இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவருக்கு கட்டாரில் உள்ள நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
வெங்கடாசலம் சுதேஷ்கர் என்ற 22 வயதான இளைஞருக்கே கட்டாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கட்டார் தூதரகத்தின் மூலம் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாரில் பணிபுரிந்த இந்திய இளைஞர் ஒருவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக குறித்த இளைஞர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்ததாக தூதரகம் தெரிவித்துள்ளது.
கந்தானை பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர், 2010ஆம் ஆண்டின் மார்ச் மாதம் தொழில்வாய்ப்புப் பெற்று கட்டார் சென்றுள்ளார்.
எனினும் இக் கொலை சம்பவம் தொடர்பில் 2011ம் ஆண்டின் ஜூன் மாதமளவில் அந்த இளைஞர் கட்டார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், தமது மகனை விடுதலை செய்வதற்காக கொலை செய்யப்பட்ட இளைஞரின் பெற்றோர் 35 லட்சம் ரூபாவை இழப்பீடாகக் கோரியுள்ளனர் என மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இளைஞரின் தாய் தெரிவித்தார்.
எனினும், அந்தத் தொகையை செலுத்துவதற்கான இயலுமை தம்மிடமில்லை என்றும் இளைஞரின் தாயார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் கொலைசெய்யப்பட்ட இளைஞரின் இரத்த உறவுகள் கோரும் இழப்பீட்டு தொகை கொடுக்கப்படும் பட்சத்தில் குறித்த இளைஞர் விடுதலை செய்யப்படுவார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten