தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 6 februari 2013

இலங்கை சுதந்திர தின உரை: ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கலைஞர் கடும் கண்டனம் !


திருகோணமலையில் இடம்பெற்ற இலங்கையின் 65வது சுதந்திரதின விழாவில்,தமிழர்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் தர முடியாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாற்றியமைக்கு தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து கலைஞர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இனவேறுபாடுகளைப் பற்றியும் மதவேறுபாடுகளைப் பற்றியும் சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகியோரின் உன்னத கலாச்சாரத்தைப் பற்றியும் இந்தப் பூனையும் பால் குடிக்குமா?' என்று கேட்குமளவுக்குப் பேசியிருக்கிறார்.
இலட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்து லட்சக்கணக்கான தமிழர்களைத் தமது பூர்வீக பூமியான ஈழத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் அகதிகளாகவும் அனாதைகளாகவும் புலம் பெயரச் செய்ததோடு, அவர்களுடைய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கி விட்டு, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழர்களுக்குச் சொந்தமான வீடுகளையும் நிலங்களையும் தொழில் நிறுவனங்களையும் சிங்களர்கள் கைப்பற்றி வளமாக இருந்த தமிழர்களின் வாழ்வாதாரத்தை வற்றச் செய்து விட்டு, அவர்களது அடிப்படை ஜனநாயக உரிமைகளையும், வாழ்வுரிமைகளையும் பறித்து விட்டு சுதந்திரமான நீதி பரிபாலன முறைகளிலும் ஊடகங்களின் நடவடிக்கைகளிலும் தலையிட்டு நிர்வாகத்தையே தலைகீழாக மாற்றி ஒரே மொழி, ஒரே மதம் என்று இலங்கை நாட்டைச் சர்வாதிகாரப் பாதையில் செலுத்திக் கொண்டிருக்கும் ராஜபக்சவை மனித உரிமைகள், மனித நேயம் ஆகியவற்றுக்கு எதிராகப் பல்வேறு வகையான போர்க் குற்றங்களைப் புரிந்த சர்வதேசக் குற்றவாளியென உலக நாடுகள் பார்க்கின்றன.
சிங்களப் பேரினவாதத்தின் சின்னமான ராஜபக்ச, தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவதாக இந்தியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் நீண்ட காலமாக அளித்து வந்த உறுதிமொழியை இப்போது செய்திருக்கும் அறிவிப்பின் மூலமாக மீறியிருக்கிறார் என்பது உலகெங்கும் வாழும் தமிழர்களும் இந்தியாவும் சர்வதேச அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டிய ஒன்றாகும்.
சிங்களவர்கள் சார்பில் ஈழத் தமிழினத்திற்கு கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது சரித்திரச் சான்றாகி விட்டது. 1925 ஜூன் 25ம் திகதி யாழ்ப்பாணத்தில் இலங்கை தேசியக் காங்கிரஸ் தலைவர்கள், இலங்கைத் தமிழர் மகாஜன சபையுடன் செய்து கொண்ட உடன்பாடு முதன் முதலாக காற்றில் பறக்க விடப்பட்டது.
1956ல் பண்டாரநாயகா பிரதமரானபோது, சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்ற சட்டத்தை நிறைவேற்றி, 1944ல் சிங்களமும் தமிழும் ஆட்சிமொழிகள் என ஜெயவர்த்தனா தமிழ்ப் பிரதிநிதிகளின் கருத்தை ஏற்று நிறைவேற்றிய சட்டத்தை முறித்தார்.
1965ல் டட்லி சேனநாயகா பிரதமரானதும், மாவட்ட சபைகளை அமைத்து அதிகாரத்தைப் பரவலாக்க, தந்தை செல்வாவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தினார். ஆனால் 1969ஆண்டிலேயே டட்லி சேனநாயகா அந்த ஒப்பந்தத்தைக் கைவிட்டு விட்டதாக ஒருதலைப்பட்சமாக அறிவித்தார்.
1987ல் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியுடன், இலங்கை நாடு ஒப்பந்தம் ஒன்றைச் செய்தது. ஆனால் அந்த ஒப்பந்தமும் 25 ஆண்டுகளுக்குப் பிறகும் இதுவரை நிறைவேற்றப்பட வில்லை. இப்படிச் சிங்கள அரசு செய்து கொண்ட பல்வேறு ஒப்பந்தங்களை நிறை வேற்றவில்லை என்பது மட்டுமல்லாமல், அவற்றை எல்லாம் மீறியே இலங்கையில் காரியங்கள் நடைபெற்று வருகின்றன.
இவ்வளவுக்கும் பிறகு, நமது இந்தியப் பேரரசு தற்போதாவது விழித்துக் கொண்டு, ராஜபக்சவின் சுய உருவத்தையும் குணத்தையும் நோக்கத்தையும் புரிந்து கொண்டு, ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையையும் வாழ்வாதாரத்தையும் ஜனநாயக உரிமைகளையும் உலக அமைப்புகளின் உதவியோடு காப்பாற்றிட முன்வர வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten