தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 29 januari 2013

கறுப்பு ஜனவரி போராட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட இலங்கை ஊடகவியலாளர்கள் பங்கேற்பு !


இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக ஜனவரி மாதத்தில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களை நினைவுகூரும் நோக்கில் "கறுப்பு ஜனவரி" என்ற பெயரில் தலைநகர் கொழும்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களும், சிவில் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்ட போராட்டம் ஒன்று நடைபெற்றது.
போராட்டத்தில் பங்கு கொண்டவர்கள், கொல்லப்பட்ட பிரபல செய்தியாளர்களின் புகைப்படங்கள் கொண்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டில் 17 செய்தியாளர்களும், ஊடகத்துறையைச் சேர்ந்த ஊழியர்களும் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் பட்டியலிடுகின்றன. ஆனாலும் இது தொடர்பாக யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.
போர் முடிந்த பிறகு 2010ம் ஆண்டு கடத்தப்பட்ட பிரகீத் ஏக்னலிகொட என்னவானார் என்பதும் இன்னமும் தெரியவில்லை.
போர் நடந்த காலத்தில் நேரடித் தாக்குதல்கள் அதிகம் இடம்பெற்றதாகக் கூறும் செய்தியாளர்கள், நாட்டின் செய்தியாளர்களிடையே தற்போது பெருமளவு சுய தணிக்கை நடப்பதாகக் கூறுகின்றனர்.
பத்திரிகையாளர்கள் மீது இடம்பெற்ற தாக்குதலுக்கும் தமக்கு சம்பந்தம் கிடையாது என்று கூறும் அரசு, முன்பு நடைபெற்ற கொலைகள் தொடர்பாக விசாரணைகள் தொடர்வதாகக் கூறுகிறது.
சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரம் இல்லாத்தால் அவர்களை விட வேண்டியதாயிற்று என அமைச்சர் கெஹ்லிய ரம்புக்வல்ல தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten