பலத்த எதிர்ப்புகள் இருந்தாலும் அரசாங்கம் தான் நினைத்தது போன்றே திவிநெகும சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிவிட்டது. கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் திவிநெகும சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது மூன்றில் இரண்டுக்கும் அதிகமான உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது.
இந்தளவுக்கும் இந்தச் சட்டம் மாகாண சபைகளிடம் இருந்த நிதி சார்ந்த அதிகாரங்கள் பலவற்றை பறித்துக்கொள்ளும் வகையில் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்தபோதிலும் சிறுபான்மையின மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் பெரும்பாலும் அதை எதிர்க்கவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐதேக, ஜேவிபி போன்றவையே இந்தச் சட்டமூலத்தை எதிர்த்தன.
107 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்துக்கு மலையக மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் இதொகாவும் சரி, முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் போன்றனவும் சரி தமிழ்மக்களின் வாக்குகளில் நாடாளுமன்றம் சென்ற ஈபிடிபியும் சரி எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
இந்தச் சட்டமூலத்தினால் மாகாணசபைகளின் அதிகாரங்கள் பறிக்கப்படவுள்ளதை இந்தக் கட்சிகள் அறியாமலிருக்க முடியாது.
ஆனால் இந்தக் கட்சிகளைப் பொறுத்தவரையில் மாகாணசபைகளின் அதிகாரங்கள் பறிக்கப்படுவது குறித்து கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
அரசாங்கத்தில் அங்கம் வகித்துவரும் தமது அதிகாரங்கள் (பதவி) பறிபோய் விடக்கூடாது என்பதிலேயே அவை கவனம் செலுத்தியுள்ளன.
திவிநெகும சட்டமூலத்துக்கு மாகாணசபைகளின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த போது அதைத் தடுத்திருக்கக்கூடிய அதிகாரம் கிழக்கு மாகாண சபையிடம் மட்டுமே இருந்தது.
வடக்கு மாகாணசபை செயற்படாத நிலையில் கிழக்கு மாகாணசபை திவிநெகும சட்டமூலத்தை திருப்பி அனுப்பியிருந்தால் அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்க முடியாது.
ஆனால் கிழக்கு மாகாணசபையில் அதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளித்தது.
அப்போது கிழக்கு மாகாணசபையில் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக தலைமைப்பீடம் அறிவித்தது.
பின்னர் திவிநெகும சட்டமூலத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் இணங்கிவிட்டதாகக் கூறி நாடாளுமன்றத்தில் அந்தச் சட்டத்தை நிறைவேற்ற முஸ்லிம் காங்கிரஸின் அதே தலைவர்களே வாக்களித்தனர்.
ஆனால் ஈபிடிபி திவிநெகும சட்டமூலத்துக்கு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காமலேயே ஆதரவாக வாக்களித்தது.
இந்தத் திவிநெகும சட்டத்தின் மூலம் மாகாணசபைகளைப் பலவீனப்படுத்தும் முதற்கட்டம் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் முக்கியமான குறிக்கோள்களில் ஒன்று மாகாணசபைகளை இல்லாமல் ஒழிப்பது, அதை ஒரேயடியாகச் செய்வதற்கு அரசாங்கத்துக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல தடைகள் இருக்கின்றன.
அந்தத் தடைகளை வெற்றிகரமாகத் தாண்டுவதற்கான முதற்பாய்ச்சலாகவே திவிநெகுமவை குறிப்பிடலாம். 1987ம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட இந்திய இலங்கை உடன்பாட்டுக்கு அமைய அரசியலமைப்பில் செய்துகொள்ளப்பட்ட 13வது திருத்தத்தின்படி உருவாக்கப்பட்ட மாகாணசபைகள் அடிப்படையில் பலவீனமானவை.
அதிக அதிகாரங்கள் ஏதும் இல்லாத மாகாணசபைகளுக்கு மேலும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்ற போதிலும் அதை அரசாங்கம் கருத்தில் கொள்ளவே இல்லை.
அதுமடடுமன்றி 13வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாகிய போதிலும் மாகாணசபைகளிடம் கொடுக்கப்பட்டிருக்க பொலிஸ், காணி அதிகாரங்களை மத்திய அரசாங்கம் வழங்கவேயில்லை.
விடுதலைப்புலிகள் இருந்தவரைக்கும் மாகாணசபைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொலிஸ், காணி அதிகாரங்கள் குறித்து தெற்கில் யாரும் பிரச்சினை எழுப்பவில்லை. ஏனென்றால் புலிகள் மாகாணசபையை நிராகரித்துவிட்ட நிலையில் அதன் அடிப்படையிலான தீர்வு ஒன்றுக்கு அவர்கள் வரப்போவதில்லை என்பதை தெற்கு அரசியல் தலைமைகள் தெரிந்திருந்தன.
வடகிழக்குத் தவிர்ந்த ஏனைய மாகாணசபைகளிடம் அந்த அதிகாரங்கள் பகிரப்படுவதை தெற்கு அரசியல் தலைமைகள்' வெறுக்கவில்லை.
ஆனால் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதுமே மாகாணசபைகள் தான் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு அடிப்படையாக அமையப் போகிறது என்பது தெற்கு அரசியல் தலைமைகளுக்குப் புரிந்துவிட்டது.
அதனால்தான் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் மாகாணசபைகளின் அதிகாரங்களை பறிப்பதற்கு வலியுறுத்த ஆரம்பித்தனர்.
காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு விட்டுக் கொடுக்க முடியாது என்ற கருத்தை விமல் வீரவன்சவோ, சம்பிக்க ரணவக்கவோ மட்டும் வலியுறுத்தவில்லை.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அதே நிலைப்பாட்டில் தான் உள்ளார்.
இந்திய ஊடகங்களுக்கு அளித்த சில பேட்டிகளில் அவர் அதை வெளிப்படையாக கூறியும் இருந்தார்.
அதுமட்டுமன்றி ஆரம்பத்தில் வெறும் காணி பொலிஸ் அதிகாரங்களை மாகாணசபைகளிடம் இருந்து பறிக்க வேண்டும் என்று மட்டும் தெற்கில் இருந்து எழுந்த குரல்கள், இப்போது மாகாணசபைகளையே இல்லாதொழிக்க வேண்டும் என்று மாற்றம் பெற்றுள்ளது.
மாகாணசபைகளை உருவாக்கிய 13வது திருத்தத்தையே ஒழித்துவிட வேண்டும் என்று அமைச்சர்கள் பலரும் கூறி வருகின்றனர்.
ஆனால் அதைச் செய்வதற்கு அரசாங்கத்துக்கு உடனடிச் சாத்தியம் இல்லை.
மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் நாடாளுமன்றத்தில் இருந்தாலும் இந்தியாவை மீறி அதைச் செய்ய முடியாது. இந்தியாவைச் சமாளிப்பதற்கான மாற்று உத்தியாகவே தெரிவுக்குழுவைப் பயன்படுத்த அரசாங்கம் முனைந்தது.
தெரிவுக்குழுவில் தமக்குள்ள பெரும்பான்மை பலத்தை வைத்து மாகாணசபைகளை இல்லாதொழிக்க முயன்ற அரசாங்கத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதில் பங்கேற்க மறுத்து விட்டதால் தோல்வியே மிஞ்சியது.
இதனால்தான் அடுத்த கட்டமாக இருக்கின்ற கொஞ்ச அதிகாரங்களையும் சிறிது சிறிதாக அரித்துத் தின்னத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக திவிநெகும சட்டம் வந்துள்ளது.
அடுத்ததாக காணி, பொலிஸ் அதிகாரங்களையும் பிற அதிகாரங்களையும் பறிக்கின்ற சட்டங்களை நிறைவேற்ற முனையலாம்.
திவிநெகும சட்டமூலம் சர்ச்சையைக் கிளப்பிய போது இந்தியா அதைப்பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை.
மாகாண சபைகளின் அதிகாரங்களைப் பறிக்கும் முயற்சி என்று இந்தியப் பிரதமர் மற்றும் இராஜதந்திரிகளுடனான சந்திப்புகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டிய போதும் இந்தியா அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இந்தியா இதைப் பாரதூரமான விவகாரமாகக் கருதி இராஜதந்திர ரீதியாக அணுகியிருந்தால் திவிநெகுமவை அரசாங்கம் நிறைவேற்றியிருக்காது.
இந்தியாவின் மௌனம் அரசாங்கத்துக்குப் புதிய தெம்பைக் கொடுத்திருக்கும்.
13வது திருத்தத்தை ஒரேயடியாக ஒழித்துக் கட்டாமல் மாகாணசபைகளின் அதிகாரங்களை மெல்ல மெல்ல அரித்துத் தின்று அதை வெறும் ஊளுத்துப் போன மரமாக்க திவிநெகும சட்டமூலம் உந்துசக்தியாக அமைந்துள்ளது.
அந்த உளுத்துப்போன நிர்வாகக் கட்டமைப்பையே எதிர்காலத்தில் தமிழர் பிரச்சினைக்கான தீர்வாக அரசாங்கம் முன்வைத்தால் ஆச்சரியப்பட முடியாது.
ஹரிகரன்
Geen opmerkingen:
Een reactie posten