இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நிமல்கா இந்திய பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது வரை போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்த எந்தவொரு தீர்மானமும் இயற்றப்படவில்லை. ஐ.நா.வில் உறுப்பினராக இருக்கும் இலங்கை ஐ.நா.வின் விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது இலங்கையின் உள்நாட்டு பிரச்சினை மட்டுமில்லை. உலக அளவில் இந்த நூற்றாண்டின் மனித உரிமை மீறல்கள் குறித்த விவகாரம். தற்போது ஆதாரங்கள் வெளிவருகின்றன, அனைவரும் கேள்வி கேட்கிறார்கள். ஐ.நா.வாக இருந்தாலும் தவறு செய்தால் பதில் கூற வேண்டும் எனவும் நிமல்கா தெரிவித்துள்ளார்.
மனித உரிமை சபைக்கு வந்திருக்க வேண்டிய ஐ.நா.வின் வல்லுநர்கள் அறிக்கையை ஐ.நா. செயலாளர் சமர்ப்பிக்கவே இல்லை.ஐ.நா. இப்படி செய்ய நாம் அனுமதிக்கக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உலக அளவில் மனித உரிமை விவகாரங்களை பேச ஐ.நா.வின் மனித உரிமை சபை மட்டுமே இருக்கிறது என்ற நிலையில் அது செயலூக்கம் உள்ளதாக இருக்க வேண்டும். அரசுகள் கையில் மனித உரிமை சபையின் செயல்பாடுகளை முடக்கி விடக் கூடாது. இந்த மாதம் சர்வதேச விசாரணை நடத்த தீர்மானம் இயற்றப்படும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
போருக்குப் பின்னர் இஸ்லாமியர், கிறித்தவர் மீதான தாக்குதல், புத்பாலசேனாவின் எழுச்சி இவை யெல்லாம் இலங்கை அரசு அமைதியின் விதைகளை தூவ தவறிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கை அரசு மக்களின் தினசரி வாழ்க்கையை மேம்படுத்த முயற்சி எடுக்கவில்லை. இதனால் அரசுக்கு நெருக்கமான ஒரு சிலரைத் தவிர ஒவ்வொரு இலங்கையரும் துன்பத்தில் வாடுகின்றனர் என்றார்.
சிங்களரின் போராட்டத்தையும் தமிழர்களின் போராட்டத்தையும் ஒப்பிட முடியாது என்று தெரிவித்த நிமல்கா ஒரு சாதாரண சிங்களரின் வாழ்க்கை செலவு உயர்ந்துள்ளது. தற்போது இலங்கையில் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் விலை உயர்ந்துள்ளன. உண்மையான பொருளாதார வளர்ச்சி நடைபெறவே இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் நிலை படுமோசமாக உள்ளது. அதிலும் வன்னி போன்ற பகுதிகளில் வாழும் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களுக்கான வாழ்வாதாரம் குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாய நிலங்கள் ராணுவத்தின் கையில் உள்ளது. அவர்களால் புதிதாக ஏதும் தொழில் தொடங்கி வாழ வழியில்லை. தெற்கில் வாழும் சிங்கள பெண்ணின் வாழ்வை விட இவர்களது வாழ்க்கை மோசமானது என்றும் தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/62630.html
Geen opmerkingen:
Een reactie posten