போர் முடிவுக்கு வந்து விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. உண்மையில், போர் இன்னமும் முடிந்து விடவில்லை என்றே நாம் கருதுகிறோம். இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களப் பிரதிநிதிகள் குழுவினர் தெரிவித்துள்ளனா.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் மட்டக்குழு, யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள இறுக்கமான நிலைமை மற்றும், காணாமற் போனோர் தொடர்பாக இலங்கை இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை என்பன குறித்து அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
நேற்று முன்தினமும், நேற்றும் தமிழர் தரப்பு அரசியல் மற்றும் மத, சமூகப் பிரதிநிதிகளுடனான சந்திப்புகளின் போது, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர்கள் ஜேம்ஸ் மூர், விக்ரம்சிங், ஜேன் சிம்மர்சன் ஆகியோர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளனர்.
நேற்று யாழ்ப்பாணத்தில், யாழ். ஆயரைச் சந்தித்த அமெரிக்க குழுவினர், அங்கு இறுக்கமான நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை வந்த அமெரிக்கக் குழு அவதானித்ததை விடவும் தற்போது நிலைமை இறுக்கமடைந்துள்ளது.
முன்னரை விட மக்கள் மீதான இலங்கை அரசின் நெருக்கடிகளும், கெடுபிடிகளும், அதிகரித்துள்ளன. இதனையே நாம் வெளிப்படையாக அவதானிக்க முடிந்தது.
காணாமல் போனோர் தொடர்பான தகவல்கள் எமக்கு இன்னமும் வந்து கொண்டிருக்கின்றன. இந்த விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் அக்கறை எடுத்திருந்தால் இத்தகைய முறைப்பாடுகள் தொடர்வதைத் தடுத்திருக்க முடியும்.
போர் முடிவுக்கு வந்து விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்து மூன்று ஆண்டுளாகி விட்டன. உண்மையில் இங்கு போர் இன்னமும் முடிந்து விடவில்லை என்றே நாம் கருதுகிறோம்.
இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் இன்னமும் களையப்படவில்லை. இன முரண்பாடுகள் முன்னரை விட கூர்மையடைந்துள்ளன என்றே கருத வேண்டியுள்ளது.” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten