இலங்கையில் காணாமல் போனவர்களென்று எவரும் இல்லையென பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ளார். அப்படியானால் தமது உறவுகளைக் காணாது தெருவழியில் அலைந்து திரியும் பெண்களுக்கு விசரா பிடித்துள்ளது?. இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற குழுவின் தலைவர் இரா. சம்பந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.
கைதானவர்கள், சரணடைந்தவர்கள் பெருமளவானோர் காணாமல் போயுள்ளனர். இந்தநிலையில் அரசாங்கத்தின் முக்கிய அதிகாரியொருவர் இவ்வாறு கருத்துக் கூறுவதை என்னவென்று சொல்வது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் காணாமல் போனவர்கள் என்று எவரும் இல்லை. இவ்விடயம் தொடர்பில் சர்வதேசத்தினால் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்று முன்நாள் கருத்து தெரிவித்திருந்தார்.
இது குறித்து கருத்துக் கேட்டபோதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில் ஆணைக்குழு ஒன்றினை நியமித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவே பரிந்துரை செய்துள்ளது.
இந்தநிலையில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட குழுவொன்றின் விசாரணை அறிக்கையினை வைத்துக் கொண்டு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், பொறுப்பு வாய்ந்த அதிகாரியுமான கோத்தபாய ராஜபக்ச கருத்துக் கூறுவது தவறானதாகும்.
ஆணைக்குழுவினை அமைத்து காணாமல் போனோரது மனைவிமார், பெற்றோர், உறவினர்களென பலதரப்பட்டவர்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டு ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.
மனைவி மற்றும் பிள்ளைகளின் கண்முன்னாலேயே கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது?
அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையே நடைமுறைப்படுத்தாத அரசாங்கம் இவ்வாறு கருத்து கூறுவதை என்னவென்று சொல்ல முடியும். தாம் எதனையும் கூறலாம் என்ற நிலையே இங்கு காணப்படுகின்றது.
காணாமல் போனோர் விவகாரத்தில் பிரதான காரணியாக இராணுவத்தினரே உள்ளனர்.
இந்தநிலையில் இராணுவக்குழுவொன்றின் அறிக்கையினை வைத்துக்கொண்டு இலங்கையில் காணாமல் போனவர்கள் என்று எவரும் இல்லையென பொறுப்பு வாய்ந்த அதிகாரியான கோத்தபாய ராஜபக்ச கூறுவது தவறான கருத்தாகும். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் இரா. சம்பந்தன்.
Geen opmerkingen:
Een reactie posten