தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 6 februari 2013

மகிந்தரின் சுதந்திர தின உரைக்கு சர்வதேச ஊடகங்கள் கண்டனம்!


இலங்கைத் தமிழர்களின் சுயாட்சி உரிமையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முற்றாக நிராகரித்திருக்கிறார். தமிழருக்கு சுயாட்சி கிடைப்பதை அவர் அடியோடு விரும்பவில்லை. நேற்றுமுன்தினம் திருகோணமலையில் நடைபெற்ற இலங்கையின் 65ஆவது சுதந்திர தின நிகழ்வில் அவர் ஆற்றிய உரை இதனைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளது அமெரிக்காவின் பிரபல ஆங்கில நாளிதழான “நியூயோர்க் ரைம்ஸ்’. ஜனாதிபதி மஹிந்தவின் சுதந்திர தின உரையை கடுமையாக விமர்சித்துள்ள அந்த நாளேடு அவரது உரையின் முக்கிய பகுதிகள் குறித்து விளக்கத்தையும் அளித்துள்ளது.
இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் சமமான உரிமை உள்ளது எனவும், இன மற்றும் மொழி ரீதியான எந்தப் பிரிவினைகளுக்கும் இந்த நாட்டில் இடமில்லை என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், இறைமையுள்ள நாடொன்றின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு இன்னொரு நாட்டுக்கு உரிமையில்லை என்றும் தனதுரையில் குறிப்பிட்ட் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இதனூடாக வெளிநாட்டுத் தலையீடுகளையும் கண்டித்துள்ளார்.
ஆனால் இலங்கையில் இனப்பிரச்சினைக்கு 13ஆவது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் தீர்வு காணப்படும் எனச் சர்வதேச நாடுகளுக்கும், உள்நாட்டு அரசியல் கட்சிகளுக்கும் அளித்த வாக்குறுதிகளுக்கு முரணாக ஜனாதிபதியின் இந்த உரை அமைந்துள்ளதாக “நியூயோர்க் ரைம்ஸ்’ குறிப்பிட்டுள்ளது.
இதன்மூலம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முனைப்புக்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முற்றாக நிராகரித்துள்ளதாகவும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கு தயாரில்லை என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்த உரை வெளிப்படுத்தியிருப்பதாக சர்வதேச நெருக்கடிகளுக்கான குழுவைச் சேர்ந்த அலன் கீனன் தெரிவித்துள்ளார் என்றும் “நியூயோர்க் ரைம்ஸ்’ தெரிவித்துள்ளது.
இதேபோன்று ஏபி, ஏ.வ்.பி. போன்ற சர்வதேச ஊடகங்கள் மற்றும் இந்திய ஆங்கில ஊடகங்களும் இதுதொடர்பில் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.
2009ஆம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்த பின்னர் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் இணைந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில் இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக 13ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு தமிழ்க் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுடனும் விரிவான பேச்சுக்கள் நடத்தப்படும் என ஜனாதிபதி மஹிந்த வாக்குறுதி அளித்திருந்தார். அதன் பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சராக இருந்த எஸ்.எம்.கிருஸ்ணா இலங்கைக்கு பயணம் செய்திருந்த போது ஜனாதிபதியைச் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.
அந்தப் பேச்சின்போது 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் என இலங்கை ஜனாதிபதி தனக்கு வாக்குறுதி அளித்ததாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணா தனது இலங்கைக்கான பயணத்தின் முடிவில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜனாதிபதியின் சுதந்திரதின உரை, மேற்குறிப்பிட்ட அனைத்து உறுதிமொழிகளையும் அப்பட்டமாக மீறுவதாக அமைந்திருப்பதாக அனைத்துலக ஊடகங்கள் பலவும் சுட்டிக்காட்டியுள்ளன.

Geen opmerkingen:

Een reactie posten