உலகில் எங்குமே போர் நிறுத்தங்களைச் சீர்குலைப்பதற்கு பெரியதொரு காரணம் தேவைப்படுவதில்லை உணர்ச்சயைக் கிளறிவிடக்கூடிய சில சம்பவங்களே அதற்குப் போதுமானவை.
போரை நடத்தும் முடிவுக்கு எந்தவொரு தரப்பும் வந்துவிட்டால் போதும். அற்பமான காரணங்கள் கூட போருக்கு காரணமாகி விடும்.
அண்மையில் காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் கடும்பனி மூட்டத்தின் மத்தியில் ரோந்து சென்ற இந்திய இராணுவ வீரர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் இப்போது இரு நாடுகளுக்கும் இடையில் பெரும் பதற்றத்தை தோற்றுவித்துள்ளது.
அது இரண்டு படையினரின் மரணங்களுடன் நின்று போயிருந்தால் இந்தளவுக்கு விவகாரம் முற்றியிருக்காது.
கொல்லப்பட்ட லான்ஸ்கோபரல் ஹேம்ராஜ் என்ற இந்தியப் படைவீரரின் தலையை வெட்டி எடுத்துச் சென்றுவிட்டனர் பாகிஸ்தான் படையினர்.
இப்போதைய பிரச்சினைகளுக்கு எல்லாம் அடிப்படை அந்தத் தலைதான்.
அந்தத் தலையைக் கொண்டு வந்து தா என்கிறது இந்தியா. தாம் அந்தத் தாக்குதலை நடத்தவுமில்லை, தலையும் தம்மிடம் இல்லை என்கிறது பாகிஸ்தான்.
ஆனால் இந்தியாவோ தலையில் விடாப்பிடியாக இருக்கிறது.
லான்ஸ்கோபரல் ஹேம்ராஜின் தலையைக் கேட்டு அவரது தாயாரும் மனைவியும் உத்தரப் பிரதேசத்தில் உண்ணாவிரதம் இருக்கின்றனர். அதேவேளை, இந்தியா பாகிஸ்தான் எல்லையிலோ இன்னும் எத்தனையோ தலைகளைப் பலியெடுக்கக்கூடிய போருக்கான ஆயத்தங்கள் நடந்தேறுகின்றன.
இருதரப்பிலும் படைக்குவிப்பு, மிரட்டல்கள், துப்பாக்கிச்சூடுகள், குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன.
எல்லையில் வசிக்கும் மக்கள் இடம்பெயரத் தயாராகவும் இடம்பெயர்ந்து கொண்டும் இருக்கின்றனர். பதற்றத்தை தணிக்க ஐநா வின் துணையுடன் பேசலாம் என்கிறது பாகிஸ்தான். ஆனால் இந்தியா அதற்குத் தயாராகவில்லை. இன்மேல் பாகிஸ்தானுடன் சுமுக உறவுக்கு சாத்தியமில்லை என்று அறிவித்து விட்டார் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்.
இதற்கிடையே ஒரு தலைக்குப் பதிலாக பத்து பாகிஸ்தானியர்களின் தலையை எடுக்க வேண்டும் என்கிறது ஒரு கட்சி. மற்றொரு கட்சியோ 40 தலைகளை எடுக்க வேண்டும் என்கிறது.
பதற்றத்தை தணிக்க பாகிஸ்தானுடன் பேசுவதற்கு இந்தியா தயாராக இருக்கிறது. ஆனால் முதலில் தலையெடுத்த படுகொலைகளுக்கு நியாயம் வேண்டும் என்கிறது. அதாவது முதலில் இரு இந்தியப் படையினரின் படுகொலைகளுக்குப் பொறுப்புக் கூறும் நியாயம் வழங்க வேண்டும், உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அழுங்குப்பிடியில் நிற்கிறது இந்தியா.
தமது இரு படையினர் கொல்லப்பட்டதற்காக அவர்களில் ஒருவரின் தலையை வெட்டிச் சென்றதற்காக பாகிஸ்தானுடன் போருக்கே தயாராகி நிற்கிறது இந்தியா.
ஆனால் ஆயிரக்கணக்கான படுகொலைகள் அரங்கேறிய முள்ளிவாய்க்கால் அவலங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற விடயத்தில் இந்தியா வலுவாக நிற்கவில்லை.
இறுதிக்கடப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை முதன்மைப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற தமிழர் தரப்பில் வலியுறுத்தல்களை ஏளனமாகப் பார்ப்பவர்களும் உள்ளனர். எல்லாம் முடிந்த பின்னர் இதனால் என்ன கிடைத்துவிடப் போகிறது என்ற கேள்வி இங்கும் பலரிடம் உள்ளது.
இந்தியாவும் கூட கிட்டத்தட்ட இதே அணுகுமுறை நிலைப்பாட்டைக் கடைப்பிடித்த நாடுதான். ஆனால் அவர்களுக்கு இப்போது ஒரு தலையால் அந்த வலி தெரிகிறது.
தலைக்காக அடம்பிடிக்காமல் அமைதியை ஏற்படுத்துமாறு யாரும் இந்தியாவுக்கு ஆலோசனை கூறியதாகத் தெரியவில்லை.
அந்த ஒரு தலையால் இந்தியாவுக்கு ஒன்றும் குடிமுழுகிப் போய்விடப் போவதுமில்லை.
ஆனால் அந்தத் தலை ஏற்படுத்தியுள்ள உணர்ச்சிப் பெருக்கும் அதனால் பாதிக்கப்பட்டுள்ள கௌரவமும் போரின் எல்லை வரை இந்தியாவைக் கொண்டு சென்று நிற்க வைத்துள்ளது.
ஒரு தலைக்காக இந்தியாவே இந்தளவுக்கு கொந்தளிக்கும் போது முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் இதுபோன்று ஆயிரக்கணக்கான தலைகளை இழந்த தமிழர்கள் தமக்கான நீதியைக் கோருவதில் என்ன தவறு என்ற கேள்வி தமிழர்களிடையே எழுவதில் நியாயமுள்ளது.
போர் நிறுத்தங்களை சீர்குலைக்கும் தலையெடுப்புகள் இங்கேயும் இடம்பெற்ற வரலாறு உள்ளது.
1994ல் சந்திரிகா குமாரதுங்க ஆட்சிப்பீடம் ஏறிய பின்னர் அவருக்கு நல்லெண்ணத்தை வெளிப்படுத்த விடுதலைப்புலிகள் தற்காலிக போர்நிறுத்தத்தை அறிவித்திருந்தனர்.
அப்போதுதான் அந்தத் தலை எடுப்பு நடந்தது. 1994 நவம்பர் 17ம் நாள் வன்னியிலிருந்து காடுகள் வழியாக மட்டக்களப்புக்கு சென்று கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் அணியொன்றை நெடுங்கேணிப் பகுதியில் இராணுவத்தினர் பதுங்கியிருந்து தாக்கினர்.
அதில் கொல்லப்பட்ட புலிகளின் அப்போதைய மூத்த தளபதிகளில் ஒருவரான லெப். கேணல் மல்லி அல்லது அமுதனின் தலையை படையினர் வெட்டிக் கொண்டு சென்றிருந்தனர்.
லெப். கேணல் மல்லி வன்னிப் பிராந்தியப் புலனாய்வுத்துறை பொறுப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போதே சந்திரிகா அரசுடனான புலிகளின் பேச்சு பற்றிய சந்தேகங்கள் ஏற்படத் தொடங்கின.
அதன் பின்னர் தான் போர்நிறுத்த உடன்பாடு செய்துகொள்ளப்பட்டது.
இனி அடுத்த விவகாரத்துக்கு வருவோம்.
சுமார் ஒரு மாதமாக இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த எம்பி அமீனா என்ற ஈரானிய சரக்கு கப்பல் கடந்த வாரம் தப்பிச் சென்ற விவகாரம் பல கேள்விகளை எழுப்ப வைத்துள்ளது.
இந்தக் கப்பல் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது தப்பிச் சென்ற விதம் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஜோ்மனியின் வங்கி ஒன்றில் பெறப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தாததால் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்தக் கப்பல் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது.
ஈரானிய நிறுவனத்தின் மேலும் இரு கப்பல்கள் சிங்கப்பூரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
இதில் 24 மாலுமிகள் இருந்தனர். அவர்களில் 8 பேர் இந்தியர்கள். ஏனையோர் ஈரானியர்கள்.
கப்பல் தடுத்து வைக்கப்பட்டதை அடுத்து இந்தியர்கள் அனைவரும் நாடு திரும்பிவிட எஞ்சியிருந்த ஈரானியர்களே கப்பலுடன் தப்பிச் சென்றுள்ளனர்.
தமது பாதுகாப்பிலிருந்த கப்பல் தப்பிச் சென்றது குறித்து இலங்கைக் கடற்படை அளித்துள்ள விளக்கம் விநோதமானது.
கடந்த புதன்கிழமை தப்பிச் செல்ல முயன்ற கப்பலை தடுக்க எச்சரிக்கை வேட்டுகளைத் தீர்த்தோ நிற்குமாறு தொடர்பு கொண்டு கேட்டோம்.
எந்தப் பகுதியிலுமின்றி அது இலங்கைக் கடல் எல்லைக்கு வெளியே போய்விட்டது என்று கூறியுள்ளார் கடற்படைப் பேச்சாளர் கோசல வாணகுலசூரிய.
இலங்கையில் குற்றங்கள் எதிலும் ஈடுபடாத அந்தக் கப்பலை கரையிலிருந்து 12 கடல் மைல்களுக்கு அப்பால் சென்று தடுத்து நிறுத்தி பிடிப்பதற்கு ஐநா வின் சட்டங்கள் இடமளிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தப்பிச் சென்ற கப்பல் ஈரானிய அரசுக்கு சொந்தமானது என்றும் தனியார் நிறுவனம் போன்று இயக்கப்படுவதாகவும் கருதப்படுகிறது.
ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் மிக நெருக்கமான உறவுகள் உள்ளன.
அதேவேளை அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இத்தகைய பின்னணியில் ஈரானியக் கப்பலை இலங்கைக் கடற்படை தப்பிச் செல்ல இடமளித்ததா என்ற சந்தேகம் தோன்றியுள்ளது.
ஏனென்றால் இலங்கைக் கடற்படை அளித்த விளக்கம் அப்படிப்பட்டது.
தெற்காசியாவிலேயே இந்தியா, பாகிஸ்தானுக்கு அடுத்ததாக மூன்றாவது வலுவான கடற்படையைக் கொண்ட நாடு இலங்கை அதுவும் அதிவேகத் தாக்குதல் படகுகளைக் கொண்ட விடுதலைப்புலிகளின் கடற்புலிகளையே தோற்கடித்த அனுபவத்தையும் போதிய வளங்களையும் கொண்டது.
மெதுவாக ஊர்ந்து நகரும் சரக்குக் கப்பலை சில நிமிடங்களிலேயே துரத்தி பிடித்து விடக்கூடிய ஆற்றலைக் கொண்டது. அப்படியிருந்தும் எச்சரிக்கை வேட்டுக்களைத் தீர்த்தோ நிற்கவில்லை. நிறுத்துமாறு அறிவித்தோ நிற்காமல் போய்விட்டது என்று நியாயம் சொல்லியுள்ளது கடற்படை.
அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்லும் அகதிகளைத் தடுப்பதற்காக உசார் படுத்தப்பட்ட நிலையில் கடற்படை உள்ள நிலையில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
எச்சரிக்கை வேட்டுத் தீர்க்கப்பட்டதாகவும் நிற்குமாறு தொடர்பு கொள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளதிலிருந்தே கடற்படைக்குத் தெரியத்தக்கதாகவே கப்பல் தப்பிச் சென்றது என்பது உறுதியாகியுள்ளது.
இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் நெருக்கம் இருக்கும் நிலையிலும் தான் சந்தேகங்கள் இன்னும் வலுப்பெறுகின்றன.
அதுவும் உயர்நீதிமன்றத்தினால் தடுத்து வைக்க உத்தரவிடப்பட்ட கப்பல்தான தப்பிச் சென்றுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு கட்டுப்படாமல் நாடாளுமன்றம் நடந்துகொண்ட நிலையில் தான் இதுவும் நடந்துள்ளது.
அதேவேளை 12 கடல் மைல்களுக்கு அப்பால் தம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் அதற்கு ஐநா சட்டங்கள் இடமளிக்கவில்லை என்றும் கடற்படை கூறியுள்ள நியாயம் நகைப்பிற்கிடமானது.
12 கடல் மைல் வரைதான் இலங்கைக்குச் சொந்தமென்கிறது அது.
ஆனால் போர்நிறுத்தம் நடைமுறையிலிருந்த போது 2003 மார்ச்சில் விடுதலைப்புலிகளின் கொய்மர் என்ற கப்பலையும் யூனில் சொய்ஸின் என்ற கப்பலையும் இலங்கைக் கடற்படை மூழ்கடித்தது.
அப்போது போர்நிறுத்த உடன்பாட்டுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திய அந்தச் சம்பவங்கள் 12 கடல் மைல்களுககுள் இடம்பெற்றிருக்கவில்லை அந்தக் கப்பல்கள் இலங்கையில் குற்றங்களைப் புரிந்திருக்கவுமில்லை.
அப்போது 200 கடல் மைல் வரை இலங்கையின் பொருளாதாரக் கடல் எல்லைக்குள் தான் உள்ளது என்று நியாயப்படுத்தியதும் இதே கடற்படைதான்.
விடுதலைப்புலிகளின் கப்பல்களை 1700 கி.மீற்றர்களுக்கும் அப்பால் தேடிச் சென்று வேட்டையாடிய இலங்கைக் கடற்படை 12 கடல் மைல்களுக்கு அப்பால் ஈரானியக் கப்பலைத் தடுப்பதற்கு அதிகாரமில்லை என்று கையை விரித்திருப்பது நகைப்பிற்குரியது.
எவ்வாறாயினும் விடுதலைப்புலிகள் இலங்கைக் கடற்படையின் எதிரிகள் என்பதும், ஈரான் நட்பு நாடு என்பதையும் மறந்துவிட முடியாதே.
சுபத்ரா
http://news.lankasri.com/show-RUmryBRUNWkx7.html
Geen opmerkingen:
Een reactie posten