ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்கு இலங்கை தயாராகவுள்ள நிலையில் அது தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்கென ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க இன்று இலங்கை வருகிறார்.
இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கமைவாகவே கலந்துரையாடல்களில் பங்குபற்றுவதற்கென ரவிநாத் கொழும்பு வருகிறாரென அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
இரண்டு நாட்களுக்கு கொழும்பில் தங்கியிருக்கும் இவர் வெளிவிவகார அமைச்சு மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி கூட்டத்தொடரில் முன்வைக்கப்படவுள்ள இலங்கை அரசாங்கத்தின் வலுவான நிலைப்பாடு குறித்த தீர்மானங்களை தயார் செய்வாரென தெரிய வருகிறது.
மோதல்களுக்குப் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும் விதம், நல்லிணக்கச் செயற்பாடுகள் ஆகியன குறித்து தெளிவான விளக்கங்களை முன்வைப்பது தொடர்பிலான திட்ட வரைபுகள் இந்தக் கலந்துரையாடலின் போது முன்னெடுக்கப்படுமென எதிர்பார்ப்பதாகவும் அவ்வதிகாரி கூறினார்.
எதிர்வரும் திங்கட்கிழமை ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக் குழுவில் ஆரம்பிக்கப்படவுள்ள கூட்டத் தொடருக்கு இலங்கை அரசாங்கம் சார்பில் ரவிநாத் ஆரியசிங்க தலைமை தாங்கவுள்ளார்.
இதற்கான ஏற்பாடுகள் பல்வேறு கட்டங்களாக தயார்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஏற்பாடுகளை மேலும் வலுவூட்டும் வகையிலேயே ரவிநாத்தின் கொழும்பு விஜயம் அமையவுள்ளது.
இலங்கை சார்பிலான பிரதிநிதிகள் குழுவொன்றும் இக் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவுள்ள நிலையில், அக்குழுவைச் சேர்ந்த சிலர் ஏற்கனவே ஜெனீவா சென்று அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சின் உயரதிகாரி கூறினார்.
ரவிநாத் தலைமையிலான குழுவில் சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த 5 சட்டத்தரணிகள், நீதி அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சை சேர்ந்த உயரதிகாரியொருவர், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஆகியோர் அங்கம் வகிப்பதாகவும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இக் கூட்டத் தொடரில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்கின்றனரா? என்பது குறித்து அமைச்சின் பேச்சாளர் ரொட்னி பெரேரா எதனையும் திட்டவட்டமாக கூற மறுத்துவிட்டார்.
Geen opmerkingen:
Een reactie posten