தடைப்பட்டிருக்கும் இலங்கைஅரசு-தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தினை வகித்துக் கொள்வதற்கான முன்முயற்சியாக பேர்லினில் இரகசிய மாநாடொன்றினை தென்னாபிரிக்கா ஏற்பாடு செய்துவருவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கள அரசின் நலன்களை பேணியாவாறு ஓன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வொன்றினை காணும் நிகழ்ச்சி நிரலுடன் இலங்கை அரச தரப்பு மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை தனித்தனியாக அழைத்து தென்னாபிரிக்கா ஏற்கனவே பேசியிருந்தது.
இந்நிலையில் தனது மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கான புறச்சூழலை ஏற்படுத்தும் ஓர் அங்கமாக புலம்பெயர் தமிழ் அரசியல் தரப்புடனான பேச்சுக்களை தொடங்கியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் Berghof Foundation எனும் ஜேர்மனிய அமைப்பொன்றின் ஊடாக தலைநகர் பேர்லினில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் - உலகத் தமிழர் பேரவை ஆகிய அமைப்புக்களுடன் சந்திப்பொன்றினை நடத்திருந்தது.
இச்சந்திப்பில் சுதந்திர தமிழீழமே ஈழத் தமிழர்களுக்கான நிலையானதும்- நீதியானதுமான அரசியல் தீர்வாக இருக்கும் என்ற நிலைப்பாட்டினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத் தரப்பு பிரதிநிதிகள் வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலைப்பாடானது ஓன்றுபட்ட இலங்கைக்குள்ளான அரசியல் தீர்வு எனும் தென்னாபிரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு நெருக்கடியினை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை தவிர்த்து விட்டு பிற புலம்பெயர் தமிழ் அரசியல் தரப்பினை அழைத்து ஓன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வொன்றினைக் காணும் நிகழ்சி நிரலுக்குள் கொண்டுவருவதற்கான இரகசிய மாநாடொன்றிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் சனவரி 26-27ம் திகதிகளில் பேர்லினில் இந்த இரகசிய மாநாடானது Berghof Foundationஅமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறுகின்றது.
இந்த மாநாட்டின் ஓருங்கிணைப்பாளராக உலகத் தமிழர் பேரவையின் செயற்பாட்டாளர் சுரேன் சுரேந்திரன் அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபை உட்பட வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளில் சிறிலங்கா அரசின் நெருக்கிய நட்புநாடாக தென்னாபிரிக்கா தற்போது செயற்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.
http://news.lankasri.com/show-RUmryBRWNWioz.html
Geen opmerkingen:
Een reactie posten