக்குதல்களைப் புலிகள் நடத்தியிருந்த போதிலும் அவை இராணுவத்தின் ஒட்டுமொத்த போர்த்திட்டத்தையுமே குழப்பும் வகையிலானதாக இருக்கவில்லை.
ஆனால் புதுக்குடியிருப்புத் தாக்குதல் அப்படிப்பட்டது அல்ல.
அது ஒட்டுமொத்தப் போர்த் திட்டத்தையும் தோல்விக்குள் தள்ளும் அளவுக்கு வலிமைமிக்கதாக இருந்துள்ளது என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
அதுமட்டுமன்றி, இந்தத் தாக்குதலில் 500 படையினர் கொல்லப்பட்டனர் என்ற சரத் பொன்சேகாவின் தகவலும் புதியது.
இந்தத் தாக்குதலில் படையினருக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து இதற்கு முன்னர், அரசாங்கம் சரியான தகவல்கள் வழங்கவில்லை.
விடுதலைப் புலிகளுக்கும் அது சரியாகத் தெரிந்திருக்கவில்லை.
இது தொடர்பாக அப்போது புலிகளின் அரசியல்துறையைச் சேர்ந்த புலித்தேவன், வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் 2009 பெப்ரவரி முதலாம் திகதி அதிகாலை புதுக்குடியிருப்புக்குத் தெற்கே 59 வது டிவிசன் படையினர் மீது புலிகள் தொடுத்த தாக்குதலில் 150 படையினர் கொல்லப்பட்டதாகவும், 350 படையினர் காயமடைந்ததாகவும் கூறியிருந்தார்.
பெப்ரவரி 4ம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தன்று அப்போது புலிகளின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட புதுக்குடியிருப்பில் கொடியேற்றுவதற்குத் திட்டமிட்டிருந்த படையினர் மீது தான் அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனால் அப்போது அரசாங்கத்தின் திட்டம் குழம்பிப் போனது.
சுதந்திர தினத்தன்று உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிரபாகரனை நான்கு பக்கங்களிலும் சுற்றிவளைத்திருப்பதாக கூறிய போதிலும், படையினர் அப்போது தோல்வியின் விளிம்பில் சிக்கியிருந்ததாக சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
பின்னர் ஒருவாரம் கழித்து புலிகள் தரப்பை ஆதாரம் காட்டி, தமிழ்நெற் வெளியிட்ட செய்தி ஒன்றில், பெப்ரவரி 1ம் திகதியில் இருந்து நடந்து வரும் சண்டைகளில் 1000 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.
ஆனால் அதை இராணுவத் தலைமையகம் நிராகரித்திருந்தது.
எனினும் அப்போது புலிகளின் எதிர்த் தாக்குதலில் 500 படையினர் கொல்லப்பட்டனர் என்ற விபரத்தை அரசதரப்பு வெளியிடவேயில்லை.
இப்போதுகூட சரத் பொன்சேகா, அரசியல் மேடையொன்றில் தான் இந்த உண்மையை அவிழ்த்து விட்டிருக்கிறார்.
இதுபோன்ற பல உண்மைகள் வரும் காலங்களிலும் வெளிவரலாம்.
அதிலும் அரசியல் மேடைக்கு அதிகளவிலான முன்னாள் படை அதிகாரிகள் வரத் தொடங்கியுள்ளதாலும், போர் பற்றிய நூல்கள் பல வெளிவரத் தொடங்கியுள்ளதாலும் இதற்கான சாத்தியங்கள் அதிகம் .
இறுதிக்கட்டப் போர் தொடர்பாக கடந்த வாரம் விமானப்படை முன்னாள் அதிகாரி ஒருவர் அம்பலப்படுத்திய இன்னொரு விடயம் என்னவென்றால் அடுத்தவாரம் பார்க்கலாம்.
சுபத்ரா

Geen opmerkingen:

Een reactie posten