தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 25 januari 2013

இலங்கை உயர்ஸ்தானிகரை அழைத்து கனடா அதிருப்தி வெளியிட்டுள்ளது!


இலங்கை உயர்ஸ்தானிகரை அழைத்து கனடா அதிருப்தி வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.நாட்டின் நிலைமைகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக கனடா, அந்நாட்டுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி வகீஸ்வராவிடம் தெரிவித்துள்ளதாக எம்பஸி என்ற செய்திப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட், இலங்கை உயர்ஸ்தானிகரிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் பொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் மாநாட்டில் இலங்கை நிலைமைகள் குறித்து கேள்வி எழுப்பப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை நிலைமைகள் குறித்து தொடர்ந்தும் கனடா உன்னிப்பாக அவதானிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.மனித உரிமைகள், அரசியல் நல்லிணக்கம், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், ஜனநாயகம் போன்ற துறைகளில் மேம்பாடு ஏற்படுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, 30 ஆண்டுகளாக நீடித்த யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க முயற்சிகளை குறுந்தூர ஓட்டப் பந்தயத்தைப் போன்று முடிவுறுத்த முடியாது எனவும், அது ஓர் மரதன் போட்டியெனவும் இலங்கை உயர்ஸ்தானிகர் வாகீஸ்வரா தெரிவித்துள்ளார் எனவும்
அனைத்து நாடுகளும் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.கனடா மட்டுமே மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.நாட்டு மக்களுக்கு மொழிப் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மேற்கொண்டு வரும் முயற்சிகளை சில நாடுகள் சரியாக புரிந்துகொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுநலவாய அமைப்பின் அங்கத்துவத்திலிருந்து இலங்கையை நீக்குவதற்கான கனடாவின் முயற்சி வெற்றியளிக்குமா?


இலங்கையில் பொது நலவாய மாநாடு நடைபெறாத பட்சத்தில் அதனை நடத்தத் தயாராக இருப்பதாக ஏற்கனவே மொரிஷியஸ் பொதுநலவாய தலைமைச் செயலகத்துக்கு அறிவித்துள்ளது. இலங்கை தொடர்பில் கனேடிய அரசால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொது நலவாய நாடுகள் அமைப்பின் மாநாட்டை கொழும்பில் நடத்துவதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்காக பொதுநலவாய அமைச்சர்கள் மட்ட நடவடிக்கைக் குழு (Commonwealth ministerial action group) அவசர கூட்டமொன்றை நடத்த முடிவுசெய்துள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மாநாடு இந்தவருடம் நவம்பர் 15 முதல் 17ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறுமென முன்னரே தீர்மானிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், கனடாவின் இந்தத் திடீர் நடவடிக்கையால் மேற்படி கூட்டத்தை லண்டனில் கூட்டி இறுதி முடிவை எடுக்க பொதுநலவாய அமைச்சர் மட்ட நடவடிக்கைக்குழு தீர்மானித்துள்ளது.
CMAG எனப்படும் மேற்படி குழுவிடம் இலங்கை தொடர்பில் காட்டமான முறைப்பாட்டை முன்வைத்திருக்கும் கனடா, இலங்கையில் ஜனநாயகமற்ற ஒரு சூழ்நிலை நிலவுவதால் அதனை வேறொரு அங்கத்துவ நாட்டில் நடத்த நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுள்ளது.
இலங்கையில் இம்மாநாடு நடைபெறுமானால் உலக நாடுகளின் தலைவர்கள் பலர் மாநாட்டைப் புறக்கணிக்கும் அபாயம் இருப்பதையும் கனடா சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தப் பின்னணியில், லண்டனில் கூடவுள்ள பொதுநலவாய அமைச்சர் மட்ட நடவடிக்கைக்குழு இலங்கை தொடர்பான விசாரணைகளை நடத்தினால் அதற்கு சில கால அவகாசம் எடுக்கும் சூழ்நிலை ஏற்படலாம். அவ்வாறு ஏற்படும் பட்சத்தில் விசாரணைகள் நடைபெறும் காலப்பகுதியில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் வாக்களிப்பதற்கான தகைமையை இலங்கை தற்காலிகமாக இழக்கவேண்டிய சூழ்நிலை உருவாகக் கூடும்.
இந்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு மாநாட்டை இலங்கையில் நடத்தாதிருக்க பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தீர்மானத்தை எடுக்கும் வாய்ப்பே அதிகமென விடயமறிந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
எவ்வாறாயினும், இலங்கைக்கு அடுத்த மாதம் விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள செயலர் கமலேஷ் சர்மா, இலங்கையின் நிலைவரங்களைப் பார்வையிட்டு பேச்சுகளை நடத்தி இறுதியான முடிவுக்கு வருவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடைபெறாத பட்சத்தில் அதனை நடத்தத் தயாராக இருப்பதாக ஏற்கனவே மொரிஷியஸ் பொதுநலவாய தலைமைச் செயலகத்திற்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் மட்டக்குழு
பொதுநலவாய நாடுகளின் அமைச்சர் மட்ட நடவடிக்கைக்குழுவில் கனடா, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், ஜமெய்க்கா, சியராலியோன், தான்சானியா, ட்ரினிடாட் அன்ட் டுபாக்கோ, வனூட்டு, மாலைதீவு ஆகிய நாடுகள் அங்கம்வகிக்கின்றன.
பொதுநலவாய அமைப்பின் சட்டதிட்டங்களுக்கு முரணாக செயற்படும் நாடுகளை அமைப்பின் அங்கத்துவத்திலிருந்து நீக்குவதற்கு மேற்படி அமைச்சர் மட்ட நடவடிக்கைக் குழுவுக்கு அதிகாரம் உண்டு.
1995ஆம் ஆண்டு நியூஸிலாந்து ஒக்லண்ட் நகரில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் மேற்படி அமைச்சர் மட்ட நடவடிக்கைக்குழு உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten