இந்த ஆண்டில் இலங்கை அரசாங்கம் இரண்டு முக்கியமான வெளியகச் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. இந்த இரண்டு சவால்களுக்குமே அடிப்படைக் காரணமாக இருப்பது ஒன்றுதான். மனித உரிமைகள் தான் அந்தக் காரணம்.
முதலாவது சவால் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடர். இரண்டாவது கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பு நாடுகள் தலைவர்களின் உச்சிமாநாடு.
பொதுநலவாய அமைப்பு தலைவர்களின் உச்சிமாநாடு கொழும்பில் ஆரம்பமாவதற்கு இன்னும் கிட்டத்தட்ட பத்து மாதங்கள் உள்ளன.
அந்த நெருக்கடிக்கு முன்னதாக இலங்கை அரசாங்கம் ஜெனிவா நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளது.
ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு இன்னமும் ஆறு வாரங்களே உள்ளன.
வரும் பெப்ரவரி 25ம் திகதி ஆரம்பமாகும் இந்தக் கூட்டத்தொடர் மார்ச் 22ம் திகதி வரை சுமார் ஒருமாத காலம் இடம்பெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள முக்கிய விவகாரங்களை ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் ஏற்கனவே பட்டியலிட்டுள்ளது.
அதில் இலங்கை தொடர்பான இரண்டு விவகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இலங்கை நிலை பற்றிய ஐநா மனித உரிமைகள் பேரவையினால் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது முதலாவது விவகாரம்.
இது அவ்வளவாக முக்கியமான விவகாரம் அல்ல. கிட்டத்தட்ட சம்பிரதாயபூர்வமாக அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வு இது.
இதைப்பற்றி அரசாங்கம் கவலை கொள்ளவுமில்லை, கவலைப்படப் போவதுமில்லை.
ஐநா மனித உரிமைகள் பேரவையினால் HRC/22/38 என்று இலக்கமிடப்பட்டுள்ள அறிக்கையும் அது பற்றிய நடவடிக்கைகளும் தான் இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கவல்லது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசுக்கு வழங்கப்பட்ட ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகள் குறித்து சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையே இது.
இந்த அறிக்கையை 22வது கூட்டத்தில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையே சமர்ப்பிக்க உள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமையவே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கவுள்ள இந்த அறிக்கை முக்கியமானது.
அவர் தனது அறிக்கையில் இலங்கை குறித்து பாதகமான விடயங்களை சுட்டிக்காட்டினால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஜெனிவாவில் விவாதங்கள் கிளம்பும்.
நவநீதம்பிள்ளையின் அறிக்கை நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கைக்கு வழங்கப்பட்ட ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும்.
இது 19வது கூட்டத்தொடரில் அவருக்கு இடப்பட்டுள்ள பணியாகும்.
அதேவேளை நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அதாவது 19வது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா என்பதையும் அவரது அறிக்கை உள்ளடக்கியதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
எனவே தான் அவரது அறிக்கையை இலங்கை அரசாங்கம் நெருக்கடியான ஒன்றாகப் பார்க்கிறது.
இதனால்தான நவநீதம்பிள்ளையை இலங்கைக்கு அழைத்து நிலைமைகளை நோில் வந்து பார்க்கும்படி அழைப்பு விடுத்தது.
கொழும்பு வந்தால் அவரை சமாதானப்படுத்தி மனித உரிமைகள் விவகாரத்தில் ஒரு சமரச நிலையை எட்டலாம் என்று அரசாங்கம் கணக்குப் போட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆனால் இலங்கை அரசின் பிடிக்குள் அகப்படாமல் நழுவிக்கொண்டே இருக்கிறார் நவநீதம்பிள்ளை. அவருக்கு இலங்கை அரசாங்கம் பலமுறை அழைப்பு விடுத்துவிட்டது. ஆனாலும் அவர் இங்கு வருவதாக இல்லை.
எப்படியும் 22வது கூட்டத்தொடருக்கு முன்பாக இலங்கைக்கு வருவேன் என்று கூறியிருந்தார் நவநீதம்பிள்ளை.
ஆனால் அவரது வருகைக்கான எந்த சமிக்ஞையும் ஜெனிவாவில் இருந்து வெளிவரவில்லை.
நவநீதம்பிள்ளையின் வருகைக்கு முன்னோடியானது என்று கருதப்பட்ட ஐநா மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் குழுவின் பயணம் கடந்த ஆண்டு செப்டம்பரில் இடம்பெற்றிருந்தது.
அந்தக்குழுவின் அறிக்கை இலங்கைக்கு சாதகமாக இல்லாத நிலையில் தான் கொழும்புக்கான பயணத்தை அவர் இழுத்தடிக்க அல்லது கைவிட முடிவு செய்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.
எவ்வாறாயினும் நவநீதம்பிள்ளையின் கொழும்பு வருகையை முன்னர் தேவையற்ற தலையீடாகக் கருதி வந்த அரசாங்கம் இப்போது அதனை தேவைபடும் ஒன்றாக கருதுவதாகத் தெரிகிறது.
ஆனாலும் கொழும்புக்குப் பயணம் பற்றிய எந்தப் பதிலையும் அவர் இதுவரை அரசாங்கத்திற்கு வழங்கவில்லை என்பதை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
நவநீதம்பிள்ளையினால் மட்டும் இலங்கைக்கு ஜெனிவாவில் நெருக்கடி ஏற்படப்போவதில்லை.
ஏனைய உறுப்புநாடுகள் பலவும் இலங்கை விவகாரம் குறித்து பிரச்சினை எழுப்பும் வாய்ப்புகளும் உள்ளன.
அண்மையில் கொழும்பு வந்த கனடடாவின் குடிவரவு மற்றும் பல்கலாசார அமைச்சர் ஜேசன் கென்னி இலங்கையின் மனித உரிமைகள் இன்னமும் மீறப்படுவதாகவும் அரசியல் நல்லிணக்கம் எட்டப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
அடுத்து பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பெகாதநலவாய அமைப்பு பணியக அமைச்சர் அலிஸ்டெயர் போ்ட் இந்த மாத இறுதியில் கொழும்பு வரவுள்ளார்.
கடந்த வாரம் பரித்தானிய நாடாளுமன்றத்தின் வெஸ்ட் மினிஸ்டர் மண்டபத்தில் நடந்த இலங்கை பற்றிய இரண்டு மணிநேர விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய அலிஸ்டெயர் போ்ட் ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் இலங்கை விடயத்தில் பிரித்தானியா கடுமையாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டியிருந்தார்.
பிரித்தானியா, கனடா உள்ளிட்ட நாடுகள் இலங்கை தொடர்பாக ஜெனிவாவில் கடும்போக்கை வெளிப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அமெரிக்காவின் நிலை என்ன என்பது கேள்வியாகவே உள்ளது. கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவந்த நாடு அமெரிக்காதான்.
அப்போது இராஜாங்கத் திணைக்களத்தை வழிநடத்தியது ஹிலாரி கிளின்டன்.
அடுத்த ஜெனிவா கூட்டம் நடைபெறும்போது இராஜாங்கத் திணைக்களத்தை வழிநடத்தப் போவது ஜோன் கெரி.
இலங்கையுடன் ஜோன் கெரி எத்தகைய கொள்கையை கடைப்பிடிக்கப் போகிறார் என்பதைப் பொறுத்தே அது தீர்மானிக்கப்படும்.
அதேவேளை இலங்கை விவகாரத்தை நேரடியாகக் கையாளும் பொறுப்பு ஜோன் கெரியிடமே கொடுக்கப்படுமா அல்லது ஒபாமாவுக்கு நெருக்கமான அணியின் கையிலே அது தொடர்ந்திருக்குமா என்ற கேள்வியும் தொடர்கிறது.
எவ்வாறாயினும் ஜெனிவா என்பது இலங்கைக்கு நெருக்கடியான ஒரு விவகாரமாகவே இருக்கும்.
அதற்கு இன்னொரு காரணம் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகள்.
அவருக்கு எதிரான குற்றவியல் பிரேரணையை அரசியல் ரீதியான பழிவாங்கலாகவே அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா மற்றும்ஐநா போன்றன கருதுகின்றன.
இது ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான சூழலை மேலும் வலுப்படுத்துவதற்கே வழிவிட்டுள்ளது.
தலைமை நீதியரசருக்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெறும் சூழலில், ஜெனிவாவில் நடக்கவுள்ள கூட்டத்தொடருக்கு முன்னதாக, நவநீதம்பிள்ளை கொழும்பு வருவது சாத்தியமற்றது போலவே உள்ளது.
அதேவேளை, கடந்தமுறை போன்று ஜெனிவாவில் இலங்கைக்கு கைகொடுப்பதற்கு சீனா,ரஷ்யா, கியூபா போன்ற நாடுகளும் இல்லை.
இத்தகைய சூழலில், ஜெனிவாவில் இலங்கைக்கு கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம்.
அத்தகைய அழுத்தங்களைத் தவிர்த்துக்கொள்ள இலங்கை அரசாங்கம் விரும்பினாலும், அதற்கு வளைந்து கொடுப்பதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என்பதையும் குறிப்பிட்டேயாக வேண்டும்.
என்னதான் ஐநா மனித உரிமைகள் பேரவை நெருக்கடி கொடுத்தாலும், நடவடிக்கை ஒன்றை எடுக்க வேண்டுமானால், பாதுகாப்புச் சபைக்குத்தானே வரவேண்டும் என்ற நம்பிக்கை அதற்குக் காரணமாக இருக்கலாம்.
பாதுகாப்புச் சபையில் வீட்டோ அதிகாரம் பெற்ற சீனாவும், ரஷ்யாவும் முண்டுகொடுக்கும் வரை ஒரு அளவுக்கு மேல் ஐநாவினால் இலங்கையை மிரட்ட முடியாது என்பதே யதார்த்தம்.
சுபத்ரா
Geen opmerkingen:
Een reactie posten