அனைத்துலக நாடுகளின் கடுமையான அழுத்தங்கள் இந்தமுறை சிங்களத்திற்கு ஜெனீவாவில் காத்திருக்கின்றது. இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையில் நடக்கவிருக்கின்ற ஜெனிவா கூட்டத்தொடர் இலங்கைக்கு எவ்வாறு அமையும் என்பது தொடர்பில் எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் வெளியிட்ட சூடான கருத்துகள்:
இது தொடர்பாக ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. தெரிவித்துள்ளதாவது:
நடக்கவிருக்கும் ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகக் கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம். இதனைத் தீர்மானிக்கும் சக்தி இந்தியாதான். அதன் கைகளிலேயே யாவும் தங்கியுள்ளன.
ஏனெனில், 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது தமக்கு எதுவும் தெரியாததுபோல மேலே பார்த்துக் கொண்டிருந்த இந்தியா, இப்போதும் அவ்வாறான போக்கையே கடைப்பிடித்து வருகின்றது.
கடந்த வருடம் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட்டது போன்றே இம்முறையும் இலங்கைக்கு எதிராகப் பிரேரணையொன்று கொண்டு வரப்படலாம்.
ஆனால் இலங்கை அரசை சர்வதேச ரீதியில் சவாலுக்குட்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்தியா அதனைக் காப்பாற்றி விடுகிறது. தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் இந்தியாவுக்கு அக்கறையில்லை. மாறாக இலங்கையைக் கொண்டு தமது பொருளாதாரத்தை வலுப்படுத்தவே அது நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை சிபார்சுகளின் அமுலாக்கம், பிரதம நீதியரசரின் பதவி நீக்கல் விவகாரம், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைது ஆகிய விடயங்கள் ஜெனிவாக் கூட்டத்தொடரில் சர்வதேச நாடுகள் இலங்கை அரசுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க ஏதுவாக அமையும்.
எனினும், அங்கு பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள் எவ்வாறமையும் என்பது இந்தியாவின் தீர்மானத்தில்தான் இருக்கிறது என்றார் ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல.
நவசமசமாஜக் கட்சித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன
பொறுப்புக்கூறும் கடப்பாட்டிலிருந்து நழுவிச் செல்லும் இலங்கை அரசுக்கு ஜெனிவாக் கூட்டத் தொடர் சோதனைக்களமாக அமையும்.
மனிதாபிமானத்தை இல்லாதொழிக்கும் இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச நாடுகளுள் ஏதாவது ஒரு நாடு பிரேரணையொன்றைக் கொண்டுவரவேண்டும்.
எவரிடமிருந்தாவது எமக்கு நன்மை கிடைக்கவேண்டும். தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவேண்டும்.
இம்மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரிகள் குழுவுடன் பேச்சு நடத்துவதற்கு அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவதற்கான அமைப்பு திட்டமிட்டுள்ளது.
இலங்கை அரசுக்கு எதிராகப் பிரேரணையைக் கொண்டுவந்து அதைப் பாதுகாக்கும் அமெரிக்காவின் நடவடிக்கைகள் குறித்து நாம் அந்தக் குழுவிடம் எடுத்துரைக்கவுள்ளோம்.
அரசின் தொடர்ச்சியான அடக்குமுறைகளால் தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, இவர்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க சர்வதேச நாடுகளின் ஏதாவது ஒரு நாட்டின் மூலமாவது நன்மை கிடைக்கவேண்டும்.
ஐக்கிய சோஷலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய
அரசின் சமகால நடவடிக்கைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டு வருகின்ற சர்வதேச நாடுகள், ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கைக்குப் பல வழிகளிலும் அழுத்தம் கொடுக்கும்.
எனவே, நடக்கவிருக்கின்ற ஜெனிவா கூட்டத்தொடர் அரசுக்குப் பேராபத்தானதாகவே அமையும்.
ஜெனிவா கூட்டத் தொடரில் சர்வதேச நாடுகள் தொடுக்கும் கேள்விகளுக்கு எப்படிப் பதிலளிப்பது என்பது தெரியாமல் அரசு தடுமாறிக் கொண்டிருக்கின்றது.
இவ்வாறான நிலையில் ஜெனிவா கூட்டத் தொடரூடாக மட்டும் அரசுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவேண்டும் என நாம் பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது.
அரசுக்கு எதிராக மாபெரும் மக்கள் கிளர்ச்சியை நாட்டில் ஏற்படுத்தவேண்டும். அரசுக்கு எதிராகத் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் மக்கள் போராட்டங்களும் ஜெனிவாத் தொடரில் சர்வதேச நாடுகள் அரசுக்கு அழுத்தங் கொடுக்க ஏதுவாக அமையும்.
அரசின் சட்டவிரோத நடவடிக்கைகளை நன்கு அவதானித்து வருகின்ற ஐ.நா. மற்றும் சர்வதேச நாடுகள் மார்ச் மாத ஜெனிவா கூட்டத் தொடரில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்.
Geen opmerkingen:
Een reactie posten