தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 17 januari 2013

சவுதி அரேபிய மரண தண்டனை நடைமுறையும், ஷரியா சட்டமும்!


] [ பி.பி.சி ]
சவுதியில் இலங்கைப் பணிப்பெண் சிரச்சேதம் செய்யப்பட்டது மரண தண்டனை குறித்தும் ஷரியா சட்ட நடைமுறைகள் குறித்தும் விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.
உலகளவில் குற்றவியல் தண்டனை முறைகளின் நோக்கம் பழி வாங்குதல், அச்சமூட்டி குற்றத்தை தடுத்தல் என்பதைத் தாண்டி – சீர்திருத்துதல், மறு வாய்ப்பளித்தல் என்பதை நோக்கி ஏற்கனவே நகர்ந்து விட்டது. ஆனால் சவுதி அரேபியாவோ ஷரியா என்பது எங்கள் அரசால் உருவாக்கப்பட்டதல்ல அதை மாற்றம் செய்ய முடியாது என வாதிடுகிறது.
ஷரியாவில் தவறேதும் இல்லை, அது குறித்த வெளியுலகப் புரிதலில்தான் தவறு என்று பிபிசியிடம் தெரிவித்தார் ஹாலி மாகாணத்தின் ஆளுனராக இருக்கும் சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் சவுத் பின் அப்துல் மோஷின்.
எழுதப்படாத ஷரியா சட்டத்தை அமுல்படுத்துவதில் இஸ்லாமிய நாடுகளிடையே பெருத்த மாறுபாடுகள் காணப்படுகின்றன.
வரலாற்று ரீதியாக பார்த்தால் கூட இஸ்லாமிய அரசுகள் இச்சட்டத்தை அமுல்படுத்துவதில் சீரற்ற தன்மை இருந்ததாகவே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஷரியாவில் நெகிழ்வுத் தன்மை இருக்கிறது என்கிறார் இலங்கை இஸ்லாமிய பல்கலைக் கழகத்தைச் சார்ந்த எஸ் எச் எம் பலீல்.
ரிசான நபீக்கின் வழக்கைப் பொறுத்தவரை குற்றம் நடந்த சமயத்தில் அவருக்கு 17 வயது எனவே அவரை தண்டிப்பது தவறு என்ற கருத்து மனித உரிமை அமைப்புக்களால் முன்வைக்கப்படுகிறது. ஆனால் இந்த வயது எல்லையை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை என்கிறார் அவர்.
சீனாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் மரண தண்டனைக்குட்படுத்தப்படுகின்றனர். ஆனால் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற விபரத்தை அந்நாடு வெளியிடுவது கிடையாது.
சீனாவைத் தவிர மற்ற நாடுகளில் கடந்த 2010ம் ஆண்டு 527 பேர் மரண தண்டனைக்கு உட்படுத்த்தப்பட்டனர். 2011ம் ஆண்டு இத்தண்டனை 676 ஆக உயர்ந்து விட்டது.
அதிக அளவில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படும் நாடுகள் பட்டியலில் சீனாவுடன், ஈரான், ஈராக், சவுதி அரேபியா, வட கொரியா, சோமாலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இருக்கின்றன.
அதே நேரத்தில் 140க்கும் அதிகமான நாடுகள் மரண தண்டனையை முற்றாக ஒழித்து விட்டன. நாகரீக உலகோடு ஒத்துப் போகும் வகையில் ஷரியா சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்கிறார் அமெரிக்காவில் பணியாற்றும் ஏ ஆர் எம் இம்தியாஸ்.
பிரிட்டிஷ் கனடிய பிரஜையான வில்லியம் சாம்சன் பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் 2001 ம் ஆண்டில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். சவுதி சிறையில் 964 நாட்கள் கழித்த இவர் தனது பாஸ்போர்ட்தான் தனது தலையை காப்பாற்றியது என்று கார்டியன் நாளிதழில் எழுதியுள்ளார்.
அதே போல ஒரினச் சேர்க்கை காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்ட மற்றொருவரும் பிறகு பத்திரமாக பிரிட்டனுக்குத் திரும்பினார்.
சவுதியில் வேலைபுரியும் ஆசிய மற்றும கருப்பின மக்கள் சமூக ரீதியாக மிகவும் கீழான வேலைகளை செய்வதாலும், அவர்கள் வரும் நாடுகளால் இராஜதந்திர ரீதீயாக அழுத்தங்களை செலுத்த முடியாமல் இருப்பதுமே இதற்கு காரண்ம் என்று கூறும் அம்னஸ்டி நிறுவனத்தின் சவுதி ஆய்வாளர் டினா இல் மாமோன், கடுமையான தண்டனைகள் சவுதியில் குற்றங்களை குறைத்து விடவில்லை என்கிறார்.
அதே சமயத்தில் சவுதியில் தூக்கு தண்டனை நிறைவேற்றும் பணியை செய்வோர் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பதாகவே தெரிகிறது. தலையை வெட்டும் பணியை செய்யும் அப்துல்லா சையத் அல் பஷி தான் கடந்த இருபது ஆண்டுகளாக இப்பணியை செய்வதாகவும், இது தனக்கு திருப்தியைத் தருவதாகவும் தொலைக்காட்சி செவ்வியில் கூறியுள்ளார்.
குற்றமும் தண்டனையும்
சவுதியில், கொலை, போதைப் பொருட்களைக் கடத்துவது, தீவிரவாத செயல்களோடு தொடர்பு, திருமணத்துக்கு வெளியிலான உறவு போன்ற பல குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
உலகில் பல நாடுகளில் மரண தண்டனைக்கு எதிரான கருத்தியல்கள் வலுப்பெற்ற போதிலும் இஸ்லாமிய நாடுகளில் காணப்படும் சமூக பொருளாதார சூழல் பிற சமூகங்களில் காணப்படும் முற்போக்கான எண்ணங்களை உள்வாங்கத் தடையாக இருக்கிறது என்கிறார் பேராசிரியர் ஏ ஆர் எம் இம்தியாஸ்.
ஆனால் ஷரியா எக்காலத்துக்கும் ஏற்றது, மாற்றம் செய்ய முடியாதது என்ற வாதத்தை வைக்கிறார் இலங்கையைச் சேர்ந்த ஆதம் பாபா மௌல்வி.
கடந்த 2011ம் ஆண்டில் அரசுகளால் யாரும் கல்லால் அடித்துக் கொல்லப்படவில்லை என்றாலும் ஈரான், வட கொரியா, சவுதி அரேபியா மற்றும் சோமாலியாவில் பொது இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு கணக்கீட்டின் படி சீனாவைத் தவிர பிற நாடுகளில் 18,750 பேர் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர். இவர்களில் எவ்வளவு பேருக்கு நியாயமான நீதிமன்ற நடைமுறைகளில் பங்கேற்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது என்பதே மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பும் கேள்வியாக இருக்கிறது.

Geen opmerkingen:

Een reactie posten