புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளின் பொருளாதார சமூக மற்றும் நலன்புரி தொடர்பான விடயங்களை கண்காணிக்கும் இணைப்பு காரியாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
அதன்படி யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு யாழ். மாவட்டத்திற்கான இந்த புதிய அலுவலகம் திறந்து யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
எனவே குறித்த அலுவலகமானது இன்று முதல் சேவையில் ஈடுபடவுள்ளதாக அதன் இணைப்பாளர் மேஜர் ஏ.சி. ஜெகத்குமார தெரிவித்தார்.
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தினை அடுத்து கைது செய்யப்பட்ட சரணடைந்த முன்னாள் பேராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
அவ்வாறான இளைஞர் யுவதிகளின் எதிர்கால நலனைக் கருத்திற் கொண்டு இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் யாழ்.மாவட்ட அரச அதிபர் கருத்து தெரிவிக்கையில்,
புனர்வாழ்வு ஆணையாளர் தர்ஷன ஹெட்டியாராட்சியின் ஆலோசனையின் கீழ் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவின் வழிகாட்டலில் இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டு யாழ். மாவட்டத்திற்கான அலுவலகம் இன்று திறக்கப்பட்டுள்ளது.
அதன்படி யாழ். மாவட்டத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்ய்பபட்ட முன்னாள் போராளிகள் 3000 பேருக்கு மேற்பட்டவர்கள் உள்ளனர்.
இவர்களுக்கு வேண்டிய பொருளாதார சமூக மற்றும் நலன்புரி தொடர்பான விடயங்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட்டு அவர்களின் நலன்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு வாழ்வாதாரத்தினை முன்னேற்றும் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றது.
அதற்கமைய 4 வீத வட்டியுடன் இலகு கடன் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி முதல் மாதம் வட்டியினை மட்டுமே செலுத்த வேண்டும். அவ்வாறு ஒரு நபருக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கடனாக வழங்கப்படும்.
முச்சக்கர வண்டிகள் மற்றும் சிறுதொழில் முயற்சியினை மேற்கொள்வதற்கும் அவர்களுக்கு கடனுதவிகள் வழங்கி அவர்களை சமூகத்தில் உயர்ந்தவர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விடுதலையான இவர்களுக்கு எந்தவகையிலாவது பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் அதனை குறித்த அலுவலகத்தில் உள்ள அதிகாரியிடம் தெரிவிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த இணைப்பு நிலையங்கள் கொழும்பு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி,முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://news.lankasri.com/show-RUmryBRXNWir5.html
Geen opmerkingen:
Een reactie posten