தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும் என லண்டனில் தலைமையகத்தைக் கொண்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் மாத இறுதியிலும், டிசெம்பர் மாத ஆரம்பத்திலும் யாழ்ப்பாணத்தில் வைத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் இரு மாணவர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.
மாவீரர் தினத்தில் விளக்கேற்றினார்கள் எனவும், அரசியல் கட்சி ஒன்றின் அலுவலகத்தின் மீது பெற்றோல் குண்டுகளை வீசித் தாக்குதல் நட்தினார்கள் எனவும் இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
கைதான மாணவர்களில் இருவர் கடந்த மாதத்தில் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் இருவர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள வெலிக்கந்தை தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள இவர்கள் புனர்வாழ்வின் பின்னரே விடுதலை செய்யப்படுவார்கள் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
தடுப்புக்காவலில் உள்ள இரண்டு மாணவர்களையும் விடுதலை செய்யுமாறு கோரியுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை,
அவ்வாறு விடுதலை செய்யமுடியாவிடின், சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக அவர்கள் மீது குற்றங்கள் இருப்பின் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் சர்வதேச தராதரத்துக்கு ஏற்றவாறு பராமரிக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறும், அவர்கள் தமது சட்டத்தரணிகள் மற்றும் குடும்பத்தினரைச் சந்திப்பதற்கும் வசதி செய்துகொடுக்குமாறும் மன்னிப்புச் சபை வலியுறுத்தியிருக்கின்றது.
Geen opmerkingen:
Een reactie posten