சிறிலங்காவின் இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பாக சனல் 04 தொலைக்காட்சி சேவை ஒளிபரப்பியதை எதிர்த்து சிறிலங்கா அரசாங்க ஆதரவானவர்களால் வெளியிடப்பட்டுள்ள 'அனைத்துலக பரப்புரை நடவடிக்கைக்குப்' பதிலடியாக கையேடு ஒன்றை வெளியிடுவதென சனல் 04 தொலைக்காட்சி சேவை அதிரடி நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துன்னது. சனல் 04 தொலைக்காட்சி சேவையானது சிறிலங்காவில் தொடரப்பட்ட குருதி தோய்ந்த இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற பல்வேறு மீறல்களைப் பதிவு செய்து 'போர் தவிர்ப்பு வலயம்' என்கின்ற காணொலியை வெளியிட்டிருந்தது. போர் தவிர்ப்பு வலயம் என்கின்ற காணொலியில் ஒளிபரப்பப்பட்ட 'உண்மையில் அதிர்ச்சி கொள்ள வைக்கின்ற' மீறல் காட்சிகளை பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமறூன் பார்த்த பின்னர் நவம்பர் 2013ல், சிறிலங்கா மீது சுயாதீன அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார். மார்ச் 2014ல் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்த கால மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கான அனைத்துலக விசாரணை ஆணைக்குழு ஒன்றை உருவாக்குவது தொடர்பாகப் பரிசீலிக்கப்படும். சனல் 04 தொலைக்காட்சி சேவையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்குடனும், போர்க்குற்றங்கள் தொடர்பான சாட்சியங்களை வெளியிடுவதை எதிர்த்தும், சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் 222 பக்கங்களைக் கொண்ட ‘Corrupted Journalism: Channel 4 and Sri Lanka’ என்னும் பெயரில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த நூலானது உலகெங்கும் பரந்து வாழும் இராஜதந்திரிகள், ஊடகவியாலளர்கள் மற்றும் புத்திமான்கள் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நூலின் ஆசிரியர்கள் யார் என்பது இன்னமும் வெளியிடப்படவில்லை. இதேபோன்று இந்த நூலை ஆக்குவதற்கான நிதியை வழங்கியவர்கள் யார் என்பது வெளியிடப்படவில்லை. சிறிலங்கா அரசாங்க ஆதரவாளர்களால் தமது தொலைக்காட்சி சேவைக்கு எதிராக வெளியிடப்பட்டுள்ள இந்த நூலை எதிர்த்து, சனல் 04 தொலைக்காட்சி சேவையானது 20,000 வார்த்தைகளைக் கொண்ட 'கறைபடியாத உண்மைகள்' - 'The Uncorrupted Truth' என்கின்ற கையேடு ஒன்றை வெளியிடுவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது. இக்கையேட்டின் ஆசிரியர் சனல் 04 தொலைக்காட்சி சேவையின் சிறிலங்காக் கானொலிகளின் இயக்குனர் கலும் மக்றே ஆவார். றோயல் தொலைக்காட்சி சமூகம், அனைத்துலக ஒலிபரப்பாளர்களுக்கான சங்கம், அனைத்துலக மன்னிப்புச்சபை மற்றும் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து உயர் விருதுகளைப் பெற்ற ஒரு சிறந்த ஊடகவியலாளராக மக்றே உள்ளார். The Peabody, Columbia Dupont ஆகிய அமெரிக்காவின் மிக உயர்ந்த தொலைக்காட்சி இதழியலுக்கான விருதுகளையும் மக்றே பெற்றுள்ளார். பிரித்தானியாவின் மூன்று காணொலி இயக்குனர்களில் மக்றேயும் ஒருவர் என ஒலிபரப்பு சஞ்சிகையின் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. "சிறிலங்கா அரசாங்க ஆதரவாளர்களால் சனல் 04 தொலைக்காட்சி சேவைக்கு எதிராக வெளியிடப்பட்டுள்ள Corrupted Journalism என்கின்ற புத்தகமானது மக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கைக் கொண்டதாகும். இதன்காரணமாகவே நாங்கள் இதற்கான பதிலை விரிவாகவும் விளக்கமாகவும் வெளியிடத் தீர்மானித்தோம். அத்துடன் எமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களைக் கவனமாகக் கையாண்டு பதிலளித்துள்ளோம். இதனை வெளியிட்டவர்கள் மற்றும் நிதி வழங்கியோர் தம்மை யார் எனக் காட்ட முனையாத இந்தச் சந்தர்ப்பத்தில் 'போர் தவிர்ப்பு வலயம்' என்கின்ற காணொலியை சனல் 04 தொலைக்காட்சி சேவை தயாரித்து வெளியிட்டது என்பதைக் கூறுவதில் பெருமையடைகிறோம்" என இந்தத் தொலைக்காட்சி சேவையின் செய்திகள் மற்றும் நடப்பு விவகாரத்திற்கான தலைமை இயக்குளர் டொரோத்தி பிர்னே சுட்டிக்காட்டியுள்ளார். "எமது ஊடகம் மீதும், ஊடகவியல் மீதும் பொறுப்பற்ற விதத்தில், துல்லியமற்ற வகையில் குற்றச்சாட்டுகளை இவர்களது நூல் வெளியிட்டுள்ளது. இது மக்களைத் தவறாக வழிநடத்தும் கெட்ட நோக்கைக் கொண்டதாகும். ஆனால் நாங்கள் சிறிலங்காவில் இடம்பெற்ற படுகொலைகள், மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள், சித்திரவதைகள் போன்ற பல்வேறு மீறல்களை உறுதிப்படுத்தி சாட்சிகளை வெளியிட்டுள்ளோம். இந்நிலையில் இவ்வாறான மீறல்களை எதிர்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்க ஆதரவாளர்களால் வெளியிடப்பட்டுள்ள இப்புத்தகம் தோல்வியுற்றுள்ளது என்பது முக்கியமானதாகும். அநாமதேயம் என்கின்ற போர்வையில் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளதானது அதிர்ச்சி தரக்கூடிய ஒன்றல்ல" என மக்றேயால் The Uncorrupted Truth என்கின்ற கையேட்டில் விபரிக்கப்பட்டுள்ளது. போர் தவிர்ப்பு வலயமானது 2009ல் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் எவ்வாறான யுத்த மீறல்கள் இடம்பெற்றன என்பதை சாட்சிப்படுத்துகின்ற ஒரு ஆவணமாகும். போர் தவிர்ப்பு வலயத்தில் அகப்பட்ட பொதுமக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கப் படைகள் கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டன. இதில் பெருமளவான மக்கள் தயவுதாட்சண்ணியமின்றி படுகொலை செய்யப்பட்டனர். இந்த மக்களுக்குப் போதியளவு உணவு மற்றும் மருந்துகளை வழங்குவதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. இந்த மக்கள் போர் வலயத்திற்குள் அகப்பட்டுத் தவித்தனர். தமிழ்ப் புலிகள் கூட இந்த யுத்தத்தில் பல்வேறு மீறல்களைப் புரிந்தனர். சிறுவர்களைப் படையில் இணைத்தமை, தற்கொலைக் குண்டுதாரிகளைப் பயன்படுத்தியமை போன்றன இவற்றுள் முக்கியமானவையாகும். தமிழ்ப் புலிகள் தமது கட்டுப்பாட்டிலிருந்த பொதுமக்கள் தப்பிச் செல்வதைத் தடுத்தனர். ஆனால் சிறிலங்கா இராணுவத்தினரின் தாக்குதல்களிலேயே பெருமளவான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். போரின் இறுதியில் சரணடைந்த புலி உறுப்பினர்கள் பாலியல் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு, இராணுவ வீரர்களால் இவர்கள் நிர்வாணமாக்கப்பட்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறான மீறல்கள் போர் தவிர்ப்பு வலயம் என்கின்ற காணொலியில் பதிவாக்கப்பட்டுள்ளன. இந்தப் போரானது எவ்வித சாட்சியங்களும் அற்ற யுத்தமாக நடந்தேறியது. ஆனால் இவற்றை உறுதிப்படுத்துவதற்கான பல்வேறு சாட்சியங்கள் உள்ளன. இந்த சம்பவங்களை போர்க் களங்களில் பணியாற்றிய இராணுவ வீரர்கள் சிலர் பதிவாக்கியிருந்தனர். இந்த சாட்சியங்கள் மிகக் கவனமாக விசாரிக்கப்பட்டு சனல் 04 தொலைக்காட்சிக் குழுமத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சனல் 04 தொலைக்காட்சி சேவையால் வெளியிடப்பட்ட இந்த காணொலி ஆவணம் போலியானது என சிறிலங்கா அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. எனினும், சனல் 04 தொலைக்காட்சி சேவையின் ஆவணங்கள் ஐ.நா விசாரணைகள் மற்றும் அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற சுயாதீன அமைப்புக்களால் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. செய்தி வழிமூலம் : Channel 4’s News மொழியாக்கம் : நித்தியபாரதி |
03 Mar 2014 http://www.lankaroad.com/index.php?subaction=showfull&id=1393805815&archive=&start_from=&ucat=1& |
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
maandag 3 maart 2014
சிறிலங்காவின் அனைத்துலக பரப்புரைக்கு எதிராக களமிறங்கியுள்ள 'சனல் 04'
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten