2009 ம் ஆண்டு நமது தமிழினம் முள்ளிவாய்க்காலில் சந்தித்த கொடூரமான படுகொலைகளுக்கு இலங்கையின் ஜனாதிபதி மகிந்தவும் இந்தியா உட்பட பல உலக நாடுகளுமே காரணம் என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கின்றோம்.
ஆனால் மேற்சொன்ன நாடுகள் மற்றும் தனிமனிதர்களோடு அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதியும் காரணகர்த்தா என்றுதான் நான் கூறுவேன். அதற்கு பல காரணங்கள் உண்டு.
நாம் வெறுமனே கருணாநிதியின் மீது பழியைப் போடுவதற்காக இதைக் கூறவில்லை. கருணாநிதியின் கபடத்தனத்தை நன்கு அறிந்தவர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் நான் கூறுகின்றேன்.
முள்ளிவாய்க்கால் வரையும் நமது தமிழ் உறவுகளையும் போராளிகளையும் குறிவைத்துச் சென்ற பல்நாட்டுப் படைகளின் அகோரமான தாக்குதல்கள் காரணமாக விடுதலைப் புலிகளின் வேண்டுகோளின் பேரில் அப்பாவி மக்கள் பதுங்கு குழிகளில் மறைந்திருந்தனர்.
அப்போது உலகத் தமிழர்களையும் தமிழ் நாட்டுத் தமிழர்களையும் ஏமாற்றுவதற்காக போலியான உண்ணாவிரத்தை மேற்கொண்ட கருணாநிதி அதேநாளின் தாக்குதல்கள் இனி நடத்தப்படாது. யுத்தம் ஓய்ந்து விட்டது என்று அறிவித்த வண்ணம் தனது பொய்யான உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
கருணாநிதியின் கபடத்தனமான அறிவிப்பைக் கேட்டுவிட்ட பதுங்குகுழிகளில் தங்கியிருந்த மக்கள் வெளியே வந்தனர்.
மக்கள் வெளியே வந்து வீதிகளில் நடந்து செல்வதைக் கண்ட பல் நாட்டுப் படைகள் விமானப்படைகளுக்கும் கடற்படைகளுக்கும் கொத்துக்கொத்தாக குண்டுகளை வீசும்படி அறிவித்தன.
இவ்வாறு கொத்துக்கொத்தான குண்டு வீச்சுக்களால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான அப்பாவி மக்களும் போராளிகளும் கொல்லப்பட்டார்கள்.
இ;ந்த திட்டமிட்ட படுகொலைகள் இடம்பெற்றது இரண்டே நாட்களில் தான். அங்கு தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதைக் அறிந்த தமிழ்நாட்டுத் தமிழர்களும் தலைவர்கள் சிலரும் கருணாநிதியிடம் அங்கு யுத்தம் நிறுத்தப்பட்டு விட்டதாகக் கூறினீர்கள். ஆனால் நமது தமிழ் உறவுகள் தொடர்ந்தும் கொலை செய்யப்படுகின்றார்களே என்று கேட்டார்கள்.
அதற்கு கருணாநிதி கூறிய பதில் “மழை நின்றுவிட்டது! ஆனால் தூவானம் நிற்கவில்லை போலும் என்று அடுக்கு மொழியில் தனது கபடத் தனத்தை வெளிக்காட்டினார்.
இவ்வாறான கருணாநிதி தற்போது டெசோ மாநாடு என்றும் ஈழத்தமிழர்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும் என்று முதலைக் கண்ணீர் வடிக்கின்றார். இதை நம்புவதற்கு உலகத் தமிழர்கள் தயாராக இல்லை”. இவ்வாறு கூறினார்.
தமிழ்நாட்டின் பிரபல ஓவியரும் தமிழ்த் தேசிய உணர்வாளரும், நடிகருமான திரு வீர சந்தானம். கடந்த திங்கட்கிழமையன்று தன்னைச் சந்தித்த கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கத்தோடு உரையாடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சென்னையில் வட பழனி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றது. அப்போது மிகவும் வெளிப்படையாக தனது உணர்வுகளையும் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் உலகம் செய்த சத்pயால் முறியடிக்கப்பட்டது தொடர்பாகவும் தனது கவலைகளைப் பகிர்ந்து கொண்டார்.
திரு வீர சந்தானம் அவர்கள் தமிழ்நாட்டின் பிரபல ஓவியர்களில் ஒருவராவார். அத்துடன் தமிழ்த் தேசிய உணர்வுள்ள இவரும் இவரது மனைவி பிள்ளைகள் ஆகியோர் தலைவர் பிரபாகரன், மற்றும் கேணல் கிட்டு போன்ற போராளித் தலைவர்களை பல தடவைகள் தங்கள் இல்லத்திற்கு அழைத்து விருந்தளித்து மகிழ்ந்தவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களான “அவள் பெயர் தமிழரசி”, அறவான்”, மகிழ்ச்சி, தம்பி உடையான், பிட்சா ஆகிய திரைப்படங்களில் முக்கிய பாத்திரமேற்று நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் தற்போது தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் பல கோடி இந்திய ரூபாய்கள் செலவில் அமைக்கப்பட்டு வரும் “முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நினைவு மண்டபம்” நிர்மாண வேலைகளில் அமையும் ஓவியங்களையும் சிற்பங்களையும் அமைக்கும் பணிகளிலும் முன்னின்று உழைத்து வருபவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
திரு பழ நெடுமாறன், முனைவர் ம. நடராஜன் ஆகியோரோடு சேர்ந்து மேற்படி நினைவு மண்டபம் அமைக்கும் பணிகளில் முழுமையாக ஈடுபட்டிருந்த அவரை உதயன் ஆசிரியர் சந்திக்கச் சென்றபோது அவரது குழுவினரை மிகுந்த அன்போடு வரவேற்றார் திரு வீர சந்தானம் அவர்கள்..
தனது கருத்துக்களை திரு வீர சந்தானம் தொடர்ந்து பகிர்ந்து கொண்டபோது பின்வருமாறு கூறினார்.
இலங்கையில் விடுதலைப் புலிகளை அழிக்கவும் அப்பாவி தமிழ் மக்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்யவும் இலங்கையும் இந்தியா உட்பட ஏனைய உலக நாடுகள் பலவும் திட்டங்கள் தீட்டிய வண்ணம் படை நகர்வுகளை வன்னி மண்ணை நோக்கி நடத்திக்கொண்டிருந்த வேளை நடக்க இருக்கும் கொடிய யுத்தம் பற்றி முன்னரேயே அறிந்து வைத்திருந்த கருணாநிதி அது பற்றி பொது மக்களை அறிந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தமிழ் கட்சிகளின் தலைவர்களும் பொது மக்களும் இலங்கையில் நடைபெறும் கொடிய தாக்குதல்களை நிறுத்தும் படி இந்திய மத்திய அரசாங்கத்தை வற்புறுத்துங்கள் என்று பல தடவைகள் மன்றாடிக் கேட்டும் கலைஞர் கருணாநிதி மசிந்து கொடுக்கவில்லை.
உலகத் தமிழர்களையும் தமிழ் நாட்டுத் தமிழர்களையும் பணத்திற்காகவும் புகழிற்காகவும் விற்றவர் கருணாநிதி என்றுதான் நான் கூறுவேன்” என்றார்.
தலைவர் பிரபாகரனை நீஙகள் எப்போதாவாது நெருக்கமாக சந்தித்துள்ளீர்களா? என்று கேட்டபோது அவர் சிரித்த முகத்தோடு கூறினார்.
அது ஒரு வசந்த காலம். புத்தகத்தில் மட்டுமே படித்திருந்த புறநானூற்று வீரத்தை விடுதலைப் புலிகள் இயக்க தலைவர்கள் சிலரிடம் நேரடியாக பக்கத்தில் இருந்து பார்க்கும் சந்தர்ப்பம் தமிழ்நாட்டில் சிலருக்குத் தான் கிடைத்தது. அவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.
80களில் தலைவர் பிரபாகரனை நான் முதன் முதலில் நேரடியாக சந்தித்தேன். கவிஞர் காசி ஆனந்தனின் கவிதைப் புத்தகம் ஒன்றை கலைஞர் கருணாநிதி தலைமையில் அப்போது வெளியிட்டார்கள்.
அதற்கு தலைவர் பிரபாகரன் வந்திருந்தார். அவரைக் கட்டிப் பிடித்த வண்ணம் நான் “தமிழீழ மண்ணை ஆளப் பிறந்தவர்தான் நீங்கள்” என்று உணர்ச்சி வசப்பட்டவனாக நாம் கூறினேன்.
நமது ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் ஓய்ந்து விட்டது என்று தாங்கள் கருதுகின்றீர்களா என்று அவரிடம் கேட்ட போது அவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக கூறினார்.
சிங்கள இனவாதம் இருக்கும் வரையும் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும். என்றார் ஓவியர் வீர சந்தானம் அவர்கள்.
கனடா உதயன்
Geen opmerkingen:
Een reactie posten