பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றம்
பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றவியல் பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
106 மேலதிக வாக்குகளினால் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 155 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
எதிராக 49 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் இந்தப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன.
இதன் அடிப்படையில் குற்றவியல் பிரேரணை தொடர்பான இறுதி அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
அறிக்கையின் அடிப்படையில் ஜனாதிபதி தீர்மானம் எடுப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குற்றப் பிரேரணைக்கு எதிரான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிலையில், அமைச்சர்களான டியூ குணசேகர, சந்திரசிறி கஜதீர மற்றும் திஸ்ஸ விதாரண ஆகியோர் அந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
அத்துடன், ஆளுங்கட்சி எம்.பி.யான ரஜீவ விஜேசிங்க எதிரணி உறுப்பினரான ஸ்ரீரங்கா ஆகியோர் வாக்களிக்கவில்லை.
எனினும் லங்கா சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த வை.ஜி.பத்மசிறி, அரசாங்கத்துடன் இணைந்து பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார்.
இலங்கையின் உச்சநீதிமன்றமும் மேன்முறையீட்டு நீதிமன்றமும் வழங்கிய உத்தரவுகளை மீறி அரசாங்கம் இந்த கண்டன பதவிநீக்க தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பை நடத்தி நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
http://news.lankasri.com/show-RUmryBSVNWns5.html
குற்றப் பிரேரணையை ஆதரித்து வாக்களிப்பதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை!- நீதியமைச்சர் ஹக்கீம்
[ சனிக்கிழமை, 12 சனவரி 2013, 12:02.40 AM GMT ]
நாடாளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தின்படி, நாடாளுமன்றத்திற்கோ அல்லது அதன் தெரிவுக்குழுவுக்கோ ரிட் ஆணை பிறப்பிக்கின்ற அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இல்லை என்றும் அந்த சட்ட ஏற்பாடு அரசியலமைப்பின் 67-ம் பிரிவில் உள்வாங்கப்பட்டிருப்பதாகவும் நீதியமைச்சர் நாடாளுமன்றத்தில் இன்று நடந்த விவாதத்தில் சுட்டிக்காட்டினார்.
தலைமை நீதியரசர் மீதான நாடாளுமன்றத் தெரிவுக்குழு செல்லாது, அதன் அறிக்கையும் செல்லாது என்ற மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பைக் காட்டி நாடாளுமன்றத்தில் குற்றப் பிரேரணை விவாதத்தை நடத்தக்கூடாது என்று முன்வைக்கப்பட்ட வாதம் தவறானது என்றும் ரவூப் ஹக்கீம் ஆளுங்கட்சி சார்பில் நாடாளுமன்றத்தில் வாதிட்டார்.
நாடாளுமன்றமே மக்களின் நீதி அதிகாரத்தை நீதிமன்றங்களுக்கு வழங்குவதாகவும், நீதிமன்றம் அடிப்படை அற்ற தீர்ப்புகளை வழங்கும்போது அந்த தவறான தீர்ப்புகளை விமர்சிக்கும் சுதந்திரம் நாடாளுமன்றத்திற்கு இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, நீதிபதிகளை பதவிநீக்கம் செய்யும் விடயத்தில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு நீதித்துறை அதிகாரங்களை பிரயோகிப்பதாகவும் அந்த நீதித்துறை அதிகாரங்கள் சட்டத்தின் மூலம் அன்றி நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளால் கிடைக்காது என்றும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வழங்கியிருந்த வியாக்கியானம் பிழையானது என்றும் நீதித்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் வாதிட்டார்.
தாம் ஆரம்பத்திலிருந்தே நீதித்துறை-சட்டவாக்கத்துறை இடையிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பல முயற்சிகளை எடுத்திருந்ததாகவும், ஆனால் இப்போது தலைமை நீதியரசருக்கு எதிரான பதவிநீக்க பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்றும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் குறிப்பிட்டார்.
http://news.lankasri.com/show-RUmryBSWNWnt0.html
Geen opmerkingen:
Een reactie posten