தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 28 januari 2013

அகதிகளே! ஆட்கடத்தல்காரர்களூடாக கனடாவிற்கு வராதீர்கள் – கனடியத் தமிழ் ஊடகவியலாளர்களிடம் ஜேசன் கெனி!!


நேற்று தமிழ்ப் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கனடிய குடிவரவு அமைச்சர் ஜேசன் கெனி சட்டவிரோத கடத்தல்காரர்களால் அகதிகளாகக் கனடாவிற்கு கொண்டுவரப்பட்ட கப்பல்களை பிண்ணனியில் உள்ளடக்கிய தமிழ் பிரசுரங்களை ஊடகவியலாளர்களிற்கு கையளித்து இந்தத் தகவலை மக்களிடம் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.
அமைச்சருக்கு பூரண திருப்தியைத் தராததாக அமைந்த இந்தப் பத்திரிகையாளர் மாநாட்டில் அமைச்சர் தனது கருத்துக்களைத் தெரிவித்து விட்டு விரைவில் செல்லுமளவிற்கு அவரது நிகழ்ச்சி நிரலில் பல் வேறு நிகழ்ச்சிகள் இருந்ததால் அவரிடம் தேவையான கேள்விகளை எழுப்புவதற்கு ஊடகவியலாளர்களால் முடியவில்லை என்ற குறையும் சில ஊடகர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகங்கள் அமைச்சரின் செய்தியை பிரசுரிக்கவில்லையென்பதும் இந்த ஊடக சந்திப்பிற்கான அழைப்பிதல்கள் அமைச்சரின் அலுவலகத்தால் சரியாக கையாளப்படவில்லை என்பதும், இந்த ஊடகவியலாளர் மாநாடு திட்டமிட்டவாறு நடைபெறவில்லையா என்ற ஐயத்தையும் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.
ஆட்கடத்தல்க் காரர்கள் மூலம் கனடா வர விரும்புபவர்களிற்கு நாங்கள் விடுக்கும் காட்டமான செய்தி யாதெனில், தயவு செய்து அப்படியான வழிகளில் கனடா வரும் எண்ணத்தைக் கைவிட்டு விடுங்கள். உங்கள் பணத்தைக் கறக்கும் மேற்படி ஆட்கடத்தல்காரர்கள் உங்களை நட்டாற்றில் விடுகிறார்கள் என்பதையும் கவனத்திலெடுங்கள் என்று அமைச்சர் தெரிவித்தார்.

கனடா அகதிகள் விவகாரத்தில் காருண்யமாகச் செயற்படும் நாடு என்பது உண்மை. அதற்காக அந்த நடைமுறையை ஆட்கடத்தல்காரர்களினுடைய முயற்சிகளினூடாக மீற முயன்றால் நீங்கள் அவர்களிற்குக் கட்டிய காசை இழக்கின்றதைத் தவிர எதுவுமே உங்களிற்கு நடக்கப்போவதில்லை என்று தெரிவித்தார்.
கனடியப் பிரதமர் இந்த ஆட்கடத்தல் முயற்சிகளைத் தடுக்க 12 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளதைக் குறிப்பிட்ட கனடியக் குடிவரவு அமைச்சர் கனடிய உளவுப்பிரிவு மற்றும் பாதுகாப்புப் பிரிவுகள் ஏனைய நாடுகளிலுள்ள அந்த நாடுகளின் பாதுகாப்புத் துறைகளுடன் தகவற் பரிமாற்றத்தில் ஈடுபட்டிக்கின்றன என்பதையும் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten