தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 3 januari 2013

"தமிழக மக்களை நம்புகிறோம்...!" பிரபாகரன் என்னதான் ஆனார்? - ஈழத்திலிருந்து ஒரு குரல் !!


 [ விகடன் ]
கடந்த 13 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பல்வேறு சமர்களில் பங்கெடுத்தவர். ஈழத்தில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரை அத்தனை அவலங்களையும் கண்கூடாக அனுபவித்தவர்.
தற்போது தலைமறைவில் இருப்பவர், 'சாணக்கியன்’ என்ற புனைபெயரில் 'முள்ளிவாய்க்காலில் இருந்து... ஓர் அவலக் குரல்’ என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டு இருக்கிறார்.
இன்றைய இலங்கையை... இலங்கை அரசின் ஈன அரசியலை... இலங்கையை மையப்படுத்தி ஈழத் தமிழரின் ரத்தம் குடிக்கப் போட்டியிடும் உலக அரசியலைக் கண் முன் காட்சிகளாக விரியச் செய்கின்றன இவரது எழுத்துகள். ஈழத் தமிழர்களுக்காக உயிர் வாழ வேண்டி இருப்பதால், அவரது அடையாளம் தவிர்க்கும்படி அவர் விடுத்த வேண்டுகோளை ஏற்று அவரைச் சந்தித்தேன்.
இந்தப் புத்தகத்தின் நோக்கம் என்ன?
யுத்தம் நிறைவடைந்த பின் ஈழத்தில் மக்களின் உண்மை நிலை என்ன என்பதை எடுத்துரைப்பதே நோக்கம்.
மக்களின் மீள்வாழ்வுக்கு தமிழக மக்களும் புலம் பெயர் மக்களும் பக்கபலமாக இருக்க வேண்டும்.
போர் நடைபெற்ற நிலத்தில் வாழ்கின்ற மக்கள் ஜீவன் அபாய நிலையில் இருக்கிறார்கள்.
இதனை உணர்ந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் மனிதநேயப் பணிகளை தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்பதே நோக்கம்!
இன்றைக்கு ஈழத்தின் நிலை... உண்மையான உச்சகட்டப் பிரச்சினைகள் என்ன?
முதல் பிரச்சினை, பெண்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டு உள்ளது. போர் விட்டுச் சென்ற இழிவுப் பொருட்கள்... விதவைகள். பெண்களின் பாதுகாப்பு, ஒழுக்கவியல் கட்டமைப்பு சிதைபட்டுவிட்டது.
ஆங்கிலத்தில் 'ஹாப் விடோஸ்’ என்றொரு அவலச் சொல் உண்டு. ஒரு பெண்ணுக்குத் தன் கணவன் உயிரோடு இருக்கிறானா... இல்லையா என்பதே தெரியாத நிலை அது. பிள்ளையின் பாலுக்காக... குடும்பத்தின் ஒருவேளை உணவுக்காகப் பெண்கள் படும்பாடு சொல்லி மாளாதது!
கணவனின் மரணச் சான்றிதழைச் சமர்ப்பித்தால், இலங்கை அரசு 50 ஆயிரம் இழப்பீடு வழங்குகிறது. கணவன் கொலை செய்யப்பட்டானா இல்லையா என்றுகூடத் தெரியாமல்... தெரிந்தாலும்கூட நம்ப இயலாமல் மருகும் எங்கள் பெண்கள் பலர், கொடிய வறுமையிலும் அந்தப் பணம் வேண்டாம் என்று சொல்லி மரணச் சான்றிதழைப் பெற மறுக்கிறார்கள்.
மறுபுறம் யாழ் மாவட்டத்தில் 2011-ம் ஆண்டு ஜனவரி தொடங்கி மே மாதம் வரை ஐந்து மாதங்களில் மட்டும் 211 இளம் வயதுப் பெண்கள் முறை தவறி கர்ப்பமாகி இருக்கிறார்கள்.
இவர்களில் 90 சதவிகிதம் பேர் பாடசாலை செல்லும் மாணவியர். இதே காலகட்டத்தில் திருமணம் ஆகாத இளம் பெண்கள் 69 பேர் கர்ப்பம் தரித்துள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் ஒப்பிடுகையில் இது 61 சதவிகிதம் அதிகம். யாழ்ப்பாணத்தில் விடுதிகள், மினி சினிமாக்களின் எண்ணிக்கை அபரிமிதமாக அதிகரித்துள்ளது.
பாடசாலை மாணவர்கள் பலர் போதைக்கு அடிமையாக்கப்படுகிறார்கள். இவையெல்லாம் எங்கள் மக்கள் யாரும் விரும்பி ஏற்றது அல்ல; திட்டமிட்டுத் திணிக்கப்பட்டவை.
எங்கள் தலைமுறையின் வாழ்வியலோடு கட்டிக்காத்த பண்பாட்டு விழுமியங்களை இளைய தலைமுறையினரிடையே சிதைத்து வருகிறது சிங்கள அரசாங்கம்!
முன்னாள் போராளிகளின் நிலைமை என்ன?
நாங்கள் செத்துக்கொண்டு இருக்கிறோம். லட்சக்கணக்கான பேர் அங்கங்களை இழந்து நிரந்தர மாற்றுத்திறனாளிகள் ஆகிவிட்டார்கள்.
குப்பியை ஏந்திய பெண் போராளிகளை இன்று அவர்களின் சொந்தக் குடும்பமே ஏற்றுக்கொள்ள மறுக்கிறது அல்லது அவள் நிமித்தம் இராணுவம் குடும்பத்தையும் கூறுபோட்டு விடுமோ என்று அஞ்சுகிறது.
எங்கள் மக்களின் உடனடித் தேவை, அடுத்த வேளை உணவு. எங்கள் மக்களை... பசியின் பார்வையில்... உயிர் பிழைத்திருத்தலின் பார்வையில் நோக்குங்கள். குழந்தைகளின் அழுகுரல்களை உணருங்கள். மாயை, மயக்கப் பேச்சுகளை விட்டொழித்து, எங்கள் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் உதவிக்கரம் நீட்டுங்கள்.
இன்று நம் பெண்கள் உட்பட 5,000 தமிழர்கள் இலங்கை இராணுவத்தில் சேர்ந்திருக்கிறார்கள். இதற்கு முழுப்பொறுப்பை ஏற்கவேண்டியது யார்?
போராட்டத்தின் அடுத்த கட்டம் என்ன?
அரசியல் இடைவெளியை ஏற்படுத்தாமல் நிகழ்ச்சித் திட்ட வரையறைகளை உருவாக்கிக்கொண்டு, தாயக விடுதலையை டிப்ளமேட்டிக் அரசியல் ஊடாக அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டும்.
போர் என்ற பாணி இயந்திரத்தை மாற்றி - சர்வதேச அரசியல் சட்டம் ஏற்றுக்கொள்கிற பாணியிலான இயந்திரத்தைக்கொண்டு எங்கள் புதிய வாகனத்தை இயக்க வேண்டும். இதுதான் எங்களின் அடுத்தகட்டப் போராட்டம். !
பிரபாகரன் என்னதான் ஆனார்? கடைசியாக எப்போது நீங்கள் பார்த்தீர்கள்? இறுதிப் போரின் சில சம்பவங்களைச் சொல்ல இயலுமா?
நான் எதைச் சொன்னாலும் அது என்னை, என் இருப்பைக் காட்டிக்கொடுத்துவிடும். ஆனால், இங்கு பேசுவது ஓர் அனாமதேயன் அல்ல என்பதற்காகச் சிலவற்றை மட்டும் சொல்கிறேன். தலைவரைப் பற்றிக் கேட்டீர்கள். அவர் தொடர்பான சில விடயங்களை மட்டும் பகர்கிறேன்.
இறுதிப் போரின்போது ஏப்ரல் முதல் வாரத்தில் புதுக் குடியிருப்பு, இரணைப்பாலைப் பகுதியில் தலைவர் உட்பட பலரும் இருந்தார்கள்.
இராணுவம் நெருங்கிவிட்ட சூழலில் தலைவர் உட்பட சிலரை அந்தப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்த விரும்பினோம்.
பிரிகேடியர்கள் விதுஷா, துர்கா, தீபன், பானு, மணிவண்ணன் உட்பட முக்கிய தளபதிகள் பலரும் தலைவரை அங்கிருந்து முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம், புதுமாத்தளை பகுதிகளுக்குச் செல்லும்படி வற்புறுத்தினோம்.
ஆனால் தலைவர், 'அங்கு செல்ல மாட்டேன். இங்குதான் எனது இறுதிப் போர். ஒருவேளை வீரமரணத்தைத் தழுவினால், இங்கேயே நிகழட்டும்’ என்று உறுதியாக நின்றார்.
இரணைப்பாலையில்தான் தனது இறுதிச் சமரை நிகழ்த்த விரும்பினார்.
ஆயினும், தளபதிகளின் மிக மிக நீண்ட வலிய வற்புறுத்தலுக்குப் பின்பு, அவர் முள்ளிவாய்க்கால் செல்லச் சம்மதித்தார்.
ஆனால், அப்போதும் இரணைப்பாலையில் அவர் மூத்த மகன் சார்லஸை விட்டுவிட்டே முள்ளிவாய்க்காலுக்குச் சென்றார்.
அதன் பின்பு, இரணைப்பாலையில் நடந்த சமரில் 700 பெண் புலிகள் உட்பட 2,000 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டார்கள்.
இந்த சமர்தான் நாங்கள் நடத்திய இறுதியான மரபு வழிச் சமர். அதன் பின்பு நடந்தது அனைத்தும் தற்காப்புச் சமர்களே!
இறுதிப் போர் நடந்தபோது தமிழக மக்கள் ஒருபக்கம் கவலையுற்றாலும், இங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லையே. இன்னமுமா நீங்கள் தமிழக மக்களை நம்புகிறீர்கள்?
ஈழத் தமிழர்களாகிய நாங்கள், தமிழக மக்கள் மீது அசைக்க முடியாத பரிபூரண நம்பிக்கையை எப்போதும் கொண்டிருக்கிறோம்.
எமது விடுதலை, உங்கள் துணை இல்லாமல் சாத்தியம் இல்லை.
இன்னுமா மக்களை நம்புகிறீர்கள் என்று கேட்டீர்கள். ஆம், மக்களை மட்டுமே நம்புகிறோம். அந்த மக்களில்தான் 16 பேர் எங்களுக்காகத் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டார்கள்! என்றார் சாணக்கியன்.

Geen opmerkingen:

Een reactie posten