தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 23 januari 2013

தமிழர்களின் மீது மிகப்பெரிய உளவியல் யுத்தத்தை நடத்தும் ராஜபக்‌ச!


[ நக்கீரன் ]
பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில் தங்கிச் செல்லுங்கள். வாடகை ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய்’ இதுதான் இன்று ராஜபக்‌ச சிங்கள மக்களுக்கும் உலக சமூகத்திற்கும் விடுக்கும் சமாதானச் செய்தி.
இலங்கையில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் படுகொலைக்கு ஆளான வடக்கு கிழக்கு பகுதி இன்று முக்கியமான சுற்றுலாத் தலமாகி வருகிறது. ஒரு காலத்தில் அற்புதமான இயற்கை வளத்தினால் பயணிகளை ஈர்த்த இலங்கை இன்று தனது போர்வெறியின் குரூரத்தையும் வன்மத்தையும் பெருமிதத்துடன் உலகிற்கு காட்டி அழைக்கிறது.
உலகின் குரூரமான யுத்த அருங்காட்சியகத்தை இலங்கை நிறுவியிருக்கிறது. இறுதி யுத்தம் நடந்த வடகிழக்கு பகுதியில் பிரமாண்டமான யுத்த வெற்றியின் நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டிருக்கிறது. துப்பாக்கி ஏந்திய சிங்கள வீரனின் உருவம் எக்காளமிட்டு சிரிக்கிறது. அருகிலேயே யுத்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டுள்ளது. இறுதிப் போரில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள், பீரங்கிகள், படகுகள் என தாங்கள் வென்ற யுத்தத்தின் தடயங்களை இராணுவ வீரர்கள் டூரிஸ்ட் கைடுகளாக மாறி பயணிகளுக்கு விளக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆம், தமிழர்கள் பேரளவில் கொன்றொழிக்கப்பட்ட யுத்தத்தின் இறுதி தினங்களில் உலகம் அதை எப்படி வேடிக்கை பார்த்ததோ அப்படித்தான் இன்றும் அந்த மாபெரும் வரலாற்று அவலம் காட்சிப் பொருளாகவும் கேளிக்கைப் பொருளாகவும் மாறிக்கொண்டிருக்கிறது.
பிரபாகரனின் வீடு, பதுங்கு குழிகள், கடற்புலிகள் பயற்சிக்குப் பயன்படுத்திய நீச்சல் குளம் என வேடிக்கை பார்க்கவும் தங்கள் வெற்றிகளைக் கொண்டாடவும் சிங்களவர்கள் ஆயிரக்கணக்கில் ஒவ்வொரு நாளும் அங்கே வருகை தருகின்றனர். இராணுவம் அவர்களுக்கு பியர் விற்பனை செய்கிறது.  தமிழர்களின் குருதி கலந்த அந்த பியர் அவர்கள் இதுவரை அருந்திய மது வகைகளிலேயே அவ்வளவு போதை மிகுந்ததாக இருக்கிறது. அவர்கள் பதுங்கு குழிகளுக்குள் சென்று அதன் சுவர்களில் தங்கள் பெயர்களை எழுதுகிறார்கள். அந்தப் பிரதேசம் முழுக்க பிணங்களைத் தேடும் கழுகுகளைப் போல, அமைதியற்று பறக்கும் வௌவால்களைப் போல மக்கள் கூட்டம் அங்கே அலைமோதிக்கொண்டிருக்கிறது.
பொதுவாக யுத்த களங்களையும் கொடுமைகள் நடந்த இடங்களையும் பார்க்கும் பழக்கம் நீண்ட காலமாக மக்களிடம் இருந்து வருவதுதான். அதற்குள் ஒளிந்திருந்து பார்க்கும் ஒரு ஆழமான உளவியல் இருக்கிறது. ஆனால் வட கிழக்குப் பகுதியில் அந்த ஆர்வத்தைத் தாண்டி இன வெறியின் மூர்க்கமும் வென்றவர்கள் தோற்றவர்களை எட்டி உதைக்கும் வன்மமும் நிரம்பியிருக்கிறது.
ராஜபக்‌சவின் இந்த அதிகார பூர்வமான யுத்த அருங்காட்சியகத்தைத் தாண்டி வேறொரு அருங்காட்சியகமும் அங்கே இருக்கிறது. அங்கு செல்லும் பத்திரிகையாளர்களும் மனித உரிமையாளர்களும் அந்தக் காட்சிகளை பதிவு செய்கின்றனர்.
சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மண்டையோடுகளும் எலும்புக் கூடுகளும் பூமிக்குள்ளிருந்து வெளியே வந்து எட்டிப் பார்க்கத் தொடங்கியுள்ளன. இறுதி யுத்தத்தில் கொன்று புதைக்கப்பட்ட, கூட்டம் கூட்டமாக எரிக்கப்பட்ட பல்லாயிரம் தமிழர்களின் எலும்புக்கூடுகள் அவை. இன்னும் குழந்தைகளின் உடைந்த பொம்மைகள் சிதறிக் கிடக்கின்றன. புதர்களில் திறந்து கிடக்கும் சூட்கேஸ்கள், உடைந்த பாத்திரங்கள், கிழிந்த ஆடைகள், சிதைந்த வாகனங்கள், கைவிடப்பட்ட வீடுகள் என ராஜபக்‌சவின் அருங்காட்சியகத்தில் பார்க்க என்னதான் இல்லை?
இறுதி யுத்தம் முடிந்த பிறகு பத்திரிகையாளர்களோ மனித உரிமை அமைப்புகளோ வெகுகாலம் இலங்கை அரசினால் யுத்தப் பகுதிக்குள்  பல மாதங்கள் அனுமதிக்கப்படவே இல்லை. காரணம் ராஜபக்‌சவுக்கு போர்க்குற்றங்களை மறைக்க அவகாசம் தேவைப்பட்டது. பல்லாயிரம் உடல்களை மறைப்பது அவ்வளவு எளிதா என்ன? உலகம் அதைப்பற்றி கவலைப்படவில்லை. ஐக்கிய நாடுகள் அவையும் உலக நாடுகளும் ராஜபக்‌ச இலங்கையின் மீது ஒரு பெரிய படுதாவைப் போர்த்திவிட்டு  தனது இரத்தக் கறைகளை கழுவி முடிக்கும் வரை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தன. இப்போது ராஜபக்‌ச எந்த பதட்டமும் இன்றி பயமும் இன்றி தனது யுத்த அருங்காட்சியகத்தை திறந்துவிட்டிருக்கிறார்.
இந்த அருங்காட்சியகத்தில் இராணுவவீரர்கள் பிரபாகரனின் வீட்டுக்குப் போகும் பாதை எது என்பதை மக்களுக்கு காட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இன்னும் விளக்கமளிக்காத பல கேள்விகள் எஞ்சியிருக்கின்றன. இறுதி யுத்தத்தில் காணாமல் போன பல்லாயிரக்கணக்கானோர் என்னவாயினர்? அவர்கள் எப்போதாவது இந்த அருங்காட்சியகத்திற்கு திரும்பி வந்து தங்கள் பெயர்களை கூறுவார்களா? தங்களைத் தாங்களே காட்சிப் பொருளாக்கிக்கொள்வார்களா?
புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் அருங்காட்சியகத்தில் இருக்கின்றன. ஆனால் சிங்கள இராணுவம் பயன்படுத்திய இரசாயன குண்டுகள் எங்கே? பொது மக்கள் மேல் செலுத்தப்பட்ட விஷ வாயுக் கலன்கள் எங்கே? உலகத்தின் அனைத்து யுத்த நெறிமுறைகளுக்கும் மாறாக ஆயிரக் கணக்கானோர் விஷ வாயு செலுத்தப்பட்டு மூச்சுத் திணறி இறந்தார்களே அவர்களில் யாராவது ஒருவர் தப்பிப் பிழைத்திருந்தால் அவரை அழைத்து வந்து அந்த விஷ வாயு அனுபவம் எப்படி இருந்தது என்று சொல்ல வைக்கலாமே?
சுற்றுலாப் பயணிகளுக்கு மது விற்பனை செய்தபடி கைடுகளாக பணிபுரியும் இராணுவ வீரர்கள் மக்களிடம் சொல்வதற்கு ஆயிரக்கணக்கான கதைகளை வைத்திருக்கிறார்கள். அவர்கள் எப்படி பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்தார்கள், வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தவர்களை எப்படி படுகொலைக்கு ஆளாக்கினார்கள், மருத்துவமனைகளில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மக்களை எப்படி குண்டு வீசி அழித்தார்கள், நிவாரண முகாம்களிலும் கோயில்களிலும் தேவாலயங்களிலும் புகலிடம் தேடிய மக்களைக்கூட எப்படி கொன்றொழித்தார்கள் என்பதையெல்லாம் அவர்கள் தங்கள் வீரக் கதையோடு சேர்த்துச் சொல்ல வேண்டும்.
என்றாவது ஒரு நாள் அவர்கள் உலகத்திடம் இந்த கோழைத்தனமான யுத்தத்தில் பொதுமக்கள் மேல் தாங்கள் நடத்திய கோர யுத்தத்தின் கதையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஹிட்லரின் நாஜிப் படையினர் எப்படி ஒப்புக்கொண்டார்களோ அதுபோல.
தமிழர்களின் மீதான இந்த கொடூரமான போர்க்குற்றங்களை கேளிக்கையுடன் கொண்டாடுவது யுத்த காலத்திலேயே தொடங்கிவிட்டது. தமிழர்களை நிர்வாணமாக்கி கைகளை கட்டி உட்கார வைத்து பின் தலையில் சுட்டுக்கொல்லும் காட்சிகளை சிங்கள இராணுவத்தினர் தங்கள் செல்போன் கமராக்களில் படம் பிடித்துக்கொண்டனர். பின்னர் அவை சுற்றுக்கு விடப்பட்டன. சனல் 4 வீடியோக்களில் பெரும் சாட்சியமாக திகழ்ந்தவை இந்த வீடியோக்கள்தான். இந்த இனப்படுகொலையின் காட்சிகளின் மீதும் சாட்சியங்களின் மீதும் சிங்கள அதிகார வர்க்கம் மட்டுமல்ல, சிங்கள இராணுவம் மட்டுமல்ல, சிங்கள பொதுமக்களும் தொடர்ந்து திளைக்க விரும்புகிறார்கள், அதற்காகத்தான் இந்த போர்ச் சின்னங்கள், இந்த யுத்த அருங்காட்சியகங்கள்.
உலகில் யுத்த வரலாற்றில் வென்ற நாடுகள் தோற்ற நாடுகளின்மீது தங்கள்  வெற்றியின் சின்னங்களை நிலை நாட்டுவது வழக்கம். ராஜபக்‌ச இதன் மூலமாக இது உள்நாட்டுப் பிரச்சினையல்ல, தமிழர்களின் தேசத்தின் மீது நடத்திய யுத்தம் என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
ராஜபக்‌சவைப் பொறுத்தவரை யுத்தம் இன்னும் முடிவடையவில்லை. தமிழர் பிரதேசங்களில் பெருமளவு சிங்கள குடியேற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இராணுவ வீரர்கள் நிரந்தரமாக குடியமர்த்தப்பட்டு ஏராளமான இராணுவ கண்டோண்ட்மெண்ட்கள் உருவாக்கப்படுகின்றன. தமிழர்கள் தங்கள் பூர்வீக இடங்களுக்கு திரும்பவோ அவர்களின் மறுவாழ்விற்கோ உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
தமிழ் இளைஞர்கள் தொடர்ந்து காணாமல் போய்க்கொண்டிருக்கின்றனர். நோய்மையும் வறுமையும் மன அழுத்தமும் தமிழர்களின் வாழ்வில் பேரிருளாக சூழ்ந்துகொண்டிருக்கிறது. இளம்பெண்கள் உயிர் வாழ பாலியல் தொழிலை நோக்கி துரத்தப்படுகின்றனர். எல்லா வீடுகளும் அங்கே மரண வீடுகளாக மாறிவிட்டன. யுத்தகால கொடுமைகளின் காயங்கள் ஆற்றப்பட எதுவுமே செய்யப்படவில்லை.
மாறாக இந்தக் காயங்களை இன்னும் ஆழப்படுத்தவும் அவர்களது துயர நினைவு களை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தவும் ராஜபக்‌ச இந்த யுத்த சுற்றுலாவை உருவாக்கி வருகிறார். இது காட்டுமிராண்டித் தனமானது. ஒரு நாகரிக சமுதாயத்தில் இதைக் கற்பனை செய்வது கடினம். ஒரு சிவில் சமூகத்தின்மீது ராஜபக்‌ச நடத்திய போர்க்குற்றங்கள் இன்று சர்வதேச சமூகத்தின் முன் நியாயம் கோரி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால்  ராஜபக்‌ச இந்தக் குற்றங்களை எல்லாம் இன்று சிங்கள சமூகத்தின் தேசிய பெருமிதமாக மாற்றிக் கொண்டிருக்கிறார். ஒரு இனத்தின் மீது நடத்திய பச்சை இரத்தப் படுகொலைகளை காட்சிப் பொருளாக்கிக் கொண்டிருக்கிறார். இதன் மூலமாக ராஜபக்‌ச, தமிழர்களின் மீது மிகப்பெரிய உளவியல் யுத்தத்தை நடத்தி வருகிறார்.
தமிழர்கள் தங்கள் தோல்வியையும் அழிவையும் ஒவ்வொரு நாளும் உணர்ந்து மனமுடைந்து போக வேண்டும் என்பதுதான் அவரது  நோக்கம். அதே நேரம், தான் பொதுமக்கள் மேல் நடத்திய இந்த கோழைத்தனமான யுத்தத்தை ஒரு வீரப் பெருமிதமாக காட்டுவதற்கு அவருக்கு இந்த மரண மியூசியம் தேவைப்படுகிறது.
கடல் புலிகளின் தலைவர் சூசை இருந்த வீட்டின் முகப்பில் சிங்கள ராணுவம் ஒரு வாசகத்தை எழுதி வைத்திருக்கிறது. "நமது எதிரிகளே நமது சிறந்த ஆசிரியர்கள்.'’ உண்மையும் அதுதான். தமிழர்கள் தங்கள் எதிரிகள் எவ்வளவு குரூரமானவர்கள் என்பதைக் கற்றுக் கொள்ளும் காலம் இது. ராஜபக்‌சவின் இந்த யுத்த சுற்றுலா என்பது விரைவில் உலகில் போர்க்குற்றங்களுக்கு எதிரான விசாரணையை நோக்கிய பயணமாக மாறும். அவரது யுத்த  மியூசியம் என்பது விரைவில் இந்த உலகிற்கு -மனித குலத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட மாபெரும் கொடுமையின் சாட்சியங்களாக மாறும்.
நன்றி
மனுஷ்யபுத்திரன்
நக்கீரன் நாளிதழ்

http://news.lankasri.com/show-RUmryBRXNWir1.html

Geen opmerkingen:

Een reactie posten