பிரித்தானியாவில் நீண்ட காலமாகத் தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுத்து வந்த மூத்த அரசியல்வாதியான ரொனி பென் அவர்கள் சாவைத் தழுவியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக சுகவீனமுற்றிருந்த ரொனி பென் அவர்களின் உயிர் இன்று காலை அவரது இல்லத்தில் பிரிந்துள்ளது.
1950ஆம் ஆண்டிலிருந்து 2001ஆம் ஆண்டு வரை பிரித்தானியாவின் தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கிய ரொனி பென் அவர்கள், 1960களின் இறுதியிலும், 1970களிலும் பிரித்தானிய அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்தவர்.
பிரித்தானியாவின் பிரபுக்கள் வம்சத்தை சேர்ந்த இவர் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் மேலவையில் பிரபுக்களின் வாரிசுமுறையை ஒழிப்பதற்காகப் பாடுபட்டவர்.
உண்மையான அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்து 2001ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய இவர் அதன் பின்னர் போருக்கு எதிரான அமைப்பின் தலைவராகப் பதவி வகித்தார்.
தமிழீழ மக்களுக்காக நீண்ட காலமாகக் குரலெழுப்பி வந்த ரொனி பென் அவர்கள், 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் போர்நிறுத்தத்தை வலியுறுத்தி பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தை முற்றுகையிட்டு தமிழீழ மக்கள் மேற்கொண்ட போராட்டங்களில் கலந்து கொண்டு தனது ஆதரவை வழங்கியதோடு, தமிழ்ப் போராட்டவாதிகளுக்காக பிரித்தானிய காவல்துறையினருடன் வாக்குவாதங்களில் ஈடுபட்டார்.
தமிழீழ தேசியக் கொடியை தமிழ்ப் போராட்டவாதிகள் ஏந்துவதற்கு பிரித்தானிய காவல்துறையினர் தடை விதிக்க முற்பட்ட பொழுது அதனைக் கடுமையாக எதிர்த்த ரொனி பென், தனது கையில் தமிழீழத் தேசியக் கொடியை ஏந்தி நின்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றையும் மேற்கொண்டார்.
Geen opmerkingen:
Een reactie posten