தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 27 januari 2013

இலங்கை இராணுவத்தின் 53வது டிவிஷன் போர்க்குற்ற முத்திரை குத்தப்பட்ட படைப்பிரிவு?


தவறான தகவல்கள், ஊகங்களின் அடிப்படையில் அமெரிக்கா தமக்கு தொந்தரவு கொடுத்து வருவதாக கடந்த வாரம் பரபரப்புக் குற்றச்சாட்டொன்றை சுமத்தியிருந்தார் இலங்கைப் பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச.
அவரது இந்தக் குற்றச்சாட்டுக்கும் கோபத்துக்கும் காரணம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவை தமது நாட்டில் மேலதிய பயிற்சிக்க ஏற்றுக்கொள்ள அமெரிக்கா மறுத்து விட்டது மட்டுமல்ல, அவரை ஏற்க மறுத்ததற்கு அமெரிக்கத் தரப்பில் கூறப்பட்ட காரணமும் தான்.
நான்காவது கட்ட ஈழப் போரின் போது இராணுவத்தின் 53வது டிவிஷனின் கட்டளை அதிகாரியாக இருந்தார் என்பதற்காகவே, மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவுக்கு பயிற்சி அளிக்க அமெரிக்கா மறுத்திருந்தது.
பயிற்சிக்காக இலங்கை அரசாங்கம் அனுப்பிய அதிகாரி ஒருவரை ஏற்க அமெரிக்கா மறுத்த முதலாவது சந்தர்ப்பம் இது என்றே தெரிகிறது.
இதற்கு முன்னர், முன்னாள இராணுவத் தளபதி ஜெனரல் லயனல் பலகல்லவை கனடாவுக்கான தூதுவராக நியமிக்க இலங்கை அரசாங்கம் முற்பட்டபோது அவரைக் கனடா நிராகரித்திருந்தது.
அண்மையில் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை தென்னாபிரிக்காவுக்கான பிரதித் தூதுவராக நியமிக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்த போதும் அது போலவே நடந்தது.
அதேவேளை,  இறுதிப்போர் முழுவதற்கும் 58வது டிவிஷன் தளபதியாக இருந்த அவர், ஐநா வுக்கான பிரதித் தூதுவராக இப்போதும் அமெரிக்காவில் தான் பணியாற்றி வருகிறார்.
இத்தகைய சூழலில் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவுக்கு வாயப்பு மறுக்கப்பட்டது கோத்தபாய ராஜபக்சவுக்கு எரிச்சலை கொடுத்திருப்பதிலும் ஒரு நியாயம் உள்ளது.
அதாவது மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க போரின் போது 53வது டிவிஷனின் தளபதியாக இருந்தவரல்ல.
நான்காவது கட்ட ஈழப்போர் வெடித்த போது 53வது டிவிஷனின் தளபதியாக இருந்தவர் மேஜர் ஜெனரல் சமந்த சூரிய பண்டார தான்.
முன்னாள இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு நெருக்கமான அவர் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டு சில மாதங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் மரணமாகியிருந்தார்.
அவரையடுத்து மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன அந்த டிவிஷனுக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அவரே போரின் முடிவுவரை அந்தப் பதவியில் இருந்தார்.
அது மட்டுமன்றி கோத்தபாய ராஜபக்ச கூறியது போன்று மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க வன்னியில் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்ட 53, 55, 57, 58, 59 ஆகிய டிவிஷன்களிலோ ஏனைய மூன்று அதிரடிப்படைப் பிரிவுகளிலோ பணியாற்றியவரல்ல.
பொறியியல் படைப் பிரிவைச் சோ்ந்த மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க போர் முடிவுக்கு வந்த பின்னர் 2010ல் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.
அதன் பின்னர் அண்மையில் இராணுவச் செயலராக அண்மையில் நியமிக்கப்பட்டவர்.
இறுதிக்கட்டப் போரில் இராணுவத்தின் 53வது டிவிஷனின் கட்டளை அதிகாரியாகச் பணியாற்றிவர் என்று காரணம் கூறப்பட்டு அமெரிக்காவினால் நிராகரிக்கப்பட்டது, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் இராணுவத் தலைமையகம் கொடுத்த விளக்கத்தை ஏற்று, அமெரிக்கத் தூதரகம் தவறை ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இத்தகைய  நிலையில் நான்காவது கட்ட ஈழப்போரில் 53வது டிவிஷனின் கட்டளை அதிகாரியாக இருந்தவர்கள் யார் என்ற விபரம் அமெரிக்காவுக்குத் தெரியாமல் போனது எப்படி?
மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவின் சுயவிபரக்கோவையை கவனத்தில் எடுக்காமல் அமெரிக்கா இந்த முடிவை எடுத்தது எப்படி?
இந்த இரண்டு கேள்விகளும் இப்போது எழுந்துள்ளன.
மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க புனர்வாழ்வு ஆணையாளராக இருந்த போது அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தவர்.
எனவே அவர் பற்றிய சுயவிபரக் கோவையை கவனத்தில் எடுக்காது போயிருந்தாலும், தனிப்பட்ட ரீதியில் நன்கு அறியப்பட்டவரே.
எனவே தான்அமெரிக்கா இது வேண்டுமென்றே செய்த காரியமா என்ற சந்தேகம் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எழுந்துள்ளதாகத் தெரிகிறது.
மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவின் பெயரை அமெரிக்கா நிராகரித்ததை ஒரு தனிப்பட்ட விடயமாக எடுத்துக் கொள்ள முடியாது.
அதை கோத்தபாய ராஜபக்ச அவ்வாறு எடுத்துக் கொண்டதாகவும் தெரியவில்லை.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த கடந்த மூன்றரை ஆண்டுகளாக இலங்கை இராணுவம் தொடர்பாக அமெரிக்கா கடைப்பிடித்து வந்த கொள்கையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதையே இது உணர்த்தியுள்ளது.
53வது டிவிஷனை போர்க்குற்றம் புரிந்த படைப்பிரிவாக அமெரிக்கா பட்டியலிட்டுள்ளதால் தான் அதன் தளபதி என்பதற்காக மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவை நிராகரித்துள்ளது.
இனிமேல் 53வது டிவிஷனைச் சோ்ந்த  அதிகாரிகளுக்கு அமெரிக்கா பயிற்சி அளிக்காது என்ற அறிவிப்பு இதன் மூலமத் மறைமுகமாக வெளியிடப்பட்டுள்ளது என்று கூடக் கருதலாம்.
ஆனால் குறிப்பாக உணர்த்துவதற்கு அவ்வாறு செய்திருக்கலாம்.
போர் முடிவுக்கு வந்தவுடனேயே அமெரிக்கா மீறல்களுக்குப் பொறுப்பு கூறுவது பற்றி பேசத் தொடங்கி விட்டது.
ஆனாலும் அப்போது அமெரிக்கா, இலங்கை இராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிப்பதில் இந்த அணுகுமுறையைக் கடைப்பிடித்திருக்கவில்லை.
அதற்கு உதாரணமாக மேஜர் ஜெனரல் உதய பெரேராவை எடுத்துக் கொள்ளலாம்.
அவர்தான் இராணுவத் தலைமையகத்தில் இருந்து ஒட்டுமொத்த போருக்குமான நடவடிக்கைப் பணிப்பாளராகப் பணியாற்றியிருந்தார்.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் உயர் பயிற்சிக்காக அவர் பரிந்துரைக்கப்பட்ட போது அதை அமெரிக்கா நிராகரிக்கவில்லை.
அவர் பயிற்சி முடிந்து வந்தே தற்போது கிளிநொச்சி படைத் தலைமையகத் தளபதியாகப் பணியாற்றுகிறார்.
எனவே போரில் பங்கெடுத்த இராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்கா கதவடைப்புச் செய்ய முடிவெடுத்துள்ளது இப்போதுதான்.
இது கூட எத்தகைய கோணத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்றோ இதில் பின்னபற்றப்படும் அணுகுமுறைகள் என்னவென்றோ சரியான விபரங்கள் இல்லை.
என்றாலும் 53வது டிவிஷன் தளபதி என்ற வகையில் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க நிராகரிக்கப்பட்டதே அமெரிக்காவின் இந்த முடிவைப் புலப்படுத்தியுள்ளது.
இலங்கைக்க அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் அதற்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்ற நோக்கில் தான் அமெரிக்கா இவ்வாறு நடந்து கொண்டிருக்க வேண்டும்.
மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க யார் என்று தெரியாமல் அவர் நிராகரிக்கப்பட்டார் என்ற கருத்தில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை.
அதனால் தான் கோத்தபாய ராஜபக்ச அதை முட்டாள்தனமாக நியாயம் என்று குறிப்பிட்டள்ளார்.
அதேவேளை 53வது டிவிஷனின் கட்டளை அதிகாரி என்பதைச் சுட்டிக்காட்டி அனுமதி மறுக்கப்பட்டதன் அர்த்தத்தை அரசாங்கம் குறிப்பாக கோத்தபாய ராஜபக்ச நன்றாகவே புரிந்துகொண்டுள்ளார் போலுள்ளது.
ஏனென்றால் அவர் அமெரிக்காவுக்கு எச்சரிக்கும் வகையில் தெரிவித்த கருத்தின் ஆழமே அவருக்குச் சாட்சி.
அமெரிக்கா பயிற்சி வழங்க மறுத்தால் சீனாவிடம் போவோம் என்று அவர் ஆவேசப்பட்டதும் ஒருமிரட்டல்தான்.
எவ்வாறாயினும் இந்த மிரட்டலை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலர்கள் மூவரின் கொழும்புக்கான பயணச் சூழலில் அவர் வெளிட்டது துணிச்சலானதே.
அமெரிக்காவைப் பொறுத்தவரையில் இலங்கையைப் பணியவைக்க முனைகிறது.
ஆனால் இலங்கையோ அப்படிப் பணிந்தால் போர்க்குற்றச்சாட்டகள் தமது தலையில் கட்டப்பட்ட விடும். அவற்றுக்கப் பதிலளிக்க வேண்டி வரும் என்று அச்சம் கொள்கிறது.
அதே பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இவ்வாறு ஆவேசப்பட்டதற்கு காரணம்.
சுபத்ரா

Geen opmerkingen:

Een reactie posten