தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 11 januari 2013

தமது பிள்ளைகளைக் கண்டுபிடித்து தருமாறு பெற்றோர் கத்தோலிக்க ஆயர் குழுவிடம் வேண்டுகோள்!!


வன்னியில் இறுதிப்போரின் போது காணாமல்போன எமது பிள்ளைகள் எங்கு இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து எமக்குத் தெரியப்படுத்துங்கள் என நேற்று வன்னிக்கு பயணம் மேற்கொண்ட இலங்கை கத்தோலிக்க ஆயர் குழுவிடம் கண்ணீர் மல்கியவாறு உருக்கமாக வேண்டுகோள் விடுத்தனர் முல்லைத்தீவுப் பகுதி பெற்றோர்.

ஆயர்களை சூழ்ந்துகொண்ட அவர்கள் கதறி அழுதவாறு கைகளை ஏந்திவிடுத்த இந்தக் கோரிக்கை அங்கு சென்றிருந்த ஆயர்களின் மனங்களையும் நெகிழவைத்தது. 

வன்னி மக்களின் நிலைமைகளை நேரில் அறிந்து கொள்வதற்காக இலங்கை ஆயர் மன்றத்தின் தலைவர் கருதினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான 10 ஆயர்களைக் கொண்ட குழு அங்கு பயணத்தை மேற்கொண்டுள்ளது. 

இந்தக் குழுவினர் நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை உள்ளிட்ட பகுதிகளில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர். ஒவ்வொரு ஆயர்களும் தனித்தனியாக மக்களின் குடிசைகளுக்குச் சென்று அங்கு அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரில் ஆராய்ந்து அவதானித்தனர். 

அதன்போதே அங்கு கூடிய பெற்றோர் ஆயர்களிடம் மேற்கண்ட கோரிக்கையை விடுத்தனர். 'இறுதிப் போரின் போது எமது பிள்ளைகள் பலர் காணாமற்போயுள்ளனர். பலர் படையினரிடம் சரணடைந்தனர். ஆயினும் எமது பிள்ளைகள் எங்கே இருக்கிறார்கள்? அவர்களுக்கு என்ன நடந்தது? என்பவை தொடர்பில் எதுவும் எங்களுக்குத் தெரியாது. அவர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் நாங்கள் கடந்த மூன்று வருடங்களாக காத்திருந்து களைத்துப்போய் விட்டோம். எங்கள் பிள்ளைகள் தொடர்பான விவரங்களை அரசிடம் தொடர்புகொண்டு அறிந்து சொல்லுங்கள்' எனக் கண்ணீர் மல்கியவாறு பெற்றோர்கள் ஆயர்களிடம் உருக்கமான கோரிக்கை விடுத்தனர். 'அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் நாங்கள் அல்லற்படுகின்றோம். 

சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள போதும் எமக்கு எந்தவித உதவிகளையும் அரசு வழங்கவில்லை. மழை, வெயில் ஆகியவற்றுக்கு மத்தியில் ஓட்டைக் குடிசைகளுக்குள்ளேயே எங்கள் வாழ்வு நகர்கிறது. பிள்ளைகள் கல்வியை தொடர்வதற்கு போதிய வசதிகள் எதுவும் இல்லை. 

வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு எந்தவித உதவிகளும் எமக்கு கிடைக்கவில்லை. இதனால் அன்றாட வாழ்வை ஓட்டுவதற்கு பெரும் சிரமப்படுகிறோம். எங்களது நிலைமைகளை இப்போது நீங்களும் நேரில் கண்டிருக்கிறீர்கள். இதனை அரசுக்குத் தெரியப்படுத்துங்கள்.' என்றும் புதுக்குடியிருப்பு மக்கள் தமது மனக் குமுறல்களை ஆயர் குழுவிடம் கொட்டித் தீர்த்தனர். 

இந்த மக்களின் கோரிக்கைகள் குறித்து கருத்து வெளியிட்ட மட்டக்களப்பு ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை எல்லா மக்களும் மோசகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் புதிய வாழ்வை ஆரம்பிக்க வேண்டும். நேரில் வந்து அவர்களுடைய நிலைமையை பார்த்துள்ளோம். இந்த மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்து அரசுடன் பேசி உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்

பாடசாலைகள், தேவாலயங்கள், குடியிருப்புகள் என அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. அவை புனரமைக்கப்படாத நிலையிலேயே உள்ளன. இது குறித்தும் நாங்கள் அரசுடன் பேசுவோம் என்றார்.


Geen opmerkingen:

Een reactie posten